Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

நல்லுரைக்கோவை (கட்டுரைகள்)
இரண்டாம் பாகம்
உ.வே.சாமிநாதையர் எழுதியது.

nalluraikkOvai - 2
of u.vE cAminAta aiyar
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned image
version of this work for the etext preparation.
This etext has been produced via Distributed Proof-reading Implementation and
we thank the following volunteers for their assistance:
Anbu Jaya, S. Karthikeyan, Maragathamuthu, R. Navaneethakrishnan, Thamizhagazhvan and P. Thulasimani.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2013.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/


நல்லுரைக்கோவை (கட்டுரைகள்)
இரண்டாம் பாகம் : உ.வே.சாமிநாதையர் எழுதியது.


Source:
நல்லுரைக்கோவை (இரண்டாம் பாகம்)

மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி
டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் எழுதியது
உரிமைப்பதிவு, 1958
ஏழாம் பதிப்பு – 1958, விலை ரூ. 1-25
ஸ்ரீ தியாகராச விலாச வெளியீடு
Kabeer Printign Works, Madras.
---------------

முகவுரை


சிலகாலமாக நான் பத்திரிகைகளுக்கு எழுதிவரும் கட்டுரைகளையும், செய்த உபந்யாசங்களையும், கேள்வியால் அறிந்தவற்றையும் தொகுத்துப் புத்தக வடிவத்தில் வெளியிட்டு வருவதைத் தமிழன்பர்கள் அறிந்திருக் கலாம். அவ்வகை வெளியீடுகளுள் 'நல்லுரைக் கோவை'யின் இரண்டாம் பாகமாகிய இதில் பதினான்கு விஷயங்கள் அடங்கியுள்ளன. இவற்றில் என்னுடைய தமிழா ராய்ச்சியினால் அறிந்த செய்திகளும் பல பெரியோர் வாயிலாகக் கேட்ட பல அரிய சரித்திரப் பகுதிகளும் காணப்படும். ஆராய்ச்சி, சரித்திரம், சிறுவரலாறு முதலிய பலவகை விஷயங்களும் சில பயன் கருதி இதில் விரவத் தொகுக்கப்பட்டுள்ளன.

இதிற் கண்டவற்றுள் தமிழ்நாட்டு வணிகர், தொண்டைமான் சத்திரம் என்பவை தனவணிகன் பொங்கல் மலரிலும், பெரிய வைத்தியநாதையரென்பது தினமணி ஆண்டுமலரிலும், இராவுத்தரென்பது தாருல் இஸ்லாம் ஆண்டு மலரிலும், குமரகுருபரரென்பது சுதேச மித்திரனிலும், முத்துசாமி ஐயர் பழமை பாராட்டிய தென்பது ஜயபாரதி ஆண்டுமலரிலும், ராஜ வைத்திய மென்பது ஆனந்தவிகடனிலும் வெளிவந்தவை. தமிழ் வளர்ச்சி யென்பது தமிழன்பர் மகாநாட்டில் யான் செய்த வரவேற்புப் பிரசங்கம். மற்றவை கலைமகளில் வெளி வந்தவை. இவற்றில் இப்போது அங்கங்கே சில சில சிறு மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

இதற்குமுன் வெளிவந்த வசன புத்தகங்களைத் தமிழ் நாட்டார் ஆதரித்து வருவதுபோலவே இதனையும் ஆதரிப்பார்களென்று நம்புகிறேன்.

"தியாகராஜ விலாசம்"         இங்ஙனம்,
திருவேட்டீசுவரன்பேட்டை         வே. சாமிநாதையர்
சென்னை, 20-7-37
--------------------

குறிப்பு

என் தந்தையாராகிய மகா மகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் ஐயரவர்கள் பல பத்திரிகைகள் முதலியவற்றில் எழுதிய கட்டுரை களைக் கொண்டது இந்நூல். இதைப்பற்றிய செய்திகளை அவர்கள் எழுதியுள்ள முகவுரையிற் காணலாம். ஸர்வகலாசாலை யதிகாரிகளும், ஆங் காங்குள்ள கலாசாலைத் தலைவர்களும் அபிமானி களும் இப்புத்தகத்தைத் தங்கள் தங்களுக்குத் தெரிந்த இடங்களில் பரவச் செய்து எனக்கு ஊக்க மளித்துவருவதற்கு அவர்கள்பால் மிக்க நன்றி பாராட்டுகிறேன்.

சென்னை இங்ஙனம்
20-10-46 S. கலியாணசுந்தரையர்
-----------------------------------------------------------



    பொருளடக்கம் பக்கம்
    1. எனது நோக்கம் 1
    2. உடையார்பாளையம் 4
    3. தமிழ்நாட்டு வணிகர் 38
    4. தமிழ் வளர்ச்சி 46
    5. பெரிய வைத்தியநாதையர் 57
    6. கலைகள் 73
    7. நிலவில் மலர்ந்த முல்லை 91
    8. இராவுத்தர் 102
    9. ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர் 110
    10. குமரகுருபரர் 123
    11. முத்துசாமி ஐயர் பழமை பாராட்டியது 130
    12. தொண்டைமான் சத்திரம் 138
    13. தமிழ் நாட்டுப் பெண்பாலார் 143
    14. ராஜ வைத்தியம் 171

உ கணபதி துணை

நல்லுரைக் கோவை (இரண்டாம் பாகம்)

1. * எனது நோக்கம்


*கலைமகள், பவ வருடம் பங்குனி மாதம் (மார்ச்சு, 1935)

'உங்களுடைய நோக்கம் என்ன?' என்று கேட் பது எளிது; அதற்கு உண்மையாக விடையளிப்பது அரிது. 'உங்களுடைய நோக்கத்தைப் பற்றிச் சில வரிகள் எழுதுங்கள்' என்று கலைமகள் ஆசிரியர் விரும் பினார். 'என்னுடைய நோக்கத்தை அறிவதால் உண் டாகும் பயன் என்ன? பெரியோர்களுடைய நோக் கத்தை அறிந்து அதன்படி நடக்க முயன்றால் பயன் உண்டு' என்று எண்ணினேன்; ஆனாலும் அன்பினால் அவர் கேட்டதற்கு ஒருவகையாக விடையளிக்கத் துணிந்து சிலவற்றை எழுதலானேன்.

என்னுடைய வாழ்வின் நோக்கமெல்லாம் பெரும் பாலும் தமிழின் தொடர்புடையதுதான். தமிழ் நூல்களை ஆழ்ந்து பயிலவேண்டும். பல முறை பயின்றால்தான் உண்மை புலப்படும். முதலிலே கடினமாகத் தோற்றி னாலும் பலகால் பயின்றால் வரவரத் தெளிவு உண்டாகும். ஒரு நூலிலுள்ள சொற்சுவை பொருட்சுவைகளை அனு பவித்துப் படிக்கவேண்டும். அவற்றைப் பிறரும் அறியும் வண்ணம் எளிய நடையில் எழுதவும் சொல்லவும் வேண்டும்.

பழைய நூல்களை நன்றாக ஆராய்ந்து உண்மைக் கருத்தை அறியவேண்டும். தெரியாதவற்றைத் தெரிந்தனவாகக் காட்டலாகாது. அந்நூல்களைப் பாதுகாக்க வேண்டும். புதிய கருத்துக்களை அவற்றில் ஏற்றிவிட லாகாது. அவசியமல்லாத கருத்துக்களை மேற்கொண்டு நூலையோ உரையையோ எழுதிப் பிறரை வற்புறுத்தி மகிழச் செய்தல் நலமன்று. பழைய நூல்களிற் சொற் குற்றம் பொருட்குற்றம் இருப்பனவாகத் தோற்றினால் அங்ஙனம் அமைத்ததற்குக் காரணம் என்னவென்று ஆராயவேண்டும். நமக்கு விளங்காததனால் ஒன்றைக் குற்றமென்று துணிந்துவிடுவதால் ஒரு பயனும் இல்லை. நாமே நன்றாக அறிந்துவிட்டோமென்று மதித்து அயலாரைத் தாழ்வாக நினைத்தலும் பேசுதலும் கூடா. பிறர் எழுதியுள்ளவற்றை அவமதியாமல், அவற்றிலுள்ள குணமான பாகங்களை அறிந்து உபயோகிக்க வேண்டும்.

கற்றவர்களிடத்தில் முறையாகப் பாடங் கேட்க வேண்டும். கேட்டவற்றைச் சிந்தித்து முறையாகப் பாடம் சொல்லவேண்டும். அதைவிடப் பெரிய உபகாரம் வேறு இல்லை. எப்பொழுதும் படித்துக் கொண்டே இருக்கவேண்டும்.

முன்னோர் ஒழுகிவந்த முறையைப் பெரும்பாலும் பின்பற்றுதலே மன ஒருமைக்கு வழியாகும். புதுக் கொள்கைகள், புதிய மதங்கள், புதிய தெய்வ வழிபாடு முதலியவற்றை ஆராய்ச்சியின்றி மேற்கொண்டால் அவை நம் மன இயல்போடு பொருந்துவதற்குப் பல காலம் செல்லும்; ஜனங்களிடையே ஒற்றுமையும் கடைப்பிடியும் தவறிவிடும். பிற மதங்களையும் தெய்வங் களையும் வேறு பாஷையிலுள்ள அரிய செய்திகளையும் அறிந்து வைத்தல் அறிவை விரிவுறச் செய்யும்.

எந்தச் சமயத்தாரோடும் எந்தத் தேசத்தாரோடும் சகோதர பாவத்துடன் ஒற்றுமையாயிருந்து காலங் கழிக்க வேண்டும்.

மேற்கொண்ட காரியத்தைச் சிறிது சிறிதாகப் பலநாள் ஆராய்ந்து ஆராய்ந்து திருத்தமாக நிறை வேற்றவேண்டும். முயற்சியிடையே யாரேனும் அவ மதித்தால் அதனைப் பொருட்படுத்தாமல் காரியத்தைச் செய்துவர வேண்டும். நம்முடைய மனமறிய நற் காரியத்தை மேற்கொண்டு கடமையைச் செய்துவந்தால் இறைவன் அருளால் முடிவில் நன்மையே கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. செய்யும் காரியத்தைப் பயனால் தெரிவிக்கவேண்டுமே யன்றித் தொடங்கியது முதல், 'இப்படிச் செய்தேன்; அப்படிச் செய்தேன்' என்று தாமே பாராட்டிப் பேசுதல் உயர்வன்று.

பிறர் செய்த குற்றத்தை மறந்துவிடுதலும் பல ரிடையே எடுத்துக் கூறாமையும் நன்மை பயக்கும். சிறு உதவி செய்தோரையும் மறவாமல் என்றும் நன்றி பாராட்டுதலினின்றும் தவறலாகாது. மனிதனை மனித னாகச் செய்வது நன்றி யறிவேயாகும். முதியவர்கள் படியாதவர்களாயினும் அவர்க ளுடைய பழக்கம் நன்மைகளை உண்டாக்கும். திருவா வடுதுறை ஆதீனகர்த்தராக விளங்கிய மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்கள் இதனை அடிக்கடி வற்புறுத்திக் கூறுவார்கள்.

நன்மையும் தீமையும் கடவுளால் நம் வினைக்கேற்ப அமைந்தனவென்று எண்ணவேண்டும். ஆதலின் தீமை செய்தாரென்று நெஞ்சிற் பகையுற்று யாரையும் கடிதல் ஆகாது. தெய்வம் நன்மையையே உண்டாக்கும் என்ற நம்பிக்கை உறுதிப்படவேண்டும். அது பலவிதமான இடையூறுகளை எளிதில் வெல்லக் கூடிய வன்மையை அளிக்கும்.

பெரியோர் வாயிலாகவும் அனுபவத்தினாலும் அமைந்த நோக்கங்கள் பலவற்றுள் இவை சில. இவற்றின்படி நடக்கவே நான் முயன்று வருகிறேன்.

    "இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
    துன்பந் துடைத்தூன்றுந் தூண்"



2. * உடையார்பாளையம்


* உடையார்பாளையம் அரண்மனையிலிருந்து கிடைத்த 'உடையார்பாளையம் ஜமீன் சரித்திரம்', 'பயரணீச்சுரத்தல புராணம்', 'தனிப்பாடல்கள்' முதலியவற்றிலுள்ள செய்தி களையும், இளமை தொடங்கிப் பெரியோர்கள்பால் நான் கேட்டு வந்த செய்திகளையும் ஆதாரமாகக்கொண்டு இவ்வரலாறு எழுதப்பட்டது.

தமிழ் நாட்டில் உள்ள பழைய ஜமீன்களுள் உடையார்பாளையம் ஒன்று. வீரத்திற்கும் தியாகத் திற்கும் கல்விக்கும் பெயர்பெற்ற பல ஜமீன்தாரர்கள் இதனை ஆண்டு இதற்கு நற்புகழை நாட்டி யிருக்கிறார் கள். இதன் அதிபர்களாகிய 'காலாட்கள் தோழ உடையார்கள்' தங்கள் படைகளுடன் தங்கிய இட மாதலின் இதற்கு உடையார்பாளையம் என்னும் பெயர் உண்டாயிற்று.

தலவரலாறு

இவ்வூருக்குப் பத்ராரண்யம்,முற்கபுரி முதலிய பல பெயர்கள் உண்டு. இங்கே உள்ள சிவாலயம் மிகவும் பழமையானது. ஸ்வாமியின் திருநாமம் வடமொழியில் முற்கபுரீசரெனவும் தமிழில் பயறணி நாதரெனவும் வழங் கும். அம்பிகையின் திருநாமம் நறுமலர்ப் பூங்குழல் நாயகி யென்பது; ஸுகந்த குந்தளாம்பிகை யென்பது வடமொழிநாமம்.

மலைநாட்டின்கண் திவாகரபுரமென்னும் ஊரிலிருந்த வணிகனொருவன் சோழநாட்டிலும் பிறநாட்டிலும் மிளகு பொதிகளைப் பல மாடுகளின்மேல் ஏற்றிக்கொணர்ந்து வியாபாரம் செய்து வந்தான். ஒரு சமயம் இவ்வூர் வழியாக விருத்தாசலத்திற்குப் போனான். அப்பொழுது இவ்வூரில் ஒரு சுங்கச்சாவடி இருந்தது.
மிளகிற்கு வரி அதிகமாக வாங்குவது வழக்கம். அதனை அறிந்த வணிகன் சுங்க அதிகாரிகளிடம் 'பொதிமூட்டையி லிருப்பது பயறு' என்று பொய் கூறி, அதற்குரிய சிறிதளவு வரியை மட்டும் கொடுத்துவிட்டுச் சென்றான். அதிகாரிகள் மூட்டையைச் சோதிக்கவில்லை. விருத்தாசலம் சென்று பொதியை அவிழ்க்கும்போது எல்லாம் பயறாக இருந்தன. அதிக விலைபெற்ற மிளகெல் லாம் குறைந்த விலையுள்ள பயறாக மாறியதனால் வணிகன் வருந்தினான். 'இது நாம் பொய் சொன்னதற் காக இறைவன் செய்த தண்டனை போலும்' என்றெண் ணிப் பழமலை நாதர் முன்னிலையிலே போய் முறை யிட்டான். அப்போது "கெட்ட இடத்தில் தேடவேண் டும்" என்று ஓர் அசரீரிவாக்கு உண்டாயிற்று. உடனே அவ்வணிகன் இந்தத் தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டுப் பிரார்த்தித்தான். இறைவனருளால் பயறெல்லாம் மீண்டும் மிளகாயின.

மிளகைப் பயறாகச் செய்த காரணம்பற்றிச் சிவபிரா னுக்குப் பயறணி நாதர் என்னும் திருநாமமும் இவ்வூருக் குப் பயறணீச்சுரம், முற்கபுரி என்னும் திருநாமங்களும் உண்டாயின. இத்தலத்தை என்னுடைய ஆசிரியராகிய மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தாம் இயற்றிய மாயூர புராணத்தில்,

    "மன்னன்முதல் வானரெல்லாம் வந்துதொழ வரங்கொடுத்து
    முன்னவனெக் காலுமமர் முற்கபுரம்"
    (திருநாட்டுப் படலம்,58)

என்று பாராட்டியிருக்கிறார்கள்.

தமிழில் ஒரு புராணமும் அம்பிகை விஷயமாக ஒரு மாலையும் இத்தலத்திற்கு உண்டு.

இங்கே காண்டீபதீர்த்தம் என்ற ஒரு பெரிய தீர்த் தம் இருக்கின்றது. அத்தீர்த்தம் அருச்சுனனுடைய காண்டீபத்தால் உண்டாக்கப்பட்டதென்பர்; அருச்சுன னுக்குக் காண்டீபத்தை வளைத்துக் கொடுத்தருளினமை யின் இத்தலத்து விநாயகருக்கு வில்வளைத்த பிள்ளையா ரென்னும் திருநாமம் உண்டாயிற்று. அதற்கு அறிகுறியாக அம்மூர்த்தியின் திருக்கரத்தில் இப்பொழுதும் ஒரு வில் இருக்கின்றது. காண்டீப தீர்த்தத்தின் தென் கரையில் திருவாவடுதுறை யாதீனத்துக்குரிய ஒரு மடமும் வடகரையில் தருமபுர ஆதீனத்திற்குரிய மடம் ஒன்றும் இருக்கின்றன. இன்னும் பல மடங்கள் இத் தீர்த்தத்தைச் சுற்றி இருந்திருக்க வேண்டுமென்று தோற்றுகின்றது.

இவ்வூரில் விஷ்ணுவாலயம் ஒன்று உண்டு; அதில் பிரசன்ன வேங்கடேசப் பெருமாளென்னும் திருநாமத் துடன் திருமால் எழுந்தருளியிருக்கிறார். பிறநாட்டார் தமிழ் நாட்டுக்கு வந்து போர் புரிந்த 'கலாப' காலத் தில் இங்கே இருந்த ஜமீந்தார்களுடைய பாதுகாவலில் பிற தலங்களிலிருந்து மூர்த்திகள் கொணர்ந்து வைக்கப் பட்டன; அப்போது அம்மூர்த்திகள் எழுந்தருளி யிருப் பதற்கு அமைக்கப்பட்ட மண்டபங்கள் இன்னும் அவ் வம்மூர்த்திகளின் பெயராலேயே வழங்கி வருகின்றன.

ஜமீந்தார்கள்

உடையார்பாளையம் ஜமீந்தார்கள் கச்சியென்னும் அடைமொழியையுடைய பெயரையும் காலாட்கள் தோழ உடையாரென்னும் பட்டப் பெயரையும் உடையவர்கள். இவர்களுடைய முன்னோர்கள் காஞ்சிபுரத்தில் பாளையக் காரர்களாக இருந்தவர்களாதலின் கச்சி என்னும் அடை மொழி இவர்களுடைய பெயர்களுக்குமுன் சேர்த்து வழங்கப்படுகிறது. பல வீரர்களுக்குத் தலைவர்களாகிய விஜயநகரத் தரசர்களுக்கும் மற்றவர்களுக்கும் போரில் துணைபுரிந்து வந்தவர்களாதலின் 'காலாட்கள் தோழ உடையார்' என்னும் பட்டப் பெயர் இவர்களுக்கு ஏற் பட்டது. இது காலாட்களுக்குத் தோழராகிய உடையா ரென விரியும். இத்தொடர், 'காலாக்கித் தோழ உடை யார்', 'காலாக்கித் தொழ உடையார்' என்று பலவாறாக மருவி வணங்கும்.

பள்ளிகொண்ட ரங்கப்ப உடையார்

விஜய நகரத்தில் அரசாட்சி செய்த வீர நரசிம்ம ராயரென்னும் அரசருடைய காலத்தில் காஞ்சீபுரத்தில் இருந்து பாளையக்காரராகப் பள்ளிகொண்ட ரங்கப்ப உடையார் என்பவர் ஆண்டுவந்தார். விஜயநகரத்தரச ரின் ஆட்சிக்குட்பட்ட செஞ்சியில் அப்பொழுது அவ் வரசருடைய பிரதிநிதியாக ஆண்டுவந்த உதயகிரி ராமபத்திரநாயக்க ரென்பவருக்குப் பள்ளிகொண்ட ரங்கப்ப உடையார் பல வகையில் உதவி புரிந்தார். வடநாட்டிலிருந்து போர் புரியவந்த பரீத்ஷா என்னும் முகம்மதிய அரசரோடு நடந்த போரில் விஜய நகரத் தரசருடைய சார்பில் இருந்து படைத்தலைமை தாங்கி வெற்றிபெற்றார். அதனால் விஜய நகரத்தரசர் மகிழ்ந்து அவருக்குப் பல விருதுகளையும் ஊர்களையும் வழங்கி னார்; பன்னிரண்டு யானைகளையும், இருநூறு குதிரை களையும், ஐயாயிரம் போர்வீரர்களையும் அளித்தார். அவர் பெற்ற பட்டங்களில் 'காஞ்சிபுராதிபாலன்' என் பது ஒன்று. உடையார் பின்னும் பல வகையில் விஜய நகரத்தரசருக்கு உதவி செய்து பலவகை ஊதியங் களைப் பெற்றார். காஞ்சீபுரத்தில் தம்முடைய உறவின ரொருவரை வைத்துவிட்டுப் புதிதாக அரசுகுடி என்னும் ஓரூரை உண்டாக்கி அதில் இருந்து ஆண்டு வந்தார்.

சின்ன நல்லப்ப உடையார்

பள்ளிகொண்ட ரங்கப்ப உடையாருக்குப் பின் அவ ருடைய மூத்த குமாரர் பெரிய நல்லப்ப உடையார் பாளையக்காரரானார்; அவருக்குப் பிறகு அவர் தம்பி யான சின்ன நல்லப்பக்காலாட்கள் தோழ உடையார் தலைவரானார். அவர் சிதம்பரம் ஸ்ரீ நடராஜப் பெரு மான்பால் இடையறாத அன்பு பூண்டவர்; பலவகை யான தருமங்கள் புரிந்தவர்; தமிழ் இலக்கண இலக்கியங்களில் நல்ல பயிற்சி உடையவர்; சிதம்பரத்தில் இருந்த குருநமச்சிவாய ரென்னும் பெரியோரிடம் உப தேசம் பெற்றவர். குருநமச்சிவாயருக்கு அவரிடம் பேரருள் இருந்து வந்தது.

    (வெண்பா)
    "எல்லாச் சிறப்பும் இனிதாப் பொருந்துகின்ற
    நல்லா னெனப்பெயர்கொள் நாயகமே –
    சல்லாப இந்திரன்போல் மிக்கசெல்வம் இத்தரணி மீதிலுற்றுச்
    சந்ததமும் வாழ்குவைநீ தான்"

    'நல்லா னெனச்சொல்லும் நாயகசி ரோமணியே
    தில்லைக் கடவுள் திருவருளால் - எல்லவரும்
    மெச்ச வளர்செல்வம் மேன்மேலு மேயடைந்தே
    இச்சையுடன் வாழ்ந்துண் டிரு"

    "பாவி லருந்தமிழைப் பாராட்டி யெப்பொழுதும்
    மேவு சிவபூசை வேளையினும் - தாவுபிறப்
    பில்லாத பொற்சபையில் ஈசனையும் கச்சிவரு
    நல்லா னையுமறவேன் நான்"

என்ற குருநமச்சிவாயர் பாடல்களால் சின்ன நல்லப்ப உடையாருடைய இயல்பும் அவர்பால் குருநமச்சிவாய ருக்கு இருந்த அருளும் விளங்கும். சின்ன நல்லப்ப உடையாரும் தம் குருவைப் பாராட்டிய செய்யுட்கள் பல; அவற்றுள் இரண்டு வருமாறு.

    (வெண்பா)
    (1) "நன்னூலுங் காரிகையும் நன்றாந் திவாகரமும்
    பன்னூலும் ஆராய்ந்து பார்ப்பதேன் – எந்நூலும்
    கொண்டாடும் தில்லைக் குருநமச்சி வாயர்முகம்
    கண்டாலும் உண்டே கதி"

    (2) "கீதம் பரதங் கிளருங் கலைஞானம்
    வேதம் பரிமளிக்க வீசுமே – சீதக்
    கொழுந்திருக்கும் தில்லைக் குருநமச்சி வாயர்
    தழைந்திருக்கு மாத்தானாந் தான்."

நடராஜப் பெருமானுடைய திருத்தொண்டில் ஈடு பட்ட சின்ன நல்லப்ப உடையார் அம்மூர்த்தியை மன முருகித் துதித்த செய்யுட்கள் பல. அவற்றுள் ஒன்று வருமாறு:

    (வெண்பா)
    * "அம்பலவா பின்னொருகால் ஆடினாற் றாழ்வாமோ
    உம்பரெல்லாங் கண்டதெனக் கொப்பாமோ- சம்புவே
    வெற்றிப் பதஞ்சலிக்கும் வெம்புலிக்கும் தித்தியென
    ஒன்றிப் பதஞ்சலிக்கு மோ."

அங்ஙனம் அவர் இயற்றிய செய்யுட்கள் மிகச் சிறந்தன வாகப் பாராட்டப்பட்டு வந்தன வென்பது,

*இச்செய்யுள் சொக்கநாதப் புலவரென்பாரொருவர் பாடிய தாகத் தனிப்பாடற்றிரட்டிற் காணப்படுகின்றது.

    (வெண்பா)
    "சேவிலுய ரம்பலவர் சேவடிக்குச் செந்தமிழாப்
    பாவிலுயர் பூணாப் பலித்தவே – வாவிதொறும்
    சேலாக்கள் மேலிடறுந் தென்கச்சிச் சின்னநல்ல
    காலாட்கள் தோழன் கவி"

என்பதனாற் புலப்படும்.

அவர் காலாட்கள்தோழபுரம் என்னும் ஓர் அக்கிர காரத்தை நிறுவினார்.

நல்ல ஞானியாதலின் அவர் க்ஷேத்திர யாத்திரை செய்துவர வேண்டுமென்னும் அவா உடையவரானார். சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராஜ மூர்த்தியைத் தரிசித்துத் தம் குருவை வணங்கி விடைபெற்றுப் புறப்பட்டார். வேதாரணியம் போக எண்ணிச் செல்லுகையில் இடையில் ஒரு சிறு சிவாலயத்தையும் அதனருகில் ஒரு தடாகத் தையும் கண்டார். அன்று மாலையில் சிவதரிசனம் செய்துவிட்டு இரவில் அங்கேயே தங்கினார். அவர் உறங்குகையில் அவருடைய கனவில் சிவபெருமான் ஒரு பெரியவராக எழுந்தருளி அந்த இடத்தை இராசதானியாக்கிக்கொண்டால் மேன்மேலும் எல்லா நலங்களும் வளருமென்று கட்டளையிட்டார்.

விடியற்காலையில் எழுந்த சின்ன நல்லப்ப உடை யார் சிவபிரானது கருணைத் திறத்தை நினைந்து உள்ளங் குழைந்து போற்றினார். ஆலயத்துக்கு அருகில் வசித் திருந்தவர்களிடமிருந்து அவ்வாலயம் முற்கபுரீசருடைய தென்றும் அத்தீர்த்தம் காண்டீப தீர்த்தமென்றும் அறிந் தார்; பின்னும் தலமகிமையை நன்றாகத் தெரிந்து கொண்டார். சிவபிரானுடைய கட்டளைப்படி அவ்வூரில் பெரிய அரண்மனையைக் கட்டுவித்துத் தமக்குரிய படை களை அங்கே வருவித்தனர். தமக்கு எல்லா நலங்களை யும் தருவது சிவபிரான் திருவருளே என எண்ணி முற்க புரீசர் ஆலயத்தையும் விரிவுற இயற்றுவித்துப் பல வீதி களையும் நிருமித்து நித்திய நைமித்திகங்கள் சிறப்புற நடக்கும்படி நிவந்தம் அமைத்தனர். அவர் அமைத்துக் கொண்ட அவ்விராசதானியே இந்த உடையார்பாளைய மாகும்.

முற்கபுரியென்னும் பெயரால் வழங்கிவந்த இத்தலம் சின்ன நல்லப்ப உடையார் இராசதானியாக்கிக் கொண்ட பின்பு உடையார்பாளையம் என வழங்கிவரலாயிற்று. அறநெறியும் தவநெறியும் வழாமல் அரசு புரிந்துவந்த அவர் அளவிறந்த தருமங்கள் செய்தனர். குரு நமச்சி வாயருடைய கட்டளையின்படி சிதம்பரம் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு உச்சிக்காலக்கட்டளை நன்றாக நடை பெறும் வண்ணம் இளங்கம்பூரென்னும் கிராமத்தை மானியமாக அளித்தனர்; இச்செய்தி,

    (எண்சீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்)
    "தென்னருணை மருவருகை நமச்சி வாய
            தேவனருள் குருநமச்சி வாய தேவன்
    மன்னுபுகழ்ப் புலியூரம் பலத்தில் வாழும்
            வள்ளலுச்சிக் காலக்கட் டளைக்கு வாய்ப்ப
    இந்நிலமெ லாம்புகழு மரசூர்ப் பற்றின்
            இளங்கம்பூர்ச் சாதனக்கல் எழுதி நாட்டி
    நன்னெறிசேர் காலாட்கள் தோழன் சின்ன
            நல்லானென் றிடுதுரையே நடாத்தி னானே"

என்னும் செய்யுளாற் புலப்படும். அவருடைய உருவம் சிதம்பரம் குருநமச்சிவாயர் மடத்தைச் சார்ந்த தடா கத்தின் கரையிலே சிலையில் அமைக்கப்பட்டிருக்கின்றது. இறைவனிடம் இடையீடில்லாத அன்பும், மெய்யுணர்வும், கொடைவளமும், தமிழறிவும் வாய்ந்த இந்தச் சின்ன நல்லப்ப உடையாரே உடையார்பாளையம் சமஸ்தா னத்தை நிறுவியவர்; பலவகையிலும் அவர் சிறப்புற்று வாழ்ந்து வந்தார்.

பின் வந்தவர்கள்.

அவருக்குப் பின்பு பல ஜமீந்தார்கள் ஆண்டு வந் தனர். அவர்கள் உடையார்பாளையத்தைச் சூழ்ந்துள்ள காடுகளை யெல்லாம் அழித்து வளப்படுத்தினர். அதனால் அவர்களுக்கு அதிகமான வருவாய்கள் கிடைத்தன. உடையார்பாளையத்தையும் அவர்கள் நன்னகராக அமைத்தனர்; புலவர்களையும் தம்பால் அடைக்கலம் புகுந்தோரையும் ஆதரித்தனர்; பலவகையான அறங் களைச் செய்தனர்; சிவ விஷ்ணு ஆலயங்கள் பலவற் றைப் புதுப்பித்து அங்கங்கே பல திருப்பணிகள் செய் வித்துக் கட்டளைகளும் நடைபெறச் செய்தனர். அஞ்சி னாருக்கு அடைக்கலத் தானமாகவும் வித்துவான்களுக் குத் தாய்வீடாகவும் வீரர்களுக்கு இருப்பிடமாகவும் உடையார்பாளையம் விளங்கி வந்தது.

மன்னார்குடி, ஸ்ரீ முஷ்ணம், திருப்பனந்தாள், கங்கை கொண்ட சோழபுரம், குருகை காவலப்பன் கோயில் முதலிய பல தலங்களில் பலவகைத் திருப்பணி கள் அவர்களாற் செய்விக்கப்பட்டன. கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சிவாலயத்தில் ஒரு சிங்கக்கிணறு இருக்கிறது. அதிலுள்ள ஒரு சிறு கல்லில், 'காலாட்கள் தோழ உடையார் தர்மம்" என்று வரையப்பட்டிருக்கிறது.

வேங்கடப்ப உடையா ரென்பவர் காலத்தில் இங்கே நாணயங்கள் அடிக்கப்பட்டு 'உடையார்பாளையம் புதுப்பணம்' என்று வழங்கிவந்தன. இப்பொழுதுகூட உடையார்பாளையத்தில் அந்நாணயங்களும் வேறு சில பழைய நாணயங்களும் அகப்படுகின்றான.

நல்லப்ப உடையார்

நல்லப்ப உடையாரென்னும் ஜமீந்தார் அடைக் கலங் கொடுத்துப் பல அரசர்களைப் பாதுகாத்து வந்தார். அவர் காலத்திலேதான் முகம்மதிய அரசர்களின் படை யெழுச்சியினால் காஞ்சீபுரத்திலுள்ள ஸ்ரீ ஏகாம்பரேசு வரர் ஸ்ரீ காமாட்சியம்பிகை ஸ்ரீ வரதராஜர் முதலியவர் களின் உத்ஸவ மூர்த்திகள் உடையார்பாளையத்திற்கு எழுந்தருளுவிக்கப் பெற்றன. பிறதலங்களிலிருந்து கொணரப்பட்ட மூர்த்திகளுக்கு ஒரு குறைவுமின்றி நித் திய நைமித்திகங்கள் ஜமீந்தாரால் நடத்துவிக்கப்பெற் றன. அக்காலத்தில் உடையார்பாளையமே காஞ்சீபுரமாக விளங்கிவந்தது. உடையார்பாளையத்திற்குச் சென்றால் அச்சமின்றி இருக்கலாமென்ற நம்பிக்கை யாவருக்கும் இருந்துவந்தது. புலவர்களெல்லாம் நல்லப்ப உடை யாரைப் பாமாலை சூட்டிப் புகழ்ந்தனர். அவர் அக் காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கு உதவிபுரிந்து அவர்களிடமிருந்து யானைகளும் சில கிராமங்களையும் பெற்றனர்.

ரங்கப்ப உடையார்

ரங்கப்ப உடையாரென்னும் ஒருவர் ஷோடச (பதி னாறு) மகாதானங்கள் செய்தார். அதற்கு மூன்று லக்ஷம் பொன் செலவாயின. அவர் வடமொழியிலும் தென்மொழியிலும் நல்ல பயிற்சி உடையவர்; ஞான நூல்களை நன்கு பயின்றவர்; சீலம் நிரம்பியவர்; தூய வாழ் வினர்; தவ ஒழுக்கமுடையவர். அவரை இருமொழிப் புலவர்களும் பலபடப் பாராட்டிப் புகழ்ந்திருக்கின்றனர். அவர் பற்றற்ற மனம் உடையராகி எப்பொழுதும் துறவி யைப் போன்ற நிலையையே மேற்கொண்டு விளங்கினார். அதனால் அவரை யாவரும் 'ராஜரிஷி' என்று அழைத்து வந்தனர். அவர் காலத்தில் உடையார் பாளையம் ஞான பூமியாக விளங்கிற்று. அவர் ஆண்டு வருகையில் சாலிவாகன சகவருஷம் 1632 (கி.பி.1709)- இல் காஞ்சீ புரத்திலிருந்து எழுந்தருளியிருந்த மூர்த்திகளுள் ஸ்ரீ ஏகாம்பரேசுவரரும் ஸ்ரீ வரதராஜப் பெருமாளும் மீண் டும் காஞ்சீபுரத்திற்கே கொண்டு போகப் பட்டனர். காமாட்சியம்பிகையின் ஸ்வர்ண விக்கிரகம் மட்டும் இவ் வூரிலேயே இருந்ததாகத் தெரியவருகிறது. அவர் ஸ்ரீ முஷ்ணம் பூவராகப் பெருமாள் கோயிலில் ஆஸ்தான மண்டபமும் கல்யாண மண்டபமும் கட்டுவித்தார்; பூஜை முதலியவற்றிற்காகச் சில கிராமங்களை மானிய மாக அளித்தார். சில சிவாலயங்களில் திருப்பணிகளைச் செய்வித்து இறையிலி நிலங்களையும் கிராமங்களையும் வழங்கினார்.

ஜனக மகாராஜரைப் போல அரசாட்சி மிகவும் செவ்வையாக நடைபெறும்படி செய்து உள்ளத்தே பற்றில்லாமல் வாழ்ந்து வந்தாலும் ரங்கப்பக் காலாட் கள் தோழ உடையாருக்கு எல்லா வியவகாரங்களையும் விட்டுவிட்டு நற்கதியை அடையவேண்டுமென்னும் பெரு விருப்பம் உண்டாயிற்று. அவருடைய குமாரராகிய யுவரங்கப்ப உடையார் 'மகனறிவு தந்தையறிவு' என் பதற்கேற்ப இளமையிலேயே அறிவும் அன்பும் சீலமும் உடையவராக விளங்கினார். அதனை யறிந்த ரங்கப்ப உடையார் மகிழ்ந்து அவருக்கே தம்முடைய பட்டத்தை யளித்து அரசியற்பாரத்தை அவரிடம் கொடுத்துவிட்டு இறைவன் திருவடிக்கண் உள்ளத்தை ஒடுக்கி தவம் செய்யலானார்.

யுவரங்க பூபதி

எந்தக் காலத்திலும் வித்துவான்களுடைய சமூகத் தில் அடிக்கடி புகழப்படும் உபகாரிகள் சிலர் உண்டு. தமிழ்நாட்டில் எத்தனையோ அரசர்களும் பிரபுக்களும் பிறரும் புலவர்களை ஆதரித்து வந்திருக்கின்றார்கள். அவர்களெல்லோருடைய புகழும் பரவி யிருந்தாலும் சில ருடைய புகழ்களே பல சமயங்களில் சபைகளில் எடுத் துப் பாராட்டிச் சொல்லப்படுகின்றன.

அத்தகைய பெருமை வாய்ந்தவர்களுள் யுவரங்க பூபதியும் ஒருவர். "யுவரங்கன் இப்படிச் செய்தான். யுவரங்கன் செய்ததைக் கேட்டீர்களா?" என்று வித்து வான்கள் சந்தோஷத்துடன் தம்முள் சொல்லிக்கொள் ளும் வரலாறுகள் பல உண்டு. அவருடைய அருமைச் செயல்கள் இன்றளவும் பலராலும் சொல்லப் படுகின்றன. அவரினும் பெரிய செல்வ நிலையில் இருந்தவர்களைப் பற்றிச் சொல்லும்பொழுதுகூட அவரை உவமையாக எடுத்துக் கூறுவதை வித்துவான்கள்பாற் கேட்கலாம்.

உடையார் பாளையத்தில் இருந்த ஜமீந்தார்களுள் யுவரங்கருடைய புகழ் மற்ற எல்லோருடைய புகழிலும் மேற்பட்டு விளங்குகின்றது.

    "மன்புகழ் பெருமை நுங்கள்
            மரபினோர் புகழ்கள் எல்லாம்
    உன்புகழ் ஆக்கிக் கொண்டாய்
            உயர்குணத் துரவுத் தோளாய்"

என்று பரதனைப்பற்றிக் குகன் கூறியதாகக் கம்பர் சொல்லியிருப்பது யுவரங்கருடைய விஷயத்திலும் பொருத்தமுடையதென்று தோற்றுகின்றது.

ரங்கப்பர் என்பது அவருடைய இயற்பெயர்; தம் முடைய தந்தையார் காலத்திலேயே ஜமீன் ஆட்சியைப் பெற்று யுவராஜாவாக இருந்தவராதலின் அவர் 'யுவ ரங்கப்பக் காலாட்கள் தோழ உடையார்' என்று வழங் கப்பட்டார். அவர் பதினெட்டு வருஷங்களே ஆட்சி செய்தனர்.

அருங்கலை வினோதராகிய அவர் தமிழிற் புலமை யுடையவராக இருந்தார். வடமொழியிலும் அவருக்குப் பயிற்சி இருந்தது. சங்கீதத்தில் மிக்க பழக்கம் அவருக்கு உண்டென்பது தெரியவருகிறது. எப்பொழுதும் வித்துவான்களுக்கு இடையில் இருந்து இன்புறுவதையே பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார். அக்காலத்தில் இருந்த வடமொழி தென்மொழி வித்துவான்களிற் பெரும் பான்மையோரும் சங்கீத வித்துவான்களிற் பலரும் யுவரங்கர்பால் வந்து வந்து தம்முடைய கலைத்திறத்தைக் காட்டிப் பரிசு பெற்றுச் செல்லுதலை ஒரு நன்மதிப்பாக நினைத்து வந்தனர்.

வித்துவான்கள் உடையார் பாளையத்திற்கு வந்தால் யுவரங்கருடைய உத்தரவுப்படி அரண்மனை உத்தியோ கஸ்தர்கள் அவர்களை உபசரித்து அவர்கள் தங்குவதற் குரிய இடங்களை அமைத்துக் கொடுப்பார்கள். அவர் களுக்கு வேண்டிய பொருள்கள் அவ்வவ்விடங்களில் அமைக்கப்படும். வேலையாட்கள் அவர்களுடைய விருப் பத்தின்படி எந்தச் சமயத்தில் எது வேண்டுமோ அதைச் செய்யும்பொருட்டு அவ்வவ்விடங்களில் காத் திருப்பார்கள். வித்துவான்கள் சந்தோஷமாக இருக் கும்பொழுது யுவரங்கர் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வலிய வந்து கண்டு சல்லாபம் செய்துவிட்டுப் போவார். இங்ஙனம் வந்து பழகும் இயல்பு யுவரங்கருரக்கு ஒரு தனிப்புகழை உண்டாக்கியது. தங்கள் வித்தையை அறிந்து அளிக்கும் பரிசு சிறிதாயினும் சிறந்ததாகக் கொள்வது வித்துவான்களின் இயல்பு; ஆதலின் யுவரங் கருடைய வரிசை யறியும் திறனை அறிந்த வித்துவான்கள் அவரிடம் பெறும் பரிசுகளை மிகவும் சிறந்தனவாகவே மதித்து வந்தனர்.

கோபால சாஸ்திரிகள்

வடமொழி வித்துவான்களிற் பலர் யுவரங்கரைப் பல வகையாகப் புகழ்ந்திருக்கின்றனர். கோபால சாஸ்திரி கள் என்ற சிறந்த வித்துவான் ஒருவர் அவருடைய ஆஸ்தான பண்டிதராக இருந்தார். அவருடைய கவிகள் மிகவும் இனிமை யுடையனவாக இருக்கும். 'அபிநவ காளிதாஸர்' என்னும் பட்டம் அவருக்கு யுவரங்கரால் வழங்கப்பட்டது. யுவரங்கர் அவரை எந்தக் காலத்திலும் தம்முடன் இருக்கும்படி செய்தனர்; எங்கே போனாலும் அவரை உடனழைத்துச் செல்வார். அந்த அந்தச் சமயங்களுக்கு ஏற்றவாறு தம்முடைய கவி சாதுரியத் தாலும் சொல்லினிமையாலும் யுவரங்கரை அந்த வித்து வான் மகிழ்ச்சியுறச் செய்து வருவார்.

ஒருமுறை யுவரங்கர் வேட்டையாடச் சென்றார். கோபால சாஸ்திரிகளும் உடன் சென்றனர். ஒரு காட் டின் நடுவில் ஓர் ஐயனார் கோவில் இருந்தது. அதில் இருந்த ஐயனார் விக்கிரகம் வலக்கைச் சுட்டு விரலை மூக்கின்மேல் வைத்த நிலையில் இருந்தது. அதைக் கண்ட யுவரங்கர், "இந்த ஐயனார் மூக்கில் விரலை வைத் துக் கொண்டிருப்பதற்கு ஒரு காரணத்தைக் கற்பித்துச் சொல்ல வேண்டும்" என்றார். உடனே சாஸ்திரிகள், "நமக்கோ ஹரிஹர புத்திரனென்னும் பெயர் இருக் கிறது. நம்முடைய தந்தையார் பரமசிவம்; தாயாரோ மோகினியாகிய விஷ்ணு திருமகளாகிய தேவியாரை மணந்து அவர் புருஷோத்தமரென்ற கௌரவத்துடன் வாழ்கின்றார். அவரை நாம் தாயாரென்று அழைப்பதா? தந்தையாரென்று அழைப்பதா? இப்படிப்பட்ட நிலையில் இருக்கிறோமே! என்ன செய்வது?" என்று வியப்புடன் ஆலோசனை செய்கிறாரென்னும் கருத்தை அமைத்து ஒரு சுலோகம் சொன்னார். கேட்ட யுவரங்கர், "ஐயனார் ஆழ்ந்து ஆலோசிப்பதாக அமைத்த இந்தச் சுலோகம் சிறிதும் ஆலோசனை பண்ணாமல் விரைவிற் சொல்லப் பட்டது எனக்கு வியப்பாக இருக்கிறது" என்று கூறி அந்தக் கருத்தின் பொருத்தத்தை உணர்ந்து பாராட்டினார்.*
---------
* இந்நிகழ்ச்சியைப் பிறரோடு தொடர்பு படுத்திச் சொல்வதும் உண்டு.

அயல்நாட்டு அரசர்களால் அடிக்கடி நேர்ந்த கல கங்களுக்கு அஞ்சி உடையார் பாளையத்திலும் பாது காப்புள்ள வேறு இடங்களிலும் எழுந்தருளச் செய்து வைக்கப்பட்ட மூர்த்திகளுக்கு உரிய பூஜை முதலியன யுவரங்கருடைய காலத்தில் குறைவின்றி நன்றாக நடை பெற்று வந்தன. அந்த அந்த மூர்த்திகளுக்கு உரிய ஸ்தலங்களில் இருக்கும்பொழுது எங்ஙனம் நித்திய நைமித்திகங்கள் நடைபெற்று வருமோ அங்ஙனமே நடைபெற்று வரும்படி அவர் செய்து வந்தார். அவ்விதம் நடைபெறுகின்றனவா என்பதை அங்கங்கே ஒற்றர்களை வைத்து அறிந்தும் தாமே மாறுவேடம் பூண்டு ஒருவரும் அறியாமற் சென்று பார்த்தும் வருதல் அவருடைய் வழக்கம்.

ஒருநாள் இரவு அவர் கோபால சாஸ்திரிகளுடன் திருவாரூர் சென்று கோயிலை அடைந்து ஸ்ரீவன்மீக நாதர் முதலிய மூர்த்திகளைத் தரிசனம் செய்தார். அங்கே அவ் வாலயத்தில் மேற்குப் பிரகாரத்தில் உள்ள ஒரு மண்ட பத்தில் தியாகராஜ மூர்த்தியோடு சிதம்பரம் ஸ்ரீ நடராஜ மூர்த்தியும் பாதுகாப்புக்காக எழுந்தருளச் செய்யப்பட் டிருந்தார். அதனால் அந்த மண்டபம் இன்றும் நடராஜ மண்டபம் என்னும் பெயரால் வழங்குகிறது.

ஸ்ரீ நடராஜ மூர்த்தியையும் ஸ்ரீ தியாகராஜ மூர்த் தியையும் ஒருங்கே தரிசித்த யுவரங்கர் பேரன்பினால் மனமுருகி நின்றார்; அருகில் நின்ற சாஸ்திரிகளைப் பார்த்து, "இந்த இரண்டு ராஜாக்களும் சேர்ந்து இங்கே இருப்பதைப்பற்றி ஒரு சுலோகம் சொல்ல வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். அவர் உடனே , நடராஜமூர்த்தி தியாகராஜ மூர்த்திக்குரிய இடத்தில் வந்தெழுந்தருளி யிருப்பதைக் குறிப்பித்து, "96 அடி கம்பத்திற்குமேல் ஆகாசத்தில் ஆடினாலும் பூமியில் வந்துதான் தானம் வாங்கவேண்டும்" என்று சமற்காரமான ஒரு கருத்தை அமைத்து ஒரு சுலோகத் தைச் சொன்னார். ஸ்ரீ நடராஜப் பெருமான் 96-தத்து வங்களுக்கும் மேலே விளங்குபவரென்பதும், பிருதிவி ஸ்தல மென்பதும், தியாகராஜமூர்த்தி வள்ளலென்பதும், பிறவு மாகிய விரிந்த செய்திகள் சுருக்கமாகப் புலப்படும்படி உலக வழக்கம் ஒன்றோடு பொருத்திக் காட்டிச் சந்தர்ப் பத்திற்கு ஏற்றவாறு சாஸ்திரிகள் கூறிய சுலோகத்தைக் கேட்ட யுவரங்கர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை; " உங்களுடைய பழக்கத்தைப் பெறுவதற்கு நான் எவ் வளவோ தவம் செய்திருக்கவேண்டும்!" என்று மனங் குளிர்ந்து புகழ்ந்தார்.

ஒருமுறை கோபால சாஸ்திரிகள் ஒரு சமஸ் தானத்து அரசர் விரும்பியபடி அவர்பாற் சென்று கண்டார். பலநாளாகச் சாஸ்திரிகளுடைய கல்விப் பெருமையைக் கேள்வியுற்ற அவ்வரசர் கோபால சாஸ் திரிகளைப் பாராட்டிப் பலவகைப் பரிசுகளை வழங்கினார். அவற்றைக் கண்ட அந்தச் சமஸ்தானத்து வித்துவான் களிற் சிலர், "யுவரங்கரிடம் இவர் எவ்வளவோ சம்மானம் பெற்றிருக்கலாம்; ஆனாலும் இங்கே பெற் றதைப்போல இராது" என்று தம்முள் பேசிக்கொண் டிருந்தார்கள். அது கோபால சாஸ்திரிகள் காதிற்கு எட்டியது.

அவர் மிக்க தைரியசாலி. 'வித்துவான்களுடைய இங்கிதமறிந்தும் வரிசையறிந்தும் சம்மானம் செய்யும் யுவரங்கர் எங்கே? இவரெங்கே?' என எண்ணினார். உடனே *'அஞ்ஞாநாம்' எனத்தொடங்கும் ஒரு சுலோ கத்தைக் கூறினார். அதில், அறிவில்லாத அரசர்கள் நாள்தோறும் செய்யும் கனகாபிஷேகத்தைக் காட்டிலும் ஸ்ரீ யுவரங்க பூபதியின் சிரக்கம்பம் ஒன்றே மேலானது என்னும் கருத்தும் அதற்குரிய உவமானமும் அமைந் திருந்தன. வித்தியா வீரராகிய சாஸதிரிகள் உடனே விடை பெற்றுக்கொண்டு உடையார்பாளையம் வந்து விட்டார். அவருடைய மனத்துணிவையும் யுவரங்கர் பால் அவருக்கிருந்த அன்பையும் இச்செயலால் எல்லோரும் அறிந்து அவரை மிகவும் போற்றினர்.†

    * अ़ज्ञानामवनीभुजा महरहः स्वर्णाभिषेकादपि
            ज्ञातुः क्षीयुवरङग** भूपतिमणेः श्लाधैव संमानना।
    सारासार् विवेकशून्य तरुणी समभोग साम्राज्यतः
            सारज्ञेन्दु **सुखीविलोकन ससुत्कण्ठैव यूनां मुदे।।

† இவ் வரலாறு சிறிது வேறுபட்டும் வழங்குவதுண்டு

ராமா சாஸ்திரிகள்

கோபால சாஸ்திரிகளின் குரு கோழிமங்கலம் ராமா சாஸ்திரிகளென்பவர். அவர் கோபால சாஸ்திரிகளைப் போன்ற பலருக்குப் பாடஞ்சொன்ன பெருமை வாய்ந் தவர்; சாஸ்திரங்களெல்லாவற்றிலும் பயிற்சி யுடையவர். வீட்டில் இருந்து அனுஷ்டானங்களைச் செய்வதும், நூல் களை வாசிப்பதும், பாடஞ் சொல்வதுமாகிய காரியங் களைமட்டும் செய்துகொண்டு பொழுது போக்கி வந்தார். யாரையும் போய்ப் பார்த்துப் பொருளுதவிபெறும் வழக்கம் அவரிடம் இல்லை; அதில் வெறுப்பும் இருந்தது. மிகவும் வறிய நிலையில் அவர் வாழ்ந்து வந்தார். மற்ற வித்துவான்க ளெல்லாம் பல சமஸ்தானங்களுக்குச் சென்று சம்மானங்களைப் பெற்று வருவதை அறிந்தும் அவருக்கு அங்ஙனம் போய் வருதலில் சம்மதம் இல்லை.

சிஷ்யர்களெல்லாம் அவரைத் தெய்வமாக எண்ணி வழி பட்டு வந்தனர். மர்ற வித்துவான்களும் அவரிடத்தில் மரியாதையும் மதிப்பும் உடையவர்களாக இருந்தனர்; அவர்களுட் சிலர் சமஸ்தானங்களுக்குப் போனால் அவர் வித்தையைப் பலர் அறிய முடியுமென்றும் சம்மானம் பெறலாமென்றும் கூறுவதுண்டு. அவற்றையெல்லாம் அவர் செவிக்கொள்ளவே இல்லை.

" நெடுந்தூரத்திலுள்ள இடங்களுக்குப் போக வேண்டாம், சமீபத்தில் இருக்கும் உடையார் பாளை யத்தில் ஜமீன்தாராக உள்ள யுவரங்கர் தாரதம்ய ஞானம் நிரம்பப்பெற்றவர். அங்கே நீங்கள் வந்தால் எங்களுக்கு அனுகூலமாக இருக்கும்" என்று அவ ருடைய சிஷயர்கள் சொல்லிப் பிரார்த்தித்தார்கள். பின்பு கோபால சாஸ்திரிகளும் அவர்பால் வந்து, "உங்களை ஜமீன்தார் தரிசனம் செய்து சல்லாபம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறார். தாங்கள் அங் ஙனம் செய்தால் அவருக்கு எவ்வளவோ சந்தோஷமாக இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் நன்மை உண்டாகும்" என்றார். ராமா சாஸ்திரிகள், "நான் வந்தால் அவர் ஏதாவது கொடுப்பார்; பிரதிக்ரகம் வாங்கி னதுமில்லை. இனிமேல் புதிதாக அந்த வழக்கத்தை வைத்துக்கொள்வது எதற்கு?" என்றார். அவருடைய நிராசையை நன்கு அறிந்த கோபால சாஸ்திரிகள் பல வகையாக அவருக்குச் சமாதானம் கூறினார்; " நீங்கள் ஒன்றும் பெற்றுக்கொள்ள வேண்டாம்; தாம்பூலம் மட்டும் பெற்று வந்துவிடலாம். உங்களுடைய தரிச னத்தை மாத்திரம் தந்துவிட்டு வந்தால் அவருடைய ஆசை தீர்ந்துவிடும். இந்த நாட்டில் அவரைப்போன்ற ஸாரக்ராஹியையும் வித்வத்ஜ்ஜன பரிபாலகரையும் தார தம்ய ஞானம் உடையவரையும் எங்கும் காணமுடியாது" என்று சொன்னார். ராமா சாஸ்திரிகள் தாம்பூலம் மாத்திரம் பெற்றுக்கொளவதாக நிபந்தனை கூறிவிட்டு உடையார்பாளையம் வர ஒருவாறு சம்மதித்தார்.

ஒருநாள் கோபால சாஸ்திரிகள் தம் குருவை உடை யார்பாளையத்திற்கு அழைத்துச் சென்றார். ராமா சாஸ் திரிகள் கோபால சாஸ்திரிகள் சொல்லிக்கொடுத்தபடி ஒரு தேங்காயை எடுத்துச் சென்று ஒரு சுலோகம் சொல்லி யுவரங்கர் கையில் கொடுக்க நினைந்து தேங்கா யையும் மங்கள சுலோகத்தையும் சித்தப்படுத்திக் கொண்டார். அரண்மனையில் நுழைந்தவுடன் அவ ருக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. அங்கங்கே காவலாளர் கள் சட்டையணிந்து கையில் ஆயுதங்களோடு நிற்றலை யும் அங்கே பழகுபவர்களெல்லாம் பயத்துடனும் மரி யாதையுடனும் ஒழுகுவதையும் கண்டார். அத்தகைய காட்சிகளை அதற்கு முன் அவர் காணாதவர். பின்பு உள்ளே சென்று யுவரங்கருடைய ஆஸ்தான மண்ட பத்தை அடைந்தார். அங்கே சென்றவுடன் கோபால சாஸ்திரிகள் யுவரங்கர்பால் அவரை அழைத்துச் சென்றார். அங்கே இருந்த காட்சியைக் கண்ட ராமா சாஸ்திரிகளுக்கு உடம்பெல்லாம் வேர்த்தது. அது காறும் அத்தகைய இடங்களுக்குச் சென்றவரல்ல ராதலின் மனத்திற்குத் திருப்தியில்லாத காரியம் ஒன்றை நிர்ப்பந்தத்திற்காகச் செய்ய ஒப்புக்கொண்டதுபற்றி அவர் மனம் கலக்கமுற்றது. யாசகம் செய்தலைப் போன்ற ஒன்றைத் தாம் செய்யத் துணிந்துவிட்டதாக அவர் எண்ணிய கருத்தே அவரை அந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டது.

யுவரங்கர் அவர்களைக் கண்டு எழுந்து நின்றார். " இவர்களே எங்கள் ஆசார்யர்கள்" என்று கோபால சாஸ்திரிகள் யுவரங்கரிடம் சொன்னார்.

" அப்படியா; தன்யனானேன்!" என்று சொல்லிக் கொண்டே ஜமீன்தார் ராமா சாஸ்திரிகளைப் பார்த்தார். அவருடைய உடம்பு முழுவதும் வேர்த்திருப்பதையும் நடுங்குவதையும் கண்ட ஜமீன்தார் தாம் பேசினால் அவருக்குத் தைரியமுண்டாகுமென்று எண்ணி, "தங் கள் திருநாமத்தை நான் அறியலாமோ?" என்று கேட்டார்.

நடுங்கிக் கொண்டிருந்த சாஸ்திரிகளுக்குப் பேச முடியவில்லை; கஷ்டப்பட்டு, "ராமாமங்கலம் கோழி சாஸ்திரிகள்" என்று சொன்னார். கோழிமங்கலம் ராமா சாஸ்திரிகள் என்று சொல்லவந்தவர் அச்சத்தால் அப்படி மாற்றிச் சொல்லிவிட்டார். உடனே சுலோ கத்தையும் சொல்லித் தேங்காயை யுவரங்கர் கையில் கொடுத்தார். கொடுக்கும்பொழுது கைந்நடுக்கத்தால் அவர் கையிற் படும்படி சரியாகக் கொடாமையால் அது தவறிக் கீழே விழுந்து உடைந்துவிட்டது.

பின்புதான் சாஸ்திரிகளுக்கு உணர்ச்சியும் தைரிய மும் உண்டாயின. எவ்வளவோ பேர்கள் கூடியிருக்கிற ஓரிடத்தில் தாம் அங்ஙனம் நடந்துகொண்டது அநுசித மென்றும் அவ்வளவு அதைரியப்படுதல் கூடாதென்றும் எண்ணினார். தேங்காய் உடைந்தவுடன் அந்த ஒலியே அவருக்கு ஒரு துணிவை உண்டாக்கிற்று. உடனே தலை நிமிர்ந்து, "உங்களை உடையாரென்று சொல்வார் கள். ஆயினும் என்ன காரணத்தாலோ இது விழுந்து உடைந்துவிட்டது" என்று சொன்னார். அங்கே இருந்த யாவரும் அவரைக் கவனித்துக்கொண்டே இருந்தவர்க ளாதலின் அந்தச் சாதுரியமான பேச்சைக் கேட்டு மகிழ்ந்தனர்.

பின்பு அவர் அங்கே யுவரங்கரோடு சல்லாபம் செய்துகொண்டு சிலநாள் இருந்தார். யுவரங்கர் அவருடைய ஞானநிலையையும் மற்றவர்ளால் அவர் மதிக்கப்பட்டிருத்தலையும் நன்றாக அறிந்து மகிழ்ந்தார். பிறகு அவர் தாம்பூலத்தையன்றி வேறொன்றும் பெற்றுக் கொள்ளாமல் ஊர் சென்றார். அவருடைய நிராசையை யும் பெருந்தன்மையையும் யுவரங்கர் மிகவும் மதித்தனர்.

நறுமலர்ப்பூங்குழல் நாயகி மாலை

யுவரங்கர் தமிழில் மிக்க பயிற்சியை உடையவர். உடையார்பாளையத்திற் கோயில் கொண்டெழுந்தருளி யுள்ள நறுமலர்ப்பூங்குழல் நாயகிமீது அவர் இயற் றியதாக ஒரு மாலை வழங்குகின்றது. நெடுங்காலம் புத்திரபாக்கிய மில்லாமையால் அவர் வருந்தினாரென்பது அம்மாலையிலுள்ள,

    (கட்டளைக்கலித்துறை)
    "நீமட்டும் நன்மணி யாகிய மக்கள்கண் நேயம்வைத்தாய்
    யாமட்டும் புத்திர னில்லா திருப்ப தழகதுவோ
    சாமட்டு மேதுயர் வாரியின் மூழ்குதல் தன்மமதோ
    நாமட்டு றாச்சீர் நறுமலர்ப் பூங்குழல் நாயகியே"

என்னும் செய்யுளால் தெரியவருகிறது.

அம்மாலை முப்த்திரண்டு செய்யுட்களை உடையது; எளிய நடையில் அமைந்தது. அதிலுள்ள செய்யுட்களில் இரண்டு வருமாறு:

    "கன்றோடப் பார்க்குங் கொலோகற வைப்பசு கைக்குழவி
    சென்றோடப் பார்ப்பள் கொலோபெற்ற மாது திருக்கண்வைத்தே
    என்றோடம் நீக்கி யினிமை செயாம லிருப்பதுவும்
    நன்றோ வுனக்கு நறுமலர்ப் பூங்குழல் நாயகியே."

    "தனந்தரு வாய்கல்வி கற்கும் அறிவொடு சாந்தமிகு
    மனந்தரு வாய்நின்னைப் போற்றுந் தகைக்குவண் சாதுசங்க
    இனந்தரு வாய்நின் றிருநோக்கம் வைக்க விலங்குறுமா
    ன்னந்தரு வாய்நன் னறுமலர்ப் பூங்குழல் நாயகியே."

[என்றோடம் - என் தோஷம், என் குற்றம்; இலங்குறும் ஆனனம்; ஆனனம் - முகம்.]

புலவர்கள் பாராட்டு

தமிழ் வித்துவான்களிடம் யுவரங்கருக்கு இருந்த அபிமானமும் தமிழ்ப் பயிற்சியும் அவர்பால் பல வித்து வான்களை வருவித்தன. உண்மைப் புலமையை அறிந்து உவக்கும் திறம் அவருக்கு நன்றாக வாய்த்திருந்தது. பெயரளவில் தமிழ்ப் புலவர்களாக வந்து எதையாவது பாடிவிட்டு அவரிடமிருந்து சம்மானம் பெற்றுச் செல்ல முடியாதென்பதை யாவரும் நன்கு அறிந்திருந்தனர். அதனால் யுவரங்கர்பாற் சென்றால் தங்களுடைய உண்மை ஆற்றல் புலப்படுமென்றும், கல்வி யறிவில்லாத வர்களோடு ஒருங்குவைத்து எண்ணும் அபாக்கியம் தங்களுக்கு நேராதென்றும் எண்ணிப் பல தமிழ்ப் புலவர்கள் வந்து வந்து பல நாள் இருந்து வாயாரப் புகழ்ந்து சம்மானம் பெற்று மனங்குளிர்ந்து செல்லு வார்கள். அத்தகையவர்கள் பாடிய செய்யுட்கள் எத் தனையோ பல இருந்திருத்தல் கூடும். இப்பொழுது சில பாடல்களே கிடைத்திருக்கின்றன.

யுவரங்கர் தம்பால் வந்த தமிழ்ப்புலவர் ஒருவரைக் கொண்டு கொன்றைவேந்தனில் உள்ள ஒவ்வொரு நீதி வாக்கியத்தையும் ஒவ்வொரு விருத்தத்தின் இறுதியில் அமைத்து ஒரு நூல் செய்யும்படி கேட்டுக்கொண்டார். அவர் அங்ஙனமே செய்து அரங்கேற்றினார். தக்க பரிசில்கள் அவருக்கு வழங்கப்பட்டன. அந்நூல் இப் பொழுது கிடைக்கவில்லை. *
------------------
*இச்செய்தியைச் சொன்னவர் இளமையில் எனக்குக் காரிகை முதலியவற்றைக் கற்பித்த செங்கணம் ஸ்ரீ விருத்தாசல ரெட்டியாரென்பவர்.

ஒரு காலத்தில் உடையார் பாளையத்தைச் சார்ந்த இடங்களில் பஞ்சம் உண்டாகவே யுவரங்கர் உடையார் பாளையத்திற்கு வந்த யாவருக்கும் அன்னமளித்துப் பாதுகாத்தார். அதனைப் புகழ்ந்து பலர் பல செய்யுட் களைப் பாடியுள்ளார். அவற்றுள் ஒன்று வருமாறு: -

    (விருத்தம்)
    "கன்னன் கொடுத்த பசுக்கிடையும்
            கடவுள் கொடுத்த திருவோடும்
    தென்னவன் கொடுத்த மணிவீடும்
            சேரன் கொடுத்த பொன்னாடும்
    மன்னன் கச்சி யுவரங்கன் வாவா
            வென்று பஞ்சத்தில்
    அன்னங் கொடுத்த கொடைக்குநிகர்
            அன்றாம் என்றும் இல்லையே"

{பசுக்கிடை - பசு மந்தை}

வேறொரு சமயத்தில் ஒரு புலவர் தமக்குக் கல்யா ணம் செய்துகொள்ளப் பொருளுதவி செய்ய வேண்டு மென்று,

    (கட்டளைக்கலித்துறை)
    "தேமிக்க வின்றுணை கொண்டோர் கனியைச் செறிவதற்கா
    நாமொய்த்த தண்பொழில் சுற்றின மித்துணை நாட்கள்மனம்
    காமித்த வக்கனி யிந்நா ளடையக் கருணைசெய்வாய்
    தாமத் தடந்தோள் யுவரங்க னென்னுந் தருவரசே"

{கனியை-கன்னிகையை; பழத்தை என்பது வேறு பொருள். பொழில்-பூமி; சோலை யென்பது வேறு பொருள். தருவரசு-கற்பகம்}

என்னும் செய்யுளைச் சொன்னார்.

அவ்வப்பொழுது சிலர் யுவரங்கர்மீது பாடிய செய் யுட்களிற் சில வருமாறு:

    (வெண்பா)
    (1) "கச்சி யுவரங்கன் காவேரி அந்தரங்கன்
    இச்சகத்தி லென்றும் இரண்டரங்கர்-மெச்சுறவே
    இந்தரங்கன் யாவரையும் ரட்சிப்பா னென்றெண்ணி
    அந்தரங்கன் கண்ணுறங்கி னான்."

    (அந்த ரங்கனென்றது ஸ்ரீரங்கநாதரை)

    (விருத்தம்)

    "சந்திரன்வீ சங்குமண னரைக்காற் றாதா
            சவிதாவின் கான்முனையே காற்றா தாவாம்
    இந்தெனும்வா ணுதலாடன் பாகத் தெம்மான்
            ஈசனையே யரைத்தாதா வென்ன லாகும்
    வந்திரக்கு முகுந்தனுக்கீ முக்காற் றாதா
            மாவலியே யெனப்பெரியோர் வழங்கு வார்கள்
    இந்திரனாங் கச்சியுவ ரங்க மன்னன்
            என்றுமுழுத் தாதாவென் றியம்ப லாமே."

இரண்டாவது செய்யுள் மிக அருமையானது. சந்திரன் முதலியவர்கள் முழுத்தாதா அல்லரென்றும் யுவரங்கரே முழுத்தாதா வென்றும் சொல்லப்பட்டிருந்தல் அறிந்து இன்புறத்தக்கது. பதினாறு கலைகளில் ஒவ்வொன்றையே ஒவ்வொரு நாளும் சூரியனுக்குக் கொடுப்பதனால் சந்திரன் வீசம் தாதாவானான். குமணன் தன் உடம்பில் எட்டில் ஒரு பங்காகிய தலையை அளிக்க முன்வந்தமையின் அரைக்கால் தாதாவானான். சவிதாவின் கான்முனை யென்றது கர்ணனை (சவிதா = சூரியன்) அவன் நாள்தோறும் பகலில் பதினைந்து நாழிகையளவே தானம் பண்ணிவந்தான்; ஒரு நாளில் காற் பாகத்தில் அங்ஙனம் செய்ததனால் அவன் கால் தாதாவானான். சிவபிரான் தம் திருமேனியிற் பாதியை உமாதேவியார்க்கு அளித்தமையால் அவர் அரைத் தாதாவானார். மூன்று காலால் அளக்கப்படுவனவற்றை வழங்கினமையால் மாவலி முக்கால் தாதாவானான்.

    3) " வரைகளிலே பெரியவரை மகாமேரு வரையென்று
            வர்ணிப் பார்கள்
    தரைகளிலே பெரியதரை தென்சோழ மண்டலமாச்
            சாற்று வார்கள்
    உரைகளிலே பெரியவுரை கம்பரா மாயணத்தின்
            உரைய தாகும்
    துரைகளிலே பெரியதுரை கச்சியுவ ரங்கனெனச்
            சொல்ல லாமே."

சங்கீத வித்வான்கள்

சங்கீத வித்வான்கள் பலரை யுவரங்கர் ஆதரித்து வந்தனர். அவர்கள் தங்களுக்கு அமைத்த இடங்களில் தங்கி உபசாரங்களைப் பெற்று மகிழ்ந்து உள்ளக் கிளர்ச்சியோடு பக்கத்தில் இருப்பவர்களிடம் பாடிக் காட்டுவது வழக்கம். அத்தகைய சமயங்களை ஒற்றர்கள் மூலம் அறிந்து யுவரங்கர் அங்கே சென்று திரைமறைவிலிருந்து கேட்டு இன்புறுவார். அவர்கள் மனங்களிந்து தாங்களே பாடுவது மிக்க இனிமையை யுடையதாக இருக்குமன்றோ?

பூலோக கந்தர்வ நாராயணசாமி ஐயர்

தஞ்சாவூர் சமஸ்தான சங்கீத வித்துவான்களுள் ஒருவராகிய நாராயணசாமி ஐயர் என்பவர் யுவரங்கரிடம் ஒருமுறை வந்தார். தஞ்சையில் உயர்ந்த மதிப்பை அடைந்தவர் அவர். உடையார்பாளையம் வந்த அவருக்கு வழக்கப்படி இருப்பிடம் அளித்துப் பலவகை உபசாரங்கள் செய்யப்பட்டன. அவருக்காக அங்கே நியமிக்கப்பட்டிருந்த வேலைக்காரன் ஒரு நாள் தைலம் தேய்க்கத் தொடங்கினான். ஒரு பலகையின்மேல் அவரை இருக்கச்செய்து மிக உயர்ந்த சந்தனாதித் தைலத்தைத் தலையில் சேர்த்துத் தாளம்போட்டுத் தேய்த்து வந்தான். அது வரையில் வேறு எங்கும் பெறாத உணவுவகைகளையும் உபசாரங்களையும் பெற்ற அவருக்கு இருந்த சந்தோஷத்திற்கு அளவில்லை. பின்பு தைலத்தினால் உண்டான குளிர்ச்சியும் தேய்த்தவன் போட்ட தாளமும் அவருடைய மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்தன. தம்மையே மறந்து அவர் பாடத் தொடங்கினார். அவருக்கு உண்டான சங்தோஷத்தால் பாட்டு வரவர மேம்பட்டு இனிமை உற்றது. அந்தச் சங்கீதம் அவருக்கே வியப்பை உண்டாக்கியது. அப்பொழுது யுவரங்கருடைய ஞாபகம் அவருக்கு வரவே, "அடடா, இந்தப் பாட்டை யுவரங்கர் கேட்பதற்கு இல்லையே!" என்று வருந்திச் சொன்னார். "இதோ கேட்டு ஆனந்தக் கடலில் மூழ்கியிருக்கிறேன்" என்று ஒரு சப்தம் வந்தது. அங்கே யுவரங்கர் ஒரு திரைமறைவிலிருந்து உயர்வான அந்த இசையமுதத்தைப் பருகிக் கொண்டிருந்தார்.

நாராயணசாமி ஐயர் திடுக்கிட்டு எழுந்தார். அருகிலிருந்த வேலைக்காரன் அவருடைய குறிப்பை அறிந்து ஒரு ரவை சல்லாத்துணியால் தலையிலிருந்த தைலத்தைத் துடைத்தான். நாராயணசாமி ஐயர் வஸ்திரம் முதலியவற்றை நன்றாக அணிந்துகொண்டார். யுவரங்கரும் அருகில் வந்து அமர்ந்தார். மறுபடியும் வித்துவான் பாட ஆரம்பித்தார். அவருடைய முழுவன்மையும் அன்று வெளியாயிற்று. பல கீர்த்தனைகளை அவர் பாடினார். கடைசியில் மங்களம் பாடி நிறுத்தியவுடன் அவருடைய பார்வை அங்கே வேறொரு பக்கத்திற்குச் சென்றது. அதனை யறிந்த யுவரங்கர், "என்ன விசேஷம்" என்று கேட்டார். "அந்தப் பக்கத்தில் ஒரு சந்திரன் உதயமாயிற்று. அதைத்தான் பார்த்தேன்" என்று வித்துவான் கூறினார்.

அவர் பாடிக்கொண்டே இருந்தபொழுது அதனை அறிந்து யுவரங்கருடைய அரண்மனையில் இருந்தவளும் இசைப்பயிற்சி மிக்கவளுமாகிய தாசி ஒருத்தி அப்பாட்டைக் கேட்க விரும்பி அங்கே வந்து மறைவில் இருந்து கேட்டு வந்தாள். பாட்டு நின்றவுடன் 'இவ்வளவு நன்றாகப் பாடும் மகா புருஷனுடைய திருமுகத்தைப் பார்க்க வேண்டும்' என்று எண்ணி எட்டிப் பார்த்தாள். அதே சமயத்தில் நாராயணசாமி ஐயர் அவள் முகத்தைப் பார்த்து விட்டார். அந்த இடத்தில் பெண்பால் வந்தது அவருக்கு ஆச்சிரியமாக இருந்தது. சந்திரனென்று கூறியது அவளது முகத்தையே.

நாராயணசாமி ஐயர் கூறியதைக் கேட்ட யுவரங்கர் அந்தத் தாசியை அழைத்து அவளை நோக்கி "இவரே இனி உனக்கு நாயகர். இவருக்குரிய கைங்கரியங்களை இவர் மனம் கோணாமல் செய்து மகிழ்ந்துரு. நீ மகா பாக்கியசாலி" என்று சொல்லி விட்டு, "தாங்கள் இவளை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று சங்கீத வித்துவானிடம் வினயத்தோடு தெரிவித்தார். நாராயணசாமி ஐயருக்கு இன்னது செய்வதென்று தோற்றவில்லை. அவர் மறுத்ததற்கு அஞ்சி அவளை ஏற்றுக் கொண்டார். பின்பு யுவரங்கர் அவருக்குப் பலவகையான சம்மானங்களையும் அந்தத் தாசியினுடைய பாதுகாப்பிற்காகத் தனியே பொருளுதவியையும் செய்தார். அன்றியும் அவருக்கு 'பூலோக கந்தர்வர்' என்னும் பட்டத்தையும் அளித்தார். அது முதல் அவர் பெயர் பூலோக கந்தர்வ நாராயணசாமி ஐயர் என்று வழங்கி வரலாயிற்று. வித்துவான்களுடைய மனத்தை மகிழ்விப்பதில் யுவரங்கருக்கு ஒப்பாக வேறு யாரைச் சொல்ல முடியும்?

தஞ்சாவூர் சமஸ்தான வித்துவான்களில் யுவரங்கரிடம் வந்து இவ்வாறே தங்கள் ஆற்றல்களைக் காட்டிப் பரிசு பெற்று இன்புற்றுச் சென்றோர் பலர். மைசூர், திருவனந்தபுரம் முதலிய சமஸ்தானங்களிலிருந்தும் பலர் வந்து சென்றனர்.

பச்சைமிரியன் ஆதிப்பையர்

பூலோக கந்தர்வ நாராயணசாமி ஐயருடைய ஆசிரியர் 'விரிபோணி' வர்ணமென்று வழங்கும் பைரவி வர்ணத்தை இயற்றிய பச்சைமிரியன் ஆதிப்பையர் என்பவர். அவர் தெலுங்கர்; தஞ்சாவூர் சமஸ்தான வித்துவான். சிறந்த கர்நாடக சங்கீத வித்துவான்களில் பலருக்கு ஆசிரியராக இருந்தவர். ஸமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மகாராஷ்டிரம் என்னும் பாஷைகளிற் பல கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார்.
யுவரங்கருடைய விருப்பத்தின்படி உடையார் பாளையத்துக்கு ஒருமுறை அவர் வந்தார்; யுவரங்கருடைய ஞான விசேடத்தில் ஈடுபட்டுச் சில நாட்கள் இருந்து அவர்மீது பல கீர்த்தனங்களை இயற்றினார். நாட்டைக் குறிஞ்சி, சஹானா என்னும் இராகங்களில் உள்ள இரண்டு கீர்த்தனங்களைப் பிற்காலத்தில் அவருடைய பரம்பரையினராகிய புதுக்கோட்டை வீணை சுப்பையர் என்னும் சங்கீத வித்துவான் பாடி வந்தார். சிலநாட்கள் ஆதிப்பையர் உடையார் பாளையத்தில் இருந்து யுவரங்கர் செய்வித்த பலவகை உபசாரங்களையும் வழங்கிய பல சம்மானங்களையும் பெற்றுச் சென்றார். பின்பும் அடிக்கடி வந்து யுவரங்கரை மகிழ்வித்துத் தாமும் மகிழ்ந்து செல்வதுண்டு.

அறச்செயல்கள்

யுவரங்கர் தெய்வபக்தியிற் சிறந்தவர்; எல்லா மதத்தினர்பாலும் அன்பு பூண்டவர்; சமரச நோக்கம் கொண்டவர். அவர் சிவ விஷ்ணு ஆலயங்களில் பல வகைத் திருப்பணிகளைச் செய்திருக்கிறார்; உடையார் பாளையம், ஜயங்கொண்ட சோழபுரம், கங்கைகொண்ட சோழபுரம் முதலிய தலங்களில் உள்ள சிவாலயங்களில் பல மண்டபங்களைப் புதுப்பித்தார்; புதிய திருப்பணி களையும் செய்தனர்; அந்த ஆலயங்களிலும் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ பூவராகப் பெருமாள் கோயிலும் நித்திய நைமித்தி கங்கள் விதிப்படியே நடைபெறும்படி செய்வித்தார்; பல இடங்களில் அக்கிரகாரங்களை அமைத்துப் பிராமணர் களுக்கு ஸர்வமானியங்களூடன் வீடுகளைத் தானம் செய்தார்.

நல்லப்ப உடையார்

யுவரங்கருக்குப் பின்பு அவருடைய தம்பியாகிய நல்லப்ப உடையாரென்பவர் ஜமீனின் ஆட்சியையார் ஹிரண்யகர்ப்ப மகாதானம் ஒன்று செய்தார். அந்த ஜமீந்தாரும் பலவகை ஆலயத் திருப்பணிகளைச் செய்தனர். அவருடைய அறச்செயல்களையும் புகழையும் புலப்படுத்தி ஒரு புலவர் அவர் மீது பாடிய சிந்து ஒன்று உண்டென்பர். கிழக்கிந்திய கம்பெனியாருக்கு அவர் பலவகையான உதவி புரிந்தவர்; நவாப்பிற்கும் பல சமயங்களில் உதவியாக இருந்தனர். அவ்விரு வகை யாராலும் அவர் பெற்ற ஊதியங்கள் பல.

நல்லப்ப உடையாருக்குப் பின்பு முத்து விஜய ரங்கப்ப உடையாரென்பவரும், அபிநவ யுவரங்கப்ப உடையாரென்பவரும் முறையே ஜமீந்தார்களாக இருந்து விளங்கினர். பின்னவருடைய காலத்தில் நவாப்பினுடைய தலைமை மாறி ஆங்கில அரசின் தலைமை உடையார்பாளைய ஜமீனுக்கும் வேறிடங் களுக்கும் அமைந்தது.

கச்சி ரங்கப்ப உடையார்

1801-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதி கச்சி ரங்கப்ப உடையார் என்பவர் ஜமீன்தாரானார். 1835- ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரையில் அவருடைய ஆட்சி நடைபெற்றது.

அவர் தமிழ்ப் பயிற்சியும் சங்கீதத்தில், சிறந்த ஆற்றலும் உடையவர்; கல்லாடத்தில் ஈடுபட்டுப் பல முறை படித்தும் புலவர்கள் அதிலுள்ள நயங்களை எடுத்துக்கூறக் கேட்டும் இன்புற்றார்; மற்ற நூல்களை யும் பயின்றார். திரிசிரபுரத்திற்கு மேற்கே காவிரியின் தென்பாலுள்ளதும் தேவாரம் பெற்றதுமாகிய திருப்ப ராய்த்துறை என்னும் தலத்தில் கோடைக் காலத்தில் சில மாதம் தங்கி யிருத்தல் அவரது வழக்கம்.

வீணைப் பெருமாளையர்

ஒரு வருஷம் அங்கே சென்றிருந்தபொழுது தஞ்சா வூரிலிருந்து வீணைப் பெருமாளைய ரென்னும் சிறந்த சங்கீத வித்துவானொருவர் வந்தனர். அவர் மேற்கூறிய ஆதிப்பையருடைய சிஷ்யர். வீணை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆற்றலை யாவரும் புகழ்ந்து வந்தனர்.

அவர் வந்தபொழுது பல சங்கீதவித்துவான்களும் தமிழ் வடமொழி வித்துவான்களும் அந்த ஜமீன்தாருடன் இருந்தனர். பெருமாளையர் அவருடைய சபையில் வீணை வாசித்தார். அது மிகவும் இனிமையாக இருந்தது. சங்கீதத்தில் வல்லவராகிய ஜமீன்தார் எதனையும் திடீரென்று பாராட்டுவதும் அவமதிப்பதுமாகிய இயல்பு இல்லாதவர்; ஆதலின் வீணை வித்துவான் எவ்வளவோ இனிமையாகப் பாடியும் வாசித்தும் ஜமீந்தார் பாராட்டவில்லை; சிரக்கம்பமும் கரக்கம்பமும் செய்ய வில்லை. தலைவர் எங்ஙனம் நடக்கிறாரோ அதனைப் பின் பற்றுவது தான் உசிதமாதலின் உடன் இருந்த வித்து வான்களும் அசைவற்று இருந்தார்கள். வல்லவர்களும் அறிவு மிக்கவரும் உள்ள சபையில் தாமாக இடமறி யாமல் தலையை ஆட்டுதல்,கைகொட்டுதல், சபா ஷென்றல் முதலான வழக்கங்கள் கொண்டவர்களை அப்போது சபைகளிற் காணுதல் அரிது. மூன்று நாட்கள் பெருமாளையர் வீணை வாசித்தார்; பாடிக் கொண்டே வாசிப்பது அவர் வழக்கம்; பல ராகங்கள், கீர்த்தனங்கள், பல்லவி, ஸ்வரங்கள் முதலிய பல வழி களில் அவர் தம் ஆற்றலை வெளிப்படுத்தி வந்தார். மூன்று நாட்களிலும் ஜமீன்தார் சற்றும் தலை அசைக் கவேயில்லை. மூன்றாவது நாள் வாசித்து வரும்பொழுது பெருமாளையருக்கு மனவருத்தம் உண்டாயிற்று. அவ் வருத்தத்தால், பாடிவந்த இராகத்துக்கு உரிய ஒரு ஸ்வரஸ்தானம் தவறியது. அதனை யாரும் கவனிக்கவில்லை. அப்போது 'பேஷ்' என்று ஜமீன்தார் சொன்னார்.

பெருமாளையர் திடுக்கிட்டார்; உடனே வீணையைக் கீழே வைத்தார். "ஏன்? மேலே வாசிக்கலாமே" என்று ஜமீன்தார் சொன்னார். "எனக்கு ஒன்றும் சொல்லத் தோற்றவில்லை. இந்த மூன்று நாட்களும் என்னுடைய சக்தியை யெல்லாம் காட்டி வாசித்தேன்; கல்லுங்கரையும் வண்ணம் பாடினேன். அப்பொழுதெல்லாம் துரை யவர்கள் சந்தோஷிக்கவில்லை. இப்பொழுது கொஞ்சம் தவறி விட்டது. இந்தச் சமய‌த்தில் நீங்கள் சந்தோஷித் தீர்களே!" என்று வித்துவான் கூறினார். உடையார், "என் ஞான‌த்தைக் காட்டுவதற்காகத்தான் சந்தோஷித் தேன். அன்றி இவ்வளவு நாளும் கூர்ந்து கவனித்து வந்தேனென்பதையும் இதனாலேயே நீங்கள் அறிந்து கொள்ளலாம். அநாவசியமாக மனவருத்ததைக் கொடுத்ததற்கு க்ஷமிக்க வேண்டும்" என்று சொல்லிப் பாராட்டிப் பல பரிசுகளை வழங்கினார். வித்துவானும் அவருடைய ஞானத்தை அறிந்து புகழ்ந்தார்.

கனம் கிருஷ்ணையர்

பெரிய திருக்குன்றம் கனம் கிருஷ்ணையருடைய பெருமையை அறிந்து தம்மிடத்து அவரை வரு வித்து அந்த ஜமீன்தார் சமஸ்தான வித்துவானாக நியமித்துக்கொண்டார். அவர்மீது கனம் கிருஷ்ணையர் பாடிய சில கீர்த்தனங்களும் சில பாடல்களும் உண்டு; அவற்றுள் ஒரு கட்டளைக் கலித்துறையின் பகுதி யாகிய, "கச்சிரங்கேந்த்ரன் சிரக்கம்பம் போதும்" என்பதுமட்டும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

தமிழ் வித்துவான்கள்

கச்சிரங்கர் காலத்தில் திருப்புறம்பயம் வீரசைவ ராகிய பாலசரஸ்வதி சுப்பிரமணியக்கவிராய ரென்ப வரும் சேலத்தைச் சார்ந்த சாருவாய்க் குமாரசாமிக் கவிராய ரென்பவரும் சமஸ்தானத் தமிழ் வித்துவான் களாக இருந்தனர். திருவாவடுதுறையில் ஆதீன வித்துவானாக இருந்த கந்தசாமிக் கவிராயரென்பவர் உடையார் பாளையம் வந்து கச்சிரங்கரைப் பாராட்டி ஒரு கோவைபாடி அதற்காக மானியங்களைப் பெற்றார். அக்கோவையிலுள்ள ஒரு செய்யுள் வருமாறு.

    [இறையோன் இருட்குறி வேண்டல்] - (கட்டளைக் கலித்துறை)
    "திருந்தார் கலிபுகுந் தேமீன் வரச்செய்து செங்கதிரோன்
    விருந்தாக வேயெமை விட்டான் தமிழுக்கு மிக்கநிதி
    தருந்தாரு வாங்கச்சி ரங்க மகீபன் றடஞ்சிலம்பில்
    கருந்தாழ் மழைக்குழ லீருமக் கேயின்று காண்மின்களே."

கச்சிரங்கதுரைமீது வேறொரு புலவர் பிள்ளைத் தமிழொன்று பாடியுள்ளார். அவர் விஷயமாக உள்ள தனிப்பாடல்கள் பல. அவற்றுள் பாலசரஸ்வதி சுப்பிர மணியக் கவிராயர் பாடிய செய்யுட்களில் ஒன்று வருமாரு:

    (வெண்பா)
    "கல்லாட மேமுதலாக் கற்றுணர்ந்தாய் கல்விபெற்றோர்
    பல்லாடக் கூடுமோ பார்வேந்தே – சொல்லாடும்
    கச்சிரங்க சாமியெனுங் காலாட்கள் தோழாநீ
    வச்சிரதே கம்பெற்று வாழ்."

கச்சிரங்கப்ப உடையாருக்குப் பின்பு முத்து விஜய ரங்கப்ப உடையார், ரங்கப்ப உடையார் என்பவர்கள் முறையே ஜமீனை வகித்தார்கள்.

கச்சிக் கல்யாணரங்கர்

அவர்களுக்குப் பின்பு கச்சி ரங்கப்ப உடையா ருடைய குமாரராகிய கச்சிக் கல்யாணரங்கரென்பவர் ஜமீன்தாரானார். 1842-ஆம் வருஷம் ஜூலை மாதம் முதல் 1885-ஆம் வருஷம் ஜூன் மாதம் வரையில் அவர் ஜமீன் ஆட்சியை நடத்தினார். அவரும் வித்து வான்களிடத்திற் பிரியமும் தர்மங்கள் செய்வதில் விருப்பமும் உடையவராக இருந்தார்.

ஆஸ்தான வித்துவான்கள்

அந்த ஜமீன்தார், கனம் கிருஷ்ணையரிடத்தில் மிக்க நட்புரிமை பாராட்டிப் பழகி வந்தார்; அவருக்குப் பல்லக்கும் குதிரையும் கொடுத்து அவ்வப்பொழுது வேண்டிய பொருளையும் அளித்துக் கௌரவித்தார். கனம் கிருஷ்ணையர் அந்த ஜமீன்தார்மீது பாடிய *கீர்த்தனங்கள் பல. அவர் முதுமையினாலும் ஒருவகைப் பிணியினாலும் தேகத்தளர்ச்சியை அடைந்து தம்முடைய ஊருக்குப் போய் இருக்க வேண்டுமென்று எண்ணித் தம் விருப்பத்தை ஒரு கீர்த்தனத்தால் ஜமீன்தாருக்குப் புலப்படுத்தினார். அதனைக் கேட்ட ஜமீன்தார் அங் ஙனமே போய் இருப்பதற்கு வேண்டியவாறு பொரு ளுதவி செய்து அனுப்பினார்; பின்பும் கவலையில்லாமல் அவரைப் பாதுகாத்து வந்தார். கனம் கிருஷ்ணைய ருக்குப் பின்பு தாளப் பிரஸ்தாரம் சாமாசாஸ்திரிக ளென்னும் பிரபல சங்கீத வித்துவானுடைய குமாரராகிய சுப்பராய சாஸதிரிக ளென்பவரையும் அவருக்குப் பின்பு அவர் குமாரராகிய அண்ணாசாமி ஐயர் என்பவரையும் ஆஸ்தான வித்துவானகளாக நியமித்துக் கல்யாண ரங்கர் ஆதரித்துவந்தனர். அக்காலத்தில் பாலசரஸ்வதி சுப்பிரமணியக் கவிராயரும் இருந்தார்.
-------------
* இவற்றில் இப்பொழுது கிடைப்பவை கனம் கிருஷ்ணையர் என்னும் புத்ததகத்தில் உள்ளன.

தருமங்கள்

கல்யாணரங்கர் செய்த நற்செயல்கள் பல. உடை யார் பாளையம், மதனத்தூர், ஆனந்தவாடி என்னும் இடங்களில் அவர் அன்ன சத்திரம் கட்டுவித்தார். கொள் ளிடக்கரையிலுள்ள மதனத்தூர்ச் சத்திரத்தைக் கட்டிய காலத்தில் அதனைப் பாராட்டி ஒரு கீர்த்தனம் கனம் கிருஷ்ணையர் பாடியுள்ளார். பால சரஸ்வதி சுப்பிரமணி யக் கவிராயர்.

    "திருமால்மண் உண்ணாமல் சிவனும் நஞ்சைத்
            தின்னாமல் செங்கமலப் பொகுட்டுவேதன்
    உருமாறி யன்னமெனப் பறந்தி டாமல்
            உயர்மறையோர் வடிவின்வந்தே யன்ன முண்ணக்
    கருமால்நேர் கரதலக்கல் யாண ரங்கக்
            காலாட்கள் தோழமன்னர் கருத்து வந்தே
    வருமாம தனத்தூரில் அன்ன சத்ரம்
            வைத்திட்டா ரெவரும்வந்து துய்த்திட் டாரே"

என்னும் செய்யுளை இயற்றினார்.

தத்தனூரில் பலவகைக் கனிவிருட்சங்களும் பூஞ் செடிகளும் நிறைந்து கண்ணுக்கு இனிய சோலை யொன் றைக் கச்சிக் கல்யாணரங்கர் அமைத்தார். அதனைப் பாராட்டித் தர்பார் இராகத்தில் கனம் கிருஷ்ணையர் ஒரு கீர்த்தனம் பாடியிருக்கிறார்.

கல்யாணரங்க துரை ஸ்ரீ முஷ்ணம் பெருமாளுக்கும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கும் தங்கக் கவச மும் ஸ்ரீ மூலட்டானேசுவரருக்கு ஸஹஸ்ர தாரா பாத்திர மும் செய்வித்தளித்தார்; கும்பகோணம் ஸ்ரீ சங்கராசாரி யார் மடத்திற்குத் தேவமங்கலமென்னும் கிராமத்தில் 40 காணி நிலங்களை ஸர்வமானியமாக வழங்கினார்.

அவருடைய காலத்தில் கனம் கிருஷ்ணையரிடம் என் பிதா வேங்கடசுப்பையரவர்கள் பன்னிரண்டு வருஷம் உடனிருந்து பணிவிடை செய்து சங்கீத அப்பியாசம் செய்தார்கள். அவரிடம் ஜமீன்தாருக்கு மிக்க பிரியம் உண்டு. என் தந்தையாரின் தாயாருக்குக் கனம் கிருஷ் ணையர் அம்மான் ஆவர். கச்சிக் கல்யாணரங்க துரையி னுடைய பல்வகை இயல்புகளையும் அவர் முன்னோர்களு டைய வரலாறுகளையும் என் தந்தையார் அடிக்கடி எனக் குக் கூறியிருக்கின்றனர். மாதச் சம்பளம் கொடுத்து அவரைச் சமஸ்தானத்துச் சங்கீத வித்துவானாக ஜமீன் தார் இருக்கச்செய்து சில வருஷங்கள் ஆதரித்து வந் தார். கனம் கிருஷ்ணையரின் விருப்பப்படி என் தந்தை யாருக்குப் பொருளுதவி செய்து திருமணம் செய்வித்த வர் அந்த ஜமீன்தாரே.

பின்னவர்கள்

கல்யாணரங்கருக்குப் பின்பு கச்சி யுவரங்கப்ப உடையார் 1918-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் ஜமீன்தாராக இருந்து பதம் பெற்றார். பிறகு 1946 மே மாதம் வரையில் அவர் குமாரர் தானதரும் காமதேனு வாகிய கச்சி சின்ன நல்லப்பக்காலாட்கள் தோழ உடை யார் ஜமீன்தாராக இருந்து நற்செயலும் நல்லறமும் புரிந்து புகழுடன் விளங்கினார். இப்போது அவர் குமார ராகிய ஸ்ரீமத் கச்சி யுவரங்கப்பக் காலாட்கள் தோழ உடையாரவர்கள் ஜமீன் தலைமையை வகித்து நன்கு பரிபாலனம் செய்து கொண்டு விளங்குகிறார்கள்.
------

3*. தமிழ் நாட்டு வணிகர்

      * 'தன வைசியன் ' பொங்கல் மலர் 1935

வாணிகம்

ஒரு நாட்டின் நாகரிகத்திற்கு முதற் காரணமகை இருப்பது அதன் செல்வ மிகுதியாகும் செல்வ வளர்ச்சிக்குத் துணைபுரிவனவற்றுள் தலைசிறந்தது வியாபாரம். ஆதலின் வாணிகமே ஒரு நாட்டின் நாகரிகத்தின் சிறப்புக்குப் பெரிதும் உதவியாக இருப்பதென்று கருதப்படுகின்றது

ஆதிகாலம் தொடங்கி மக்கள் மேற்கொண்டு செய்துவரும் ஒவ்வொரு தொழிலையும் ஒவ்வொரு கடமையாகவே யாவரும் கருதிவந்துள்ளனர். சரீரத்தின் அங்கங்கள் எல்லாம் சேர்ந்து வேலை செய்வதினால் சரீரம் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறதோ அவ்வாறே தேசத்தின் §க்ஷமத்துக்குப் பல தொழில்களும் உதவுகின்றன. ஒவ்வொரு தொழிலும் அதனை செய்பவர்களுக்குப் பயனளித்து வருவதோடு பரோபகாரமாகவும் இருப்பதால் சிறந்த தருமமாகவும் எண்ணப்படும்.

நாகரீகம் மிக்க மேலை நாடுகள் வியாபாரத்திற் சிறந்த நிலைமை உடையனவாக இருக்கின்றன. நம்முடைய தமிழ்நாடு முற்காலத்தில் வியாபாரத்திலும் பலவற்றிலும் உயர்நிலையை அடைந்திருந்தது. இதனை பழைய நூல்களால் நாம் அறியலாம்

தொழில்களில் சிறந்தனவாகச் சொல்லப்படுபவன உழவும் வாணிபமுமாகிய இரண்டுமேயாம். ஒருவர் பிறருக்கு அடிமைப்படாது உரிமையோடு செய்யும் இவ்விரண்டும் பல நூல்களிலும் மேன்மை யாகவே கூறப்படுகின்றன. வேளாளண்மையினால் விளையும் பொருள்களையும் கைத்தொழில்களால் கிடைக்கும் பொருள்களையும் பல நாட்டாரும் அடையும்படி செய்வித்தலில் வாணிபமும் உதவி புரிகின்றது. மனிதனுடைய வாழ்கைக்கு வேண்டிய பொருள்கள் யாவும் ஓரிடத்திலேயே கிடைத்தல் அரிது. ஆதலின், பலவேறு இடங்களில் உண்டாக்கப்படும் பல்வேறு பொருள்களை மனிதர்களுக்கு பயன்பெறச் செய்யும் முயற்சியே வாணிகமாகும்.

இந்த வாணிபத்தினாலேயே வடமலையில் பிறக்கும் பொன்னும் தென்மலையில் பிறக்கும் சந்தனமும் குணகடற் பவளமும் தென்கடல் முத்தும் ஒருங்கே மனிதர்பால் சேர்கின்றன.

வணிகர்

வாணிகத்தைப் பரம்பரையாகச் செய்துவரும் வணிக மரபினர் வைசியர் எனப்படுவர். அவர்களில் பல வகையினர் உண்டு. அவர் தன வைசியர், கோ வைசியர், பூ வைசியர் என்பார் ஒரு பிரிவினர். இப்பர், கவிப்பர், பெருங்குடி வணிகர் என்பார் வேறொரு வகையினர். இப்பிரிவினர் தாம் கொண்ட பொருளளவாற் பெயர் பெற்றனர். தாம் செய்யும் வியாபாரத்தாற் பிரிக்கப்பட்ட கூல வாணிகர், பொன் வாணிகர், அறுவை வாணிகர், மணி வாணிகர் முதலிய பிரிவினரும் உண்டு.

தமக்குரிய நூற்களை ஓதுதல் தமக்குரிய யாகங்களைச் செய்தல், தாம் பெற்ற பொருள்களை நல்வழியில் ஈதல், உழவு செய்வித்தல், பசுக்களைக் காத்தல் என்பன ஐந்தும் வணிகர்குரிய தொழில்களென்பது தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருக்கின்றது. வணிகர் அரசர்களால் பெரிதும் மதித்துப் பாராட்டப் பெற்றனர். இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேர அரசன் நாடு காத்துவரும் சிறப்பைப் புகழ்ந்து பாடிய குமட்டூர் கண்ணனார் என்னும் புலவர் ஒருவர் ஒரு பாட்டில் 'உன்னுடையநாடு நோயும் பசியும் இல்லாமல் விளங்கும்படி நீ காத்து வருகின்றாய்' என்னும் போது அவன் காக்கும் முறையை விரித்துச் சொல்லுகிறார்; 'பலவகை உணவுப் பண்டங்களை' விற்கும் வணிகருடைய குடிகளைக் காப்பாற்றி வருகின்றாய்' என்னும் கருத்தை அமைத்து,

"கூலம் பகர்நர் குடிபுறந் தராஅ"

என்று கூறியிருக்கி்றார். இதனால் ஒரு நாட்டின் இன்ப வாழ்க்கைக்கு வணிகரைப் பாதுகாத்தல் இன்றியமை யாததென்பதும் அங்ஙனம் செய்தல் அரசன் கடமை களில் ஒன்றென்பதும் தெரியவருகின்றன.

தூதர்கள்

தமிழரசர்கள் தங்களுக்குள் போர் நேர்ந்தபோது தூதாக அனுப்புவதற்கு வணிகரை உபயோகித்தனர். அரசர்கள் நிலையை உணர்ந்து சினமின்றித் தாம் கூறு வதைச் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் ஆற்ற லுடைமையால் அவர் அத்தொழிலுக்கு உரியவராயினர். பண்டங்களை விற்கும்போதும் சுருங்கப் பேசி விளங்க வைக்கும் இயல்புடையவர்கள் அவர்கள். இதனை,

    "புல்லியோர் பண்டங் கொள்வார்
            வினவின் அப்பொருள்தம் பக்கல்
    இல்லெனின் இனமா யுள்ள
            பொருளுரைத் தெதிர்மறுத்தும்
    அல்லதப் பொருளுண் டென்னின்
            விலைசுட்டி யறுத்து நேர்ந்தும்
    சொல்லினும் இலாபங் கொள்வார்
            தொன்மர பிருக்கை சொல்வாம்" (திருவிளையாடற் புராணம்)

என்னும் செய்யுளால் அறியலாம்.

சிறப்புக்கள்

அரசர்களும் வணிகர்களும் கலந்து பழகுவார்கள். அதனால் வணிகர்களை இளங்கோக்க ளென்று சொல்லு வார்கள். காவிரிப்பூம் பட்டினத்து வீதியில், 'அரச குமரரும் வணிக குமரரும் குதிரைகளின் மேலும் களிற் றின் மேலும் ஏறி ஒருங்கே சென்றனர்' (இந்திர விழவூ ரெடுத்த காதை, 158-60) என்று சிலப்பதிகாரத்திலுள்ள பகுதியால் அரசருக்கும் வணிகருக்கும் இருந்த நட்பு விளங்குகின்றது. அரசர்களால் அவர்கள் பலவகையான சிறப்புக்களைப் பெற்றார்கள். எட்டி யென்னும் பட்டமும் அதற்குரிய பொற்பூவொன்றும் அவர்களுக்கு அளிக்கப் பெற்றன. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி குண்டலகேசி முதலிய நூல்களில் வணிகரைப் பற்றிய பல செய்திகள் காணப்படும்.

வணிகர், தம் தொழிலை அறநெறி தவறாமல் செய்து வந்தார்கள். பிறருடைய பொருளின் அருமையை அறிந்து நடுநிலை தவறாமல் வியாபாரம் செய்தல் அவர் இயல்பு. இதனைத் திருவள்ளுவர்,

    " வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
    பிறவுந் தம்போற் செயின்"

என்று உணர்த்துகின்றார்.

பழைய செய்திகள்

காவிரிப்பூம் பட்டினத்திலும் மதுரையிலும் வணிகர் கள் மிகுதியாக இருந்தனர். அவ்விரு நகரிலும் நாளங் காடி என்னும் காலைக் கடைத்தெருவும், அல்லங்காடி என்னும் மாலைக் கடைத் தெருவும் இருந்தன. இவற்றிற் பண்டம் விற்போர் தம்மிடம் உள்ள பண்டங்கள் இன்ன வென்பதைக் காட்டுவதற்கு அறிகுறியாகச் சிலவகைக் கொடிகளை நாட்டி வைப்பார். இரவிற் கொடியினாற் புலப்படுத்த இயலாதாகையால் பலவகை விளக்குகளால் புலப்படுத்தி வந்தனர். இச் செய்திகள் சிலப்பதிகாரத் தாலும் பட்டினப்பாலையாலும் விளங்கும். இவ்வழக்கங் கள் இக்காலத்தில், புகைவண்டிகளுக்குப் பகலிற் கொடி களையும் இரவில் விளக்குகளையும் உபயோகிப்பதை ஒக்கும்.

காவிரிப்பூம் பட்டினத்திற் பட்டினப்பாக்கம் என்றும் மருவூர்ப்பாக்கம் என்றும் இரண்டு பெரும் பிரிவுகள் உண்டு. அவற்றுள் பட்டினப்பாக்க மென்பது கடற் கரையை அடுத்த இடம். அங்கே பெரும்பாலும் வணி கர்களே வசித்தார்கள்; சுங்கச்சாலையும் கலங்கரை விளக்கமும் இருந்தன; "தாழை நிறைந்த தெருக்களில் அரசனுக்குரிய பொருள்களைக் காக்கும் காவலாளர்கள் ஒவ்வொருநாளும் சலிப்பின்றிச் சுங்கங் கொள்வார்கள். கப்பலிலிருந்து நிலத்தில் இறக்கப்படுவனவும், நிலத்தி லிருந்து கப்பலில் ஏற்றப்படுவனவுமாகிய அளவில்லாத பண்டங்கள் முன்றிலில் மலைபோலக் கிடக்கும். மாடங் களில் உள்ள மகளிர் கைகளைக்கூப்பி, வெறியாடும் மகளி ரோடு பொருந்தி வேய்ங்குழல் முதலியவற்றை வாசிக்க, விழாக்கொண்ட ஆவணத்தையுடையது அப்பட்டினம். தெய்வத்திற்காக எடுத்த கொடிகளும், விலைப் பண்டங் களை அறிவித்ததற்குக் கட்டிய கொடிகளும், ஆசிரியர்கள் வாதுகருதி வைத்த கொடிகளும், கப்பலின் கூம்பிலுள்ள கொடிகளும் பிறவும் நகர்ப் பக்கத்தில் விரவியிருக்கும். அருகில் கடல் வழியே வந்த குதிரைகளும், நிலத்தின் வழியே வந்த மிளகு பொதிகளும், இமயத்திலுண்டான மணிகளும் பொன்னும், குடகு மலையிற் பிறந்த சந்தன மும் அகிலும், கொற்கைத் துறையிற் பிறந்த முத்தும், கீழ்கடலில் உண்டான பவளமும், கங்கையில் உண்டான பொருள்களும், காவிரியில் உண்டான வளங்களும், ஈழ நாட்டிலிருந்து வந்த உணவுப்பொருள்களும், காழக நாட்டுப் பொருள்களும், பிற அரிய பொருள்களும் கூடி வளம் மிகுந்த பரந்த இடத்தையுடைய தெருக்கள் உள்ளன. பின்னும், அப்பட்டினம் வணிகர் நெருங்கி யிருக்கும் இருப்பிடங்கள் பலவற்றை உடையது. அவ் வணிகர்கள் வலையருடைய மனைகளின் முன்னே நீரில் மீன்கள் அச்சமற்றுத் திரியவும் ஊன் விற்பார் குடிசை களில் ஆடு முதலிய விலங்குகள் அச்சமற்றுத் திரியவும் அச் சாதியரிடமிருந்து கொலையை நீக்குவார்கள்; கள்வரிடமிருந்து களவுத் தன்மையைப் போக்குவார்கள்; தேவர்களுக்கு ஆகுதிகளைக் கொடுத்து வழிபடுவார்கள்; பசுக்களையும் எருதுகளையும் பாதுகாப்பார்கள்; உண வையும் பிறவற்றையும் உரியார்க்கு அளித்து நுகத்தடியி லுள்ள பகலாணி போல நடுவு நிலைமையையுடைய நெஞ்சினராகி உண்மையைக் கூறித் தம் பொருள்களை யும் பிறர் பொருள்களையும் ஒப்ப நினைந்து, கொடுக்கும் பண்டத்தின் மதிப்பிற்கு அதிகமாகப் பொருளைக் கொள்ளாமலும் கொள்ளும் பொருளுக்குக் குறையப் பண்டங்களைக் கொடாமலும் பல பண்டங்களை இலா பத்தை வெளியாகச் சொல்லி விற்பார்கள்" என்று பட்டினப்பாலையில் அவர்களைப்பற்றிய செய்திகள் சொல் லப்பட்டுள்ளன.

ஊனுண்போர் இயல்பையும் களவு செய்வோர் இயல் பையும் மாற்றும் திறமை அவர்கள்பால் இருந்தமை அவர்களுடைய சிறந்த தன்மையை விளக்குகின்றது. நல்லுரையினாலும் அறச்செயலாலுமே அத்தகைய செயல் களை அவர்கள் செய்து வந்தார்கள்.

அவர்களது ஈகைச் சிறப்பை,

    "ஈட்டிய தெல்லாம் இதன்பொருட் டென்பதே
    காட்டிய கைவண்மை காட்டினார் – வேட்டொறும்
    காமருதார்ச் சென்னி கடல்சூழ் புகார்வணிகர்
    தாமரையும் சங்கும்போல் தந்து"

என்ற ஒரு பழைய செய்யுள் கூறுகின்றது; 'சோழ அரசனுக்குரிய காவிரிப்பூம் பட்டினத்திலுள்ள வணிகர் கள் பதும நிதியையும் சங்க நிதியையும் போலப் பொருள்களை வழங்கித் தாம் ஈட்டிய செல்வமெல்லாம் அறம்புரிவதற்கேயாமென்பதை விளக்கும் கொடைத் திறத்தைக் காட்டினார்கள்' என்பது இதன் கருத்து. ஆலயத் திருப்பணி, வித்தியா தருமங்கள், பிற தருமங் களாகியவற்றைச் செய்வதில் இக்காலத்தில் ஒப்பற்று விளங்கும் தனவணிகர்களுடைய கைவண்மைக்கும் அவர்களுடைய முன்னோர்களைப் பாராட்டும் இச்செய்யுள் பொருத்தமாகத் தோற்றுகின்றது.

பிறநாட்டுடன் வியாபாரம்

தமிழ்நாட்டு வணிகர்கள் பிற நாட்டாரோடும் வாணிகம் புரிந்து வந்தனர். பிற நாட்டு வணிகர்கள் இந்நாட்டுக்கு வந்து பல பண்டங்களைப் பெற்றுச் சென் றார்கள். தமிழ்நாட்டு வணிகர்கள் ஈழம், காழகம், கடாரம், சீனம், சோனகம், யவனம் முதலிய நாட்டு வணிகர்களுடன் வியாபாரம் செய்தனர். கப்பல் வியா பாரம் மலிந்திருந்தது. யானைகளும் குதிரைகளும் கப்பல் களில் வந்து இறங்கின. உள் நாட்டில் வியாபாரம் செய் யச் செல்லும் வணிகர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றார் கள். அக்கூட்டத்துக்குச் சாத்து என்று பெயர். வணி கர்களுள் சாத்தன், சாத்தப்பன் என வழங்கும் பெயர் கள் பழைய காலத்தில் சாத்துக்குத் தலைவனாக இருந்த வர்களது பெயரிலிருந்து வந்தனவாகத் தோற்றுகின்றன. வேறு நாட்டுக்குச் செல்ல விரும்பியவர்கள் அந்த வணிகர் கூட்டத்தையே துணையாகக் கொண்டு சென்று வந்தார்கள்.

பல நாட்டு வணிகர்களோடு பழகுவதனாலும் பல நாடுகளுக்குச் சென்று வருதலாலும் அவர்களுக்குப் பல தேசத்து மொழிகள் தெரிந்திருந்தன. மணிமேகலையில் சாதுவனென்னும் வணிகன் ஒருவனுக்கு நாகசாதியின ருடைய பாஷை தெரிந்திருந்ததென்றும், தன்னைக் கொல்ல வந்த நாகர்களிடம் அவன் அப்பாஷையிற் பேசி அவர்களாற் போற்றப்பட்டானென்றும் ஒரு செய்தி கூறப்பட்டுள்ளது. பல தேச சஞ்சாரத்தால் அவர்கள் உலக அனுபவமும் கூரிய அறிவும் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். கணக்கு முதலிய கலைகளில் அவர்கள் சிறந்த ஆற்றலையுடையவர்கள்.

புலவர்கள்

வணிகர்களுள், பழைய காலத்திலும் பிற்காலத் திலும் பல புலவர்கள் இருந்தார்கள். பொன்வாணிகனார், மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் என்பவர்கள் சங்க நூல்களாள் அறியப்படுவார்கள். ஐம்பெருங் காப்பியங் களுள் ஒன்றாகிய மணிமேகலையைச் செய்த சீட்தலைச் சாத்தனாரும், வேறொன்றாகிய குண்டலகேசியை இயற் றிய நாத குத்தனாரும் வணிக மரபினரே.

அதிகாரிகள்

செங்கற்பட்டுக்கு அருகிலுள்ள திருக்கச்சூரென்னும் ஸ்தலத்திலுள்ள சாஸனமொன்று சாத்தனாருடைய வழி வந்த ஒருவரைப்பற்றிய செய்தியை அறிவிக்கின்றது. அவருக்குப் பெரு நம்பி யென்னும் பட்டம் உண்டென் றும் தெரிகிறது. பாண்டிய அரசனுக்கு மந்திரியாக இருந்த குலச்சிறை நாயனார் அப்பட்டம் உடையவர். தக்கயாகப்பரணி யென்னும் நூலின் உரையால் பெரு நம்பி யென்னும் பட்டத்தை அரசனுடைய மந்திரிகளும் அவர்களைப்போன்ற பெரிய அதிகாரிகளும் பெற்று வந் தனரென்று தெரிகின்றது. சாத்தனார் வழிவந்த பெரு நம்பியை ஒரு பெரிய அதிகாரி யென்று கொள்ளலாம். அதனால் வணிக மரபினர் அரசர்களுக்கு மந்திரிகளாகவும் இருந்தமை பெறப்படும்.

சிவனடியார்

பெரியபுராணத்திற் சொல்லப்படும் நாயன்மார் களில் இயற்பகையார், அமர்நீதியார், மூர்த்தியார், காரைக்காலம்மையார், கலிக்கம்பர் என்னும் ஐவரும் வணிகமரபினர். இவருள் மூர்த்தி நாயனார் சிவபெரு மான் திருவருளால் அரசராக இருந்து ஆண்டு வந்தார். அச் செயலால் வணிகர் அரசுரிமையைப் பெறுவது முண்டென்று தோன்றுகிறது. சீவகன் தன்னை வளர்த்த கந் துக் கடனென்னும் வணிகர் பெருமானுக்கு அரசுரி மையை யீந்த செய்தி சீவகசிந்தாமணியிற் காணப் படுகிறது. பதினோராம் திருமுறையிலுள்ள நூல்களை இயற்றிய பலருள் ஒருவரும் பெருந்துறவினருமாகிய பட்டினத்தடிகளின் பெருமையை அறியாதார் யாவர்? அவர் வணிக மரபிற் பிறந்து என்றும் குன்றாத பெரும் புகழை அம்மரபிற்கு உண்டாக்கினார்.

இவர்களையன்றிப் பிற்காலத்தில் வாணிகத்திற் சிறந்த பெருமக்கள், புலவர்கள் முதலியோர் பலர் இருந்தனர்.
------------------------------

4. * தமிழ் வளர்ச்சி

      *தமிழன்பர் மகாநாட்டு வரவேற்புப் பிரசங்கம்; 1933 டிஸம்பரிற் செய்தது.

    " ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
    ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
    மின்னேர் தனியாழி வெங்கதிரோன் றேனையது
    தன்னே ரிலாத தமிழ்."

தமிழின் பழமை

தமிழ் மொழியானது பல ஆயிர வருஷங்களாகப் பல உபகாரிகளால் பலவகையாக வளர்ச்சியை அடைந்து வந்திருக்கிறது. அப்போதிருந்த புலவர்கள் இயற்றிய நூல்களும் உரை முதலியனவும் தமிழ் மக்களின் நாகரிக வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்திருக்கின்றன. அவற்றின் இயல்பு முழுவதையும் நாம் அறிய முடியவில்லை. அவற் றிற் பல இந்தக் காலத்தில் விளங்காதனவாக இருக்க லாம். ஆயினும் அவற்றை அக்காலத்திலிருந்த மக்கள் சிறந்தனவாகக் கொண்டு படித்துப் பயனடைந்து வந்திருக்கிறார்களென்பதை நாம் மறக்க முடியாது.

பழையன போற்றல்

பழைய நூல்கள் உரைகள் முதலியவற்றை நாம் நன்றாகப் பயின்று அறிந்துகொள்ள வேண்டும்; அவற் றைத் தமிழ்நாட்டினர் யாவரும் நன்றாக அறிந்து பய னடையும்படி செய்யவும் வேண்டும். பாடஞ் சொல்லு தலே அதற்கு உரிய சிறந்த முறையாகும். தமக்கு விளங்கும் சில பாடல்களும் நூல்களுமே சிறந்தன வென்றும் தமக்கு விளங்காதனவாயின் அவை குறை பாடுடையனவென்றும் சிலர் எண்ணிக் கொண்டு பழைய நூல்களையும் அவற்றைப் படித்தவர்களையும் புறக்கணிக் கின்றனர். அச்செயல் ஆதரிக்கத் தக்கதன்று.

சில ஆசிரியர்களுடைய நூல்களிலும் உரைகளிலும் உள்ள கருத்துக்கள் நமக்கு உடன்பாடில்லையானால் அவற்றை அலட்சியம் செய்யாமல் அவர்கள் அங்ஙனம் கூறுதற்குரிய காரணங்களை நன்கு ஆராய்ந்து பார்த்து அறியவேண்டும். கால இயல்பு மாறுகையில் ஒரு மொழி யின் நூலமைப்புகளும் மாறிவருவது இயல்பு. முற் காலத்தில் உள்ள சில வழக்கங்களும், சில நூல்களிற் கூறப்பட்ட செய்திகளும் இக்காலத்திற்கு ஒவ்வாதன வாக இருக்கலாம். அதனால் அவை தவறெனத் துணிந்து விடாமல் அவற்றிலுள்ள நன்மைகளை ஆராய்ந்து பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

எழுத்தும் பேச்சும்

தமிழ்மொழியில் நூல்களில் வழங்கும் பாஷை ஒரு விதமாகவும் பேசும் பாஷை ஒரு விதமாகவும் உள்ளன. பேசும்போது காணப்படும் கொச்சை வார்த்தைகளை அப்படியே நூல்களில் அமைத்துக் கொள்வதும், நூல் களில் வழங்கும் நடையிலே பேச முயல்வதும் அனுபவத்தில் நடைபெறக்கூடியன அல்ல. தமிழ்நாட்டின் பல பாகங்களில் ஒரே வகையாகத் தமிழ் வார்த்தைகள் வழங்கவில்லை. ஒவ்வொரு வகுப்பார் பேசுவதிலும் வேற் றுமைகள் இருக்கின்றன. சாதி, சமயம், தொழில், தேசம் என்பவற்றிற்கு ஏற்பச் சில சில வேறுபாடுகள் பேச்சில் அமைந்திருக்கின்றன. அவைகளை யெல்லாம் எழுத்திற் புகுத்துவதும், அவற்றைக்கொண்டு நூல் இயற்றுவதும் நினைத்த பயனை அளிக்கத் தக்கன அல்ல. ஒரு வகை யினர் மற்றொரு வகையினருடைய வார்த்தைகள் சில வற்றை வழங்குவதில்லை. சில இடங்களில் நல்ல பொரு ளைக் கொடுக்கும் சில சொற்கள் வேறு சில இடங்களில் கெட்ட பொருளையே கொடுத்தலைப் பார்க்கிறோம்.

ஆகவே தமிழ் வசனநடையை ஒருவகைப்படுத்த விரும்பும் அன்பர்கள், 'எழுதும் பாஷை வேறாக இருக் கிறதே' என்று எண்ணுவதில் பயனில்லை. பிழையின்றி இயன்றவரையில் யாவருக்கும் விளங்கும் வார்த்தை களையே எழுதும் பழக்கத்தை மேற்கொள்வது நல்ல முறையாகும். வழக்கற்ற சொற்களையும் திரிசொற்களை யும் வசனநடையில் கூடியவரையில் விலக்குதல் நன்று. தம் கருத்தை மற்றவர்கள் எளிதில் அறிந்து பயனுற வேண்டுமென்பதை எழுதுபவர்கள் மனத்திற் கொண்டு எழுதுவதுதான் பயனை அளிக்கும். பேசினாலும் எழுதி னாலும் கருத்தை அறிவிக்கும் நோக்கத்தை முக்கியமாகக் கொள்ள வேண்டுமே யன்றிக் கடின நடையைக் கைக் கொள்ளுதல் கூடாது; கொண்டால், 'தமிழே கடின மானது' என்ற எண்ணம் தமிழ் மக்களுக்கு உண்டாகி விடும்.

பழைய காலத்தில் நூல்களைப் பாடஞ் சொல்லிய ஆசிரியர்கள் மிகவும் எளிய நடையிலேயே கருத்தை விளக்கிவந்தார்கள்.

வசன நூல்கள்

பரம்பரையாகப் பாடங்கேட்கும் வழக்கமே அதிக மாக இருந்தமையால் அக்காலத்தில் தமிழ் வசன நூல் கள் இயற்றப்படவில்லை. பல வருஷங்களுக்கு முன்பு இச்சென்னை நகரத்தில் துரைத்தனத்தார் 'கல்விச் சங்கம்' என ஒன்றை அமைத்துப் பல இடங்களி லிருந்து தமிழ் வித்துவான்களை வருவித்து அவர்களைக் கொண்டு தமிழ் வசனநூல்களை எழுதச் செய்தனர்; வேறு பாஷைகளிலுள்ள நூல்கள் சிலவற்றையும் தமிழில் மொழிபெயர்க்கச் செய்தனர். அவற்றிற் பல அச்சங் கத்தாரேலே பதிப்பிக்கப் பெற்றன. இத்தகைய முயற்சி கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்திருந்தால் பல சிறந்த வசன நூல்கள் வெளிவந்திருப்பதோடு தமிழ் மக்களுக்கு எவ்வளவோ நன்மைகள் ஏற்பட்டிருக்கும்.

பிற்காலத்தில் தமிழில் நல்ல வசன நூல்களை எழுதி வெளியிட்டு உபகரித்தவர்களுள் ஆறுமுக நாவலர் சிறந்தவர். அவர் எழுதிய பாட புத்தகங்கள் நல்லொழுக் கத்தையும் தெய்வபக்தியையும் படிப்பவர்களுக்கு உண் டாக்கும். 'நாவல்' எனப்படும் நவீனத்தை முதலில் எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையாவர். அவருடைய வசனநடை எளியதாகவும் சுவையுடைய தாகவும் இருக்கிறது.

சென்ற முப்பது வருஷங்களில் கணக்கற்ற வசன புத்தகங்கள் தமிழில் வெளிவந்திருக்கின்றன. அவற்றுள் திருத்தமான நடையை உடையன சிலவே. மாணவர் களுக்காக எழுதப்பட்டு வெளிவரும் புத்தகங்கள் இக் காலத்தில் மிக அதிகம். வகுப்பின் தரத்திற்கும் படிக்கும் கால அளவுக்கும் ஏற்றவண்ணம் திருத்தமாக அவை அமைந்தால் கல்வியறிவால் உண்டாகக்கூடிய நற்பயனை யளிக்கும்.

புதிய கொள்கை

சிலர் தாம் மேற்கொள்ளும் புதிய முறைகளை யாவரும் கைக்கொள்ள வேண்டுமென்று இக்காலத்தில் தூண்டுகின்றனர். பலருக்குப் பொதுவான பாஷையில் தங்கள் மனம் போனவாறு தம் கொள்கைகளை அவசரப் பட்டுப் புகுத்திவிடுதல் சரியன்று.

மொழி பெயர்ப்பு

சர்வகலா சங்கத்தார் பல வருஷங்களுக்குமுன்பு சில அறிஞர்களைக்கொண்டு ஆராய்ச்சி செய்து தமிழ் வசன நடையில் இன்ன இன்ன சாஸ்திரச் சொற்களை வழங்கலாமென ஒரு முடிவைச் செய்தார்கள். அம் முடிவிற் கண்டவற்றுள் கொள்ளத்தக்க உபயோகமான சொற்களை நாம் எடுத்து ஆளலாம்.

இக்காலத்தில் விருத்தியாகிவரும் சாஸ்திர அறிவு தமிழ்மக்களிடத்தும் நன்றாகப் பரவ வேண்டுவது இன்றி யமையாததாலின் அத்துறையிலுள்ள நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுதல் அவசியமே யாகும். ஆனால் அவ்வகை மொழிபெயர்ப்புக்கள் ஒரே விதமான முறையாக இருக்கவேண்டும். சாஸ்திர சம் பந்தமாகவும் பொருளின் பெயர்களாகவுமுள்ள மற்ற மொழிச் சொற்களும் வேறு சிலவகைச் சொற்களும் இப்பொழுது சாதாரணமாகத் தமிழில் வழங்குகின்றன. அவற்றை மாற்றிப் புதிய சொற்களை உபயோகிக்கத் தொடங்கினால், அச்சொற்கள் தமிழ்நாடு முழுவதும் வழக்கத்தில் அமைவதற்கு நெடுங்காலம் ஆகும். சொற் களின் வழக்கமும் அவற்றின் பொருள் எளிதில் விளங்கு தலும் முக்கியமேயன்றி எல்லாம் தனித் தமிழ் வார்த்தை களாகவே இருக்கவேண்டுமென்பது அனுபவத்தில் இயலுவதன்று. பழைய இலக்கியங்களிற்கூடச் சில இடங்களில் வேறு மொழிப்பதங்களை அவ்வந் நூலாசிரி யர் அமைத்திருக்கின்றனர். தமிழில் எவ்வளவோ அரிய சொற்கள் இருப்பினும் கருதிய பொருளை அவ்விடத்தில் நன்றாக விளக்குவதில் அச்சொற்களைப் போல மற்றவை அமையாவென்று அப்புலவர்கள் எண்ணியிருக்கலாம்.

மொழிபெயர்க்கும்பொழுது பண்டைத் தமிழிலக் கியங்களில் கலைகளுக்குரியனவாக உள்ள சொற்களை இயன்றவரையில் நாம் உபயோகித்துக் கொள்ளலாம். வேறு பாஷைச் சொற்களை எடுத்தாளும்பொழுது தமிழுக்கு ஏற்றபடி அவற்றின் உருவத்தை மாற்றிக் கொள்ளலாம். ஈரங்கி, உயில், பாதிரி, வங்கி, காபி முதலிய வார்த்தைகள் இங்ஙனமே அமைக்கப்பட்டன வாகும். சுதேசமித்திரன் முதலிய பத்திரிகைகளின் ஆசிரியர்களும், தனவைசியர்களும், யாழ்ப்பாணத்தார் களும் இவ்வகையில் கொண்டிருக்கும் முறைகள் சில வற்றை நாம் கைக்கொள்ளலாம். ஒரு பாஷையிலுள்ள உச்சரிப்பு வேறொரு பாஷையில் வழங்கும்பொழுது அதற்கேற்ப மாறினால்தான் பொருத்தமாக இருக்கும். பழைய இலக்கியங்களில் வடசொற்களை எடுத்தாளுகை யில் புலவர்கள் அவற்றைத் தமிழுக்கு ஏற்ப அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வடமொழிக் கலப்பு

பண்டைக்காலப் புலவர் வடமொழிப் புலவர்களோடு மனங்கலந்து பழகி அவர்களுடைய கருத்துக்களையும் சொற்களையும் தங்கள் நூல்களில் ஆண்டிருக்கிறார்கள். வடமொழியின் தொடர்பினால் தமிழ்மக்கள் எவ்வளவோ அரிய கருத்துக்களை அறிந்து பயனுற்றிருக்கிறார்கள். ஒரு பாஷை வேறு பாஷையின் தொடர்பினால் விரிவுறும். அதனால் அப்பாஷையின் அழகு ஒருபோதும் குறையாது.

பத்திரிகைகள்

தமிழ்மக்கள் தங்கள் தங்கள் ஜீவனத்துக்குரிய பலவகை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதனால் யாவரும் சிறந்த இலக்கியங்களைப் படித்து இன்புறுத லென்பது இயலாத காரியம். புதிய செய்திகளும் கொள் கைகளும் இக்காலத்திற் பத்திரிகைகளின் மூலமாகவே பரவிவருகின்றன. பத்திரிகைகளைப் படிக்கும் வழக்கம் இப்போது அதிகரித்து வருகின்றது. ஆதலின் தமிழ்ப் பத்திரிகையை நடத்துகிறவர்கள் தங்களுடைய கட மையை நன்றாக உணர்ந்து தேச க்ஷேமத்தையும் பாஷையின் நன்மையையும் கருதித் தமிழ்ப் பயிற்சி யுள்ளவர்களை உடன் வைத்துக்கொண்டு உழைத்து வருதல் தமிழகத்துக்குப் பேருபகாரமாக இருக்கும். எந்தப் பொருளும் அதற்குரிய லக்ஷணங்களுடன் அமைந்திருந்தால்தான் அதனை நாம் மதிக்கிறோம்; இல்லையாயின் வெறுக்கிறோம். பாஷை விஷயத்தில் மட்டும் அந்தக் கொள்கைக்கு விலக்கு உண்டென்பது முறையாகாது.

தமிழின் மாறுபாடு

சில வருஷங்களுக்கு முன்வரையில் தமிழின் நிலைமை மிகவும் சிறந்ததாகவே இருந்தது. அரசாட்சி மாறுபாடுகளிலும் கால வேறுபாடுகளிலும் தமிழ்ப் பாஷைக்குக் குறைபாடு நேரவேயில்லை. முகம்மதியர் முதலியவர்கள் அரசாட்சியிற் கூடத் தமிழ் மொழிக்குரிய சிறப்பானது குறையவே இல்லை. பிற்காலத்திலும் திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள் முதலிய இடங்களிலுள்ள மடங்களும், சேது சமஸ்தானம் முதலிய சமஸ்தானங்களும் தமிழ் வித்துவான்களை ஆத ரித்துத் தமிழ் வளர்ச்சிக்குரிய காரியங்களைச் செய்து வந்திருக்கின்றன; செல்வர்கள் பலரும் அங்ஙனமே ஆதரித்து வந்தனர். இந்த ஆங்கில அரசாட்சியில் துரைத்தனத்தாரும் சர்வ கலாசாலையாரும் பாஷை யின் அபிவிருத்திக்குரிய உதவிகள் பலவற்றைச் செய்து வந்தும், நம்மவர்களே பலவகையான தக்க உத்தியோ கங்களை வகித்து நாட்டின் நலத்துக்கு உரிய காரியங் களைச் செய்யும் நிலையில் இருந்தும், நூல்கள் பரவுவதற் குரிய அச்சு முதலிய சாதனங்கள் மலிந்திருந்தும் தமிழ் நூற்பயிற்சி இப்போது மாறுபட்டிருப்பது போல வேறு எக்காலத்திலும் இருந்ததில்லை. இந்த நிலையைப் போக்கு வதற்குரிய வழிகளைப்பற்றி அறிஞர்கள் ஆராய்ந்து செய்கையில் நடைபெறக் கூடியவற்றை மேற்கொண்டால் நலமாக இருக்கும்.

தாய்மொழியில் நினைத்தலும் பேசுதலும்

தமிழ்நாட்டார் பேசும்பொழுதும் எழுதும்பொழு தும் தமிழ்ப் பாஷையையே உபயோகிக்க வேண்டும். ஆங்கிலம் அறிந்தவர்களிற் பெரும்பாலோர் ஆங்கிலத் திலே நினைக்கிறார்கள்; அவர்களால் ஆங்கிலச் சொற்கள் கலவாமற் பேச முடியவில்லை. இத்தகைய நிலை ஒரு பெருங் குறையல்லவா? ஆங்கிலம் படித்த தமிழர்களிற் பெரும்பாலோர் கடிதங்களைத் தமிழில் எழுதும் பழக் கத்தை அடியோடே விட்டுவிட்டார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் மிக அழகாகவும் மற்றவர்கள் வியக்கும்படி யாகவும் பேசியும் எழுதியும் வருகிறார்கள். அம்முயற்சி களையே தாய்மொழியிலும் கொள்ளுதல் முதற்கடமை யன்றோ? ஜி.யூ. போப்பையர் முதலிய அயல் நாட்டின ரும் தமிழின் இனிமையை உணர்ந்து அதிலுள்ள பழைய நூல்களை மிகவும் உழைத்துப் படித்து அறிந்து மகிழ்ந்திருக்கிறார்கள்; தமிழ்ப்பயிற்சி உள்ளவர்களுக்கு அவர்கள் ஊக்கமளித்தும் வந்திருக்கிறார்கள். தமிழர்க ளாகிய நாம் அத்தகைய முயற்சிகளைச் செய்யவேண்டிய அளவு செய்யாமல் இருக்கிறோம். ஆங்கிலம் அறிந்த தமிழர்கள் தமிழிற் பேசப் பழகிவிட்டால் தங்களுடைய கருத்தை நன்றாக வெளியிட முடிகிறதென்றும் ஊக்கம் உண்டாகிறதென்றும் சொல்லுகிறார்கள். ஆதலின் அச் செயலை யாவரும் விடாமல் மேற்கொள்ளுதல் நலம்.

நூல்களை வெளியிடுதல்

தமிழ் நூல்களைத் தக்க அறிஞர்களைக் கொண்டு வெளியிட முயற்சி செய்யவேண்டும். ஒருவர் மேற் கொண்ட முயற்சியையே பலர் மேற்கொண்டு உழைப் பதைக் காட்டிலும் பலவகை முயற்சிகளில் ஈடுபட்டு உழைத்தால் தமிழ் பல துறைகளிலும் விருத்தியடையும். ஒருவர் உழைப்பினாற் செய்த ஒன்றையே பலவேறு வகையிற் கைக்கொண்டு பல உருவத்தில் தம்முடைய உழைப்பின் பயனாகத் தோற்றும்படி வெளியிடுதல் முறையாகாது. தமிழ் அறிஞர்கள் தங்களுடைய ஆற் றலைத் தனித்தனியே காட்டும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

எந்தத் துறையில் நாம் ஒரு முயற்சியை மேற் கொண்டாலும் அந்தத் துறையில் வல்ல அறிஞர்கள் சிலரையேனும் வைத்துக்கொண்டு அதனைச் செய்விக்க வேண்டும். எல்லோரும் எல்லாவற்றையும் செய்வ தென்பது அனுபவ சாத்தியமன்று.

திண்ணைப் பள்ளிக்கூடங்கள்

பண்டைக்காலத்துத் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் தமிழ்க்கணித வகைகளையும் நிகண்டுகளையும் இன்றி யமையாத இலக்கிய இலக்கணங்களையும் கற்பித்து வந்தனர். பழைய முறைப்படி பாடங் கேட்டவர்களுக்கு அவை உபயோகமுள்ள நூல்களாக இருந்தன. சங்க நூல்கள் வரையில் அவர்கள் தங்கள் பயிற்சியை முறை யாகவே வளர்த்து வந்தனர். அந்த முறை இப்பொழுது அடியோடே மாறிவிட்டது. அதனால்தான் பாஷையின் அபிமானமும் குறைவுபட்டது.

பாடம் சொல்லுதல்

முறையாகப் பாடஞ் சொல்லுதலும் பாடங் கேட்ட லும் மலிந்திருந்த காலத்திலேதான் கம்பர், ஒட்டக் கூத்தர் முதலிய பெரும்புலவர் இருந்தனர் என்பதை நாம் எண்ணவேண்டும். அவர்களைப் போன்றவர்களை இக்காலத்திற் பார்க்கவே முடியாது; இப்பொழுது பாஷை உள்ள நிலையில் இனிப் பார்த்தல் அரிதெனத் தோற்றுகிறது. ஒரு நூலை முற்றும் படித்து அறிவதற் குள் ஆராய்ச்சிகளையும் அபிப்பிராயங்களையும் சொல்லத் தொடங்கும் இயல்பு இக்காலத்தில் வளர்ந்து வருகிறது. தாம் படித்ததே போதுமென்ற திருப்தியும் பலருக்கு உண்டாகின்றது. சில நூல்களைப் படித்த பயிற்சியைக் கொண்டு விரிந்துள்ள தமிழ்ப் பாஷையிலேயே திருத்தம் செய்ய அவர்கள் முற்பட்டுவிடுகிறார்கள்.

பாடஞ்சொல்லுதலின் அவசியத்தை நன்றாகத் தமிழ் நாட்டார் உணரவேண்டும். பாடங்கேட்பதால் அறிந்துகொள்ளும் பல அரிய நுட்பங்களை எவ்வளவு சிறந்த அறிவுடையவராக இருப்பினும் தாமாகவே படித்து அறிந்துகொள்ள இயலாது. முறையாகப் பாடங் கேட்டவர்களுக்கும் தாமே படித்தவர்களுக்கும் வேறுபாடு இருப்பதை எந்தக் காலத்திலும் காணலாம்.

ஒற்றுமை

சங்ககாலத்திலும் பிற்காலங்களிலும் பலவகையில் வேறுபாடுடைய புலவர்கள் தமிழ் வளர்ச்சிக்குரிய முயற்சியில் தங்கள் வேற்றுமைகளை மறந்து மனம் ஒன்றி உழைத்தார்கள். சைவர்களும் வைஷ்ணவர் களும், ஜைனர்களும், பௌத்தர்களும், பிறரும் ஒருங் கிருந்து தமிழாராய்ந்து வந்தனர். வேறு விஷயங்களில் இருந்த பேதங்கள் மொழி வளர்ச்சிக்கு இதுவரையில் தடை செய்ததில்லை. இந்தக் காலத்திலோ யாதொரு நலனுமின்றி நாடு, சாதி, சமயம் முதலியவற்றிலுள்ள கொள்கையின் வேறுபாட்டைப் பாஷை சம்பந்தமான முயற்சியிலும் சிலர் புகுத்தி வருவது மிகவும் வருந்து தற்குரியது. மன ஒற்றுமை நீங்கினால் எந்தக் காரிய மும் செய்ய இயலாது; ஆதலின் பலதிறப்பட்ட அறிஞர் களும் ஒன்றுகூடி ஒற்றுமையாகப்பழகித் தமிழ் வளர்ச்சி யொன்றையே நோக்கமாகக் கொண்டு பாடுபட வேண்டும்.

புலவர் நாள்

நமக்குப் பல தமிழ் நூல்களை இயற்றியளித்த பரமோபகாரிகளாகிய புலவர்களையும் அவர்களுடைய அரும் செயல்களையும் நாம் மறவாமல் அவர்களுடைய நாட்களைக் கொண்டாடி வரவேண்டும்.

தமிழபிவிருத்தி

மதுரையில் சேதுபதி வேந்தரவர்களைத் தலைவர் களாகக்கொண்டு விளங்கும் தமிழ்ச் சங்கமும், திருவை யாற்றிலுள்ள அரசர் கல்லூரியும், சென்னைச் சர்வ கலா சாலையும், அண்ணாமலைச் சர்வகலாசாலையும், தனவைசி யர்களுடைய நகரங்கள் முதலியவற்றிலுள்ள கலாசாலை களும், இத்தமிழ் நாட்டிலும், இலங்கையிலுமுள்ள வேறு சில சங்கங்களும் தமிழ் வளர்ச்சியைக் குறித்துப் பல தொண்டுகளை ஆற்றி வருகின்றன. தமிழறிஞர்களிற் சிலர் தமிழ் நூல்களைப் பாடம் சொல்லும் முயற்சியை மேற்கொண்டிருக்கின்றனர். இப்போது திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தின் தலைவர்களாக உள்ளவர்கள் தமிழறி வின் வளர்ச்சியைக் கருதி நிலையான தருமங்களைச் செய்து வருதல் யாவரும் பாராட்டுதற்குரியது.

தமிழபிவிருத்தியின் திறத்தில் மேற்கொள்ளக் கூடிய துறைகள் இன்னும் பல இருக்கின்றன. செல்வர்களும் அறிஞர்களும் மற்றவர்களும் தங்கள் தங்கள் ஆற்றலைக் கொண்டு செய்யத்தக்க காரியங்களைச் செய்தால் தமிழ் நாட்டிற்குப் பேருதவியாக இருக்கும்.
* * * *

    "எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
    திண்ணிய ராகப் பெறின்."
--------------------------

5. பெரிய வைத்தியநாத ஐயர்


வாழ்க்கை வரலாறு

பழைய சங்கீத வித்துவான்களுள் வைத்திய நாதையரென்ற பெயர் கொண்டவர்கள் பலர். பெரிய வைத்தியநாதையர், சின்ன வைத்தியநாதையர், மகா வைத்தியநாதையர், வீணை வைத்தியநாதையர், பிரம் மாண்ட வைத்தியநாதையர், ஆனை வைத்தியநாதையர், அறந்தாங்கி வைத்தியநாதையர், ஆவூர் வைத்திய நாதையரென இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்களில் ஒவ்வொருவரும் அக்காலத்தில் ஒவ்வொரு வகையிலே சிறந்த வித்துவானாக இருந்தனர்.

பெரிய வைத்தியநாதையரென்பவர் சோழ நாட்டி லுள்ள தேவூரென்னும் கிராமத்திற் பிறந்தவரென்பர். இவர் வடம வகுப்பினர். சிவகங்கைச் சமஸ்தான வித்து வானாக முதலில் இவர் விளங்கினார். அதனால் சிவகங்கை வைத்தியநாதையரென்றும் இவரை வழங்குவார்கள். இவருக்குத் தம்பி முறையுள்ள மற்றொரு சங்கீத வித்வா னுக்கும் வைத்தியநாதயைரென்னும் பெயர் அமைந் திருந்தது. அதனால் இவரை பெரிய வைத்தியநாதைய ரென்றும், மற்றவரைச் சின்ன வைத்தியநாதையரென் றும் யாவரும் சொல்லி வந்தனர்.

பெரிய வைத்தியநாதையருக்குச் சங்கீதம் கற்பித் தவர் இன்னாரென்று இப்பொழுது விளங்கவில்லை. இவருடைய சங்கீதத் திறமை மிக்க வன்மையுடையது. இவருக்குக் கனத்த சாரீரம் அமைந்திருந்தது. அது மூன்று ஸ்தாயியிலும் தடையின்றிச் செல்லும். பாடும் போது அவ்வொலி கால் மைல் தூரம் கேட்கும்.

பழக்கம்

புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருவனந்தபுரம் முதலிய சமஸ்தானங்களிலும், திருநெல்வேலி ஜில்லா விலுள்ள ஜமீன்களிலும் தளவாய் முதலியார், வட மலையப்பப் பிள்ளையன் முதலியவர்கள் பரம்பரையில் உதித்த பிரபுக்களிடத்திலும் இவர் பழக்கமுடையவராக இருந்தார். அங்கங்கே இவர் பாடிப்பெற்ற பரிசில்கள் பல.

கனத்த சாரீரம்

இவருடைய கனத்த சாரீர விசேஷத்தால் இவ ருடைய பாட்டை ஒரே சமயத்தில் பலர் கேட்டு அனு பவித்து வந்தனர். இவருடைய சங்கீதம் நடைபெறும் இடங்களில் அளவற்ற ஜனங்கள் கூடுவார்கள். சில சம யங்களில் இடம் போதாதிருந்தால் அருகிலுள்ள மரங் களின் மேலும் வீட்டுக் கூரைகளின் மேலும் ஏறியிருந்து ஜனங்கள் ஆவலுடன் கேட்டு இன்புறுவார்கள். பல வருஷங்களுக்குமுன்பு வைத்தீசுவரன் கோயிலிற் கும் பாபிஷேகம் நடந்தபோது அத்தலத்திலுள்ள சித்தா மிர்தத் தீர்த்தக்கரை மண்டபத்தில் இவர் பாடினார்; அக் காலத்தில் பலர் அத்தீர்த்தத்திலே கழுத்தளவு ஜலத்தில் இருந்து கேட்டு இன்புற்றார்களாம்! அருகில் வந்திருந்து கேட்க வேண்டுமென்பது இவர் திறத்தில் இல்லை.

அங்க சேஷ்டைகள்

பாடும்போது பலவகையான அங்க சேஷ்டைகள் செய்வது இவருக்கு இயல்பு. எத்தனை விதமாகச் சரீரத்தை வளைத்து ஆட்டி முறுக்கிக் குலுக்கிக் காட்டலாமோ அத்தனை விதங்களையும் இவர் செய்வார்; ஊக்கம் மிகுதியாக ஆக அந்தச் சேஷ்டைகளும் அதி கரிக்கும். நீண்ட குடுமியை யுடையவராதலின் இவர் பாடும்போது குடுமி அவிழ்ந்துவிடும்; தலையைப் பலவித மாக ஆட்டி அசைத்துப் பாடுகையில் அந்தக் குடுமி மேலும் கீழும் பக்கத்திலும் விரிந்து சுழலும். இவர் அதை எடுத்துச் செருகிக் கொள்வார்; அடுத்த கணத்தி லேயே அது மீண்டும் அவிழ்ந்துவிடும். கழுத்து வீங்கு தல், கண்கள் பிதுங்குதல், முகம் கோணுதல், கைகளை உயர்த்தல் முதலிய செயல்கள் இவர்டைய உத்ஸாகத் தின் அறிகுறிகள். வாயைத் திறந்தபடியே சிறிது நேரம் இருப்பார்; ஒருவரைப் பார்த்து விழித்துக் கொண்டே முத்தாய்த்துச் சந்தோஷிப்பார். ஸ்வரம் பாடும்போதும், மத்தியம காலம் பாடும்போதும் இவ ருக்குச் சந்தோஷம் வந்துவிட்டால், அருகில் யாரேனும் இருப்பாராயின் அவர் துடையிலும், முதுகிலும் ஓங்கி அடித்துத் தாளம் போடுவார். இப்படி ஆடி ஆடிப் பாடு வதோடு நில்லாமல் முழங்காலைக் கீழே ஊன்றி எழும்பி எழும்பி நகர்ந்து கொண்டே செல்வார். பாட்டு ஆரம் பித்த காலத்தில் இவர் இருந்த இடத்திற்கும், அது முடிந்த பிறகு இருக்கும் இடத்திற்கும் இடையில் உள்ள தூரத்தைக் கொண்டே இவருக்கு இருந்த உத்ஸாகத்தின் அளவை மதிப்பிடலாம். இவரு பாடும்போது தாம் நகர்ந்து செல்வதல்லாமல் தம்முடைய கையடிக்கும், மயிர் வீச்சிற்கும் மற்றவர்கள் அகப்படாமல் இருக்கும் வண்ணம் அடிக்கடி அவர்களையும் நகர்ந்து செல்லும்படி செய்வார். இவருக்குப் பொடிபோடும் வழக்கம் உண்டு. பாடிக்கொண்டே வருகையில் இவருடன் இருப்பவர் இடையிடையே பொடி டப்பியை எடுத்துத் திறந்து நீட்டுவார். இவர் இரண்டு விரல்களால் நிறைய எடுத்துக் கொண்டு போடுவார்; பின்பு கையை உதறுவார்; அப்பொடி அருகிலுள்ளவர்கள் கண்களிலும் வாய்களிலும் விழும். இந்தக் காரணங்களாலும் இவருக்கு அருகில் இருந்து கேட்கவேண்டுமென்ற அவா ஜனங்களுக்கு உண்டாவதில்லை. அவர்கள் எவ்வளவுக் கெவ்வளவு தூரத்திலிருந்து கேட்கிறார்களோ அவ்வளவுக் கவ்வளவு நன்றாகவும், அமைதியாகவும் இவருடைய பாட்டின் இனிமையை அனுபவித்து வருவார்கள்.

சங்கீதச் சிறப்பு

இவ்வளவு குறைபாடுகள் இவர்பால் அமைந்திருந் தாலும், இவருடைய சாரீர பலமும் சங்கீதச் சிறப்பும் அவற்றை மறைத்தன. இவருக்கு இணையாக இருந்து பாடுவோரே அக்காலத்தில் தென்னாட்டில் இல்லை. மற்ற வித்துவான்களைக் கண்டு பொறாமை கொள்ளும் இயல்பு இவர்பால் இராது. தமக்கு முன்பு யார் பாடினாலும் சந்தோஷமாகக் கேட்டுப் பாராட்டும் தன்மை இவர்பால் விளங்கிற்று. ஆயினும், வேறு எவரும் இவருக்குமுன் பாடத் துணிவதில்லை. "அந்த அசுரனுக்கு முன்பு யார் ஐயா அச்ச மில்லாமல் பாடுவார்கள்?" என்று வித்துவான்கள் சொல்லுவார்களாம்.

இவர் ரக்தி ராகங்களையே பெரும்பாலும் பாடுவார். பெரியோர்கள் இயற்றிய பல கீர்த்தனங்கள் இவருக்குத் தெரியும். சிந்து, தெம்மாங்கு முதலிய உருப்படிகளில் இவருக்கு மிக்க பயிற்சி உண்டு. இவர் எங்கே பாடி னாலும் ஒரு தெம்மாங்காவது பாடக் கேளாவிட்டால் சபையோருக்குத் திருப்தி உண்டாகாது. தெம்மாங்கை இனிமையாகப் பாடும் திறமையால் இவரைத் தெம் மாங்கு வைத்திய நாதையரென்றும் கூறுவதுண்டு. பல்லவி பாடுதலிலும் இவர் சமர்த்தர். இவரிடம் பக்க வாத்தியம் வாசித்தவர்களுள் கடவித்துவான் போலகம் சிதம்பரையரென்பவரும், கிஞ்சிரா ராதாகிருஷ்ணைய ரென்பவரும் என் ஞாபகத்தில் உள்ளார்.

பாஷாஞானக் குறைவு

வைத்தியநாதையருடைய சங்கீதஞானம் மிக உயர்ந் தது; ஆயினும் தமிழிலோ வடமொழியிலோ இவருக்கு ஞானம் இல்லை; அதனை இவர் விரும்பவுமில்லை. கீர்த் தனங்களையும், பிற உருப்படிகளையும் வைத்துக்கொண்டு தான் சங்கீதத் திறமையைக் காட்ட வேண்டுமென்ற அவசியம் இவருக்கு இல்லை; இவருடைய சங்கீதமானது சாகித்யத்தைத் தன் மனம்போனபடி இழுத்துக் கொண்டே செல்லும். சாகித்யத்தினால் ஒரு பயனு மில்லையென்பது இவருடைய கொள்கை.

பல்லவி பாடத் தொடங்கும்போது இவருடைய மனத்துக்குத் தோற்றியவை யெல்லாம் சாகித்யமாக அமைந்துவிடும். இவர் இவ்வாறு பாடும் பல்லவிகளுள் சில வருமாறு:-

    "தாவரப் பத்தியில் நாலு தூண் இருக்குது!"
    "கொல்லா!- குறடிறுகப் பிடி கொல்லா!"
    "இடியிடிக்குது மழை குமுறுது எப்படிநான் போய்வருவேன்!"

இவருடைய அங்க சேஷ்டைகளையோ சாகித்யத் திலுள்ள பிழைகளையோ யாரேனும் எடுத்துச் சொன்னால், "உங்களுக்கு வேண்டியது சங்கீதந்தானே? மற் றவை எப்படி இருந்தால் என்ன? நீங்கள் என்னைத் திருத்தவேண்டிய அவசியமே இல்லை" என்று தைரிய மாகக் கூறிவிடுவார். இவருக்கு இருந்த சங்கீதத் திற மையும், சென்ற இடங்களில் இவருக்கு உண்டான பெரு மதிப்பும் அந்தத் தைரியத்தை இவருக்கு அளித்தன.

சுகவாழ்வு

மனிதனாகப் பிறந்தால் சுகமாக வாழவேண்டுமென் பது இவருடைய நோக்கம். பலவகையான சுகங்களை யும் குறைவின்றி அனுபவிப்பதைவிட இவ்வாழ்க்கையில் வேறு பிரயோசனமில்லையென்றே இவர் எண்ணியிருந்தார். அழகிய உருவமுடையவராதலின் அந்த உருவத்துக் கேற்றபடி அலங்காரம் செய்து கொள்வார். மீசையை நன்றாக முறுக்கி அழகு படுத்திக் கொள்வார். விலை யுயர்ந்த மோதிரங்கள், கடுக்கன், தோடா, ரத்னஹாரம் முதலியவற்றை அணிந்திருப்பார். உடை வகையிலும் உணவு வகைகளிலும் குறைவில்லாதபடி அமைத்துக் கொள்வார். எப்பொழுதும் ஐயம்பேட்டை இரட்டை உருமாலை இவர் மேலே இருக்கும்.

சொக்கம்பட்டி ஜமீன்தாரால் அளிக்கப்பட்ட பெட்டி வண்டி ஒன்று இவரிடம் இருந்தது. அதில் பூட்டுவதற் குரிய சிறந்த காளைகள் இரண்டின் கழுத்தில், நெடுந் தூரம் கேட்கும் ஒலியையுடைய சலங்கைகள் கட்டப்பட் டிருக்கும். அந்த வண்டியில் இவர் திண்டு முதலிய ஆடம்பரங்களுடன் போவதைப் பார்ப்பவர்கள் இவரை ஒரு பெரிய ஜமீன்தார் என்றே எண்ணுவார்கள். நெடுந் தூரத்தில் வண்டி வரும் போதே காளைகளின் சலங்கை யொலி இவருடைய வரவைத் தெரிவிக்கும்.

ஸ்ரீ சுப்பிரமணியதேசிகர் பழக்கம்

ஒரு சமயம் பெரிய வைத்தியநாதையர், திருநெல் வேலி ஜில்லாவிலுள்ள சில ஜமீன்களுக்குப் போய் வந் தார். அக்காலத்தில் திருவாவடுதுறையாதீனத்தில் சின்னப்பட்டத்தில் இருந்த மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் கல்லிடைக்குறிச்சி மடத்தில் இருந்து வந்தார். அவர் சங்கீதத்திலும், தமிழிலும், வடமொழியிலும் தக்க பயிற்சியும், பேரன்பும் உடையவர். வித்துவான்களின் அருமையை யறிந்து ஆதரிக்கும் வள்ளல். பெரிய வைத்தியநாதையருடைய இசைப் பெருமையை அவர் கேள்வியுற்று இவருடைய பாட்டைக் கேட்கவேண்டு மென்று விரும்பியிருந்தனர். இவரும் தேசிகருடைய சிறந்த இயல்புகளையும், வித்துவான்களின் தரம் அறிந்து பாராட்டி ஆதரிக்கும் தன்மையையும் உணர்ந்து கல்லிடைக்குறிச்சி சென்றார். தேசிகர் இவரை நல்வரவு கூறி உபசரித்தனர்; இவருடைய சங்கீதத்தையும் கேட்டு மகிழ்ந்தார். சங்கீத உலகத்தில் அவ்வப்போது தோன்றுகின்ற அரிய வித்துவான்களுள் இவர் ஒருவ ரென்பதை அவர் உணர்ந்து கொண்டார். இவருடைய சங்கீத ஆற்றலைக் கொண்டாடி தக்க சம்மானங்களைச் செய்து அனுப்பினார். அதுமுதல் இவ்விருவருக்கும் பழக்கம் அதிகமாயிற்று. வைத்தியநாதையர் சம்மானங் களை எதிர்பாராமல் தாமே கல்லிடைக்குறிச்சிக்கு அடிக் கடி வலிய வந்து தம்முடைய இசை விருந்தால் தேசி கரை மகிழ்விப்பார். இடமறிந்து சந்தோஷிக்கும் ரஸிகர் களிடத்தில் வித்துவான்களுக்குத் தனியான அபிமானம் இருப்பது இயல்பன்றோ?

'சங்கீத மருந்து'

ஒரு சமயம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்கு இடுப் பில் வாயுப் பிடிப்பினால் உபத்திரவம் உண்டாயிற்று; நிமிரவும், நடக்கவும், சரியானபடி உட்காரவும் முடிய வில்லை. இடைவிடாமல் வலி இருந்து வந்தது. அவ ருடைய நிலைமையைக் கண்டு மடத்தில் இருந்தவர்கள் மிக்க வருத்தம் அடைந்தார்கள். தக்க வைத்தியர்களைக் கொண்டு மருந்துகளைத் தடவச் செய்தும் ஒற்றடம் கொடுத்தும் வந்தனர். ஆயினும், வாயுவின் கொடுமை குறையவில்லை. இங்ஙனம் சில தினங்கள் சென்றன.

ஒருநாள் தமக்கு இருந்த வலி தாங்கமாட்டாமல் தேசிகர் உட்கார்ந்திருந்தார். திடீரென்று அவர் முகத் தில் ஒரு மலர்ச்சி உண்டாயிற்று. எதையோ உற்றுக் கேட்பவர்போல இருந்தார்; பிறகு அருகில் இருந்தவர் களை நோக்கி, "பெரிய வைத்தியநாதையரவர்கள் வரு கிறார்கள்; அவர்களுடைய வண்டிக் காளையின் சலங்கை யொலி என் காதில் விழுகிறது; அவர்கள் பாட்டைக் கேட்டு நெடுநாளாயிற்று. அவர்கள் வந்தால் தடை செய்யாமல் உள்ளே அழைத்து வாருங்கள்" என்றார். நோயினால் துன்புறும்போது இவர் வந்தால் பின்னும் துன்பமுண்டாகுமென்று மடத்திலுள்ளவர்கள் தாமே எண்ணிக்கொண்டு ஒருவேளை இவரை உள்ளே விடாமல் இருந்துவிட்டால் என் செய்வதென்பது தேசிகருடைய எண்ணம்.

பெரிய வைத்தியநாதையர் மிக்க உத்ஸாகத்தோடு மடத்துக்குள் நுழைந்தார். இவர் வரவை எதிர்பார்த் துக் கொண்டிருந்த காரியஸ்தர்கள் இவரை உபசாரத் தோடு உள்ளே அழைத்துச் சென்றார்கள். அதனால் இவர் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது. தேக அசௌக்கியத்தால் தேசிகர் வருந்துவதை இவர் அறி யார். உள்ளே நுழையும்போதே, "ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே' என்ற கீர்த்தனத்தின் பல்லவியைச் சொல்லிக் கொண்டு வந்தார்.

சுப்பிரமணிய தேசிகர் இவரை முகமலர்ச்சியுடன் வரவேற்றார்; "இருக்க வேண்டும்; யானைவரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதைப்போல் சங்கீத மத யானையாகிய உங்கள் வரவை உங்கள் வண்டிக் காளை களின் சலங்கையொலி முன்னே தெரிவித்தது; நெடு நாளாகக் காணவில்லையே யென்றிருந்த வருத்தம் நீங்கி மிக்க சந்தோஷம் உண்டாயிற்று" என்றார்.

பெரிய வைத்தியநாதையர் புன்னகையோடு உட் கார்ந்து பாட ஆரம்பித்து விட்டார். காம்போதி ராகத்தை ஆலாபனம் செய்தார்; பல்லவி பாடினார்; ஸ்வரம் பாடினார்; இப்படி மூன்று மணி நேரம் தம் முடைய கான வர்ஷத்தைப் பொழிந்தார்.

சுப்பிரமணிய தேசிகர் தம் வாயு உபத்திரவத்தை மறந்து கேட்டுக்கொண்டிருந்தார். பெரிய வைத்திய நாதையருடைய இசைமாரி அந்த நோயின் வெம்மையை அவித்து மறைத்துவிட்டது. தேசிகர் தம் தேகத்தையே மறந்து கேட்டபோது அத்தேகத்திலுள்ள நோய்த் துன் பம் எப்படி நினைவுக்கு வரும்?

சங்கீதம் ஒருவாறு நின்றமை இனிய மழை பெய்து ஓய்ந்ததுபோல் இருந்தது. தாம் அதுகாறும் நோயை மறந்து கேட்டது தேசிகருக்கே மிக்க வியப்பை உண் டாக்கிற்று; "உங்களுக்குப் பெரிய வைத்தியநாதைய ரென்ற பெயர் அமைந்திருப்பது பொருத்தமானதே. சில நாளாக நான் வாத நோயினால் மிகவும் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறேன். இடுப்பை வாயு பிடித்துக் கொண்டது. நிமிஷத்துக்கு நிமிஷம் பதினாயிரம் தேள் கொட்டுவது போன்ற வலி இருந்தது. எந்த வைத்தியத் துக்கும் அது பயப்படவில்லை. உங்களுடைய பாட்டு இந்த மூன்றுமணி நேரமாக அதன் ஞாபகமே இல்லாமற் செய்து விட்டது. இப்பொழுதும் அந்த உபத்திரவம் தலை நீட்ட வில்லை. உங்களுடைய சங்கீதமாகிய மருந்து ஆச்சரியமான பலனை உடையது. அதைக் கொண்டு வைத்திய செய்து நோயை மறக்கச் செய்த நீங்கள், பெரிய வைத்தியரென்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இன்றைக்கு நீங்கள் செய்த உபகாரத்தை வேறு யாரால் செய்ய முடியும்?" என்று தேசிகர் இவரை நோக்கிக் கூறினார்.

"எல்லாம் சந்நிதானத்தின் ஆதரவின் விசேஷமே யன்றி வேறொன்றுமில்லை. இங்கே வந்தால் எனக்கே ஒரு தனி உத்ஸாகம் உண்டாகிவிடுகிறது. மற்ற இடங் களில் நான் பாடும் முறை வேறு; இங்கே பாடும் விதம் வேறு!" என்றார் இவர்.

அன்றைக்கு முதல் நாள் காசியிலிருந்து வந்த பக்தி மானும், ஆதீனத்து அடியவருமாகிய தம்பிரான் ஒருவர் சுப்பிரமணிய தேசிகருக்காக உயர்ந்த பட்டில் சரிகை வேலைகளுடன் மெத்தை, தலையணை, திண்டு, கொட்டை முதலியவைகளைக் காசியிலே தைக்கச் செய்து, அவற் றைத் திருநெல்வேலிக்குக் கொணர்ந்து நல்ல பஞ்சை அடைத்துக்கொண்டு கல்லிடைக் குறிச்சிக்கு வந்து அவற்றைத் தேசிகருக்குமுன் வைத்து வணங்கி, " சந்தி தானத்தின் திருமேனிக்கு உவப்பாக இருக்க வேண்டு மென்று அடியேன் இவற்றைக் கொணர்ந்தேன்; அங்கீ கரித்தருளவேண்டும்" என்று விண்ணப்பம் செய்து கொண்டார். தேசிகர் அவற்றை எடுத்துத் தனியே உள்ளே வைக்குமாறு காரியஸ்தர்களுக்கு உத்தரவிட் டிருந்தார்.

மறுநாள் பெரிய வைத்தியநாதையர் பாடி நோயை மறக்கச்செய்த நிகழ்ச்சி நடந்தது. தேசிகர் அந்த மெத்தை முதலியவற்றை எடுத்து வரச்செய்து பெரிய வைத்தியநாதையரைப் பார்த்து " நீங்கள் இவற்றை உபயோகித்துக்கொள்ள வேண்டும். உங்களால் என் நோயை மறந்தேன். அதற்கு இந்த மெத்தை முதலி யவை அறிகுறியாக இருக்க வேண்டும்" என்றார். சுக புருஷராகிய வைத்தியநாதையருக்கு உண்டான மகிழ்ச் சிக்கு அளவில்லை. மெத்தை முதலியன இவருடைய வண்டியிற் கொணர்ந்து வைக்கப்பட்டன.

அப்போது, அவற்றை முதல்நாள் கொண்டுவந்த தம்பிரானுக்குக் கண்களில் நீர் தோன்றியது. அருமை யாகப் பெற்று வளர்த்த குழந்தையை அதன் தந்தை சிறிதும் யோசியாமல் யாருக்காவது கொடுத்துவிட்டால், அக்குழந்தையைப் பெற்ற தாய்க்கு எவ்வளவு துக்கம் இருக்குமோ அத்தனை துக்கம் அவருக்கு இருந்தது. அருகில் இருந்தவர்களுக்கோ இந்த வித்துவானைக் காணக் காணக் கோபம் உண்டாயிற்று; ' இவன் எங்கே வந்தான்?' என்று முணுமுணுத்தார்கள். தேசிகரோ, ' இந்தச் சமயத்தில் இவர் வந்து நம் துன்பத்தை மறக் கச் செய்தாரே!' என்ற நன்றியறிவினால் முகமலர்ச்சி யுடன் இருந்தார். இப்படிப் பலவகையான அபிப்பிரா யங்கள் கலந்திருந்த அக்கூட்டத்தில, வைத்தியநாதையர் யானையைப்போலவே கம்பீரத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தார். தம்பிரான்களுடைய கோபக்குறிப்பை இவர் லக்ஷியம் செய்யவில்லை. சந்தோஷ மிகுதியானால் தேசிகரை யோக்கி, "சந்நிதானத்தில் கொடுத்த மெத்தை யையும், மற்றவைகளையும் அருமையறிந்து உபயோகப் படுத்துபவர் என்னைப் போல வேறு யாரும் இரார். நான் இதுகாறும் பெற்ற பொருள்களுள் இவற்றிற்குச் சம மானவை வேறு இல்லை. மிகவும் சந்தோஷம். எப் போதும் சந்நிதானத்தின் அன்பு குறையாமல் இருக்க வேண்டுமென்பதே என் பிரார்த்தனை" என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டு சென்றார். போகும்போதே மெத்தை முதலியவற்றை வண்டியிலே விரிக்கச்செய்து பேருவகையோடு ஏறிக்கொண்டு சென்றார்.

இவர் சென்ற பின்பு, தம்பிரான் முதலியவர்க ளுடைய உள்ளக் கருத்தை அறிந்துகொண்ட சுப்பிர மணியதேசிகர், "மெத்தையை இவருக்குக் கொடுத்தது பற்றி உங்களுக்கு வருத்தம் இருப்பதாகத் தெரிகிறது. இவர் இன்று எனக்குச் செய்த மகோபகாரத்திற்கு என்னதான் செய்யக்கூடாது? நான் படும் அவஸ்தை உங்களுக்கு நன்றாகத் தெரியுமே. இவ்வளவு நேரம் நான் அதை மறந்திருந்தது எவ்வளவு ஆச்சரியம்! இந்த நன்மையை நீங்கள் நினைக்கவில்லையே! அன்றியும் *துறவியாகிய எனக்கு மெத்தை முதலியவை எதற்கு?" என்று சமாதானம் கூறினார்.
-----------
* ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்கள் பகலில் ஒரு தலையணையை மட்டும் வைத்துக்கொண்டு, வெறுந் தரையிலேதான் படுத்துக்கொள்வார்கள். இரவில் ஒரு முழ அகலமுள்ள ரத்ன கம்பளத்தை விரித்துக்கொள்வார்கள். சில சமயங்களில் அங்க வஸ்திரத்தையே சுருட்டித் தலையணையாக வைத்துக் கொள்வது முண்டு.

சங்கீதமா? வலிப்பா?

அக்காலத்தில் எட்டயபுரம் ஜமீன்தார் மைனராக இருந்தமையால், சில வருஷங்கள் அந்த ஜமீன் அரசாங் கத்தாருடைய பார்வையில் இருந்து வந்தது.

ஜமீன்தாருக்கு உரிய பிராயம் வந்தவுடன், ஜமீன் மீண்டும் அவரிடம் ஒப்புவிக்கப்பட்டது. அங்ஙனம் ஒப்புவிக்கப்பட்ட காலத்தில் வந்திருந்த ஜில்லா கலெக் டர், ஜில்லா ஸர்ஜன் முதலிய பல பெரிய உத்தியோகஸ் தர்களுக்கும் பல ஜமீன்தார்களுக்கும் ஒரு பெரிய விருந்து நடைபெற்றது. அப்பொழுது பல சங்கீத வித்துவான்களும் வந்திருந்தார்கள். அவர்களுள் பெரிய வைத்தியநாதையரைப் பாடும்படி செய்தார்கள்.

பெரிய மாளிகையொன்றில் பெருங்கூட்டத்துக் கிடையே இவருடைய வினிகை நிகழ்ந்தது. 'பல பெரிய உத்தியோகஸ்தர்களுடைய முன்னிலையில், பல வித்து வான்கள் இருக்க நம்மைத்தானே முதலிற் பாடச் சொன் னார்கள்' என்ற எண்ணத்தால் இவருக்கு உத்ஸாகம் அதிகமாயிற்று. அதனால் இயல்பாகவே நன்றாகப் பாடும் இவர் அன்று பின்னும் நன்றாகப் பாடலானார். இவ ருடைய சங்கீத சாமர்த்தியம் எவ்வளவுக் கெவ்வளவு மிகுதியாக வெளிப்பட்டதோ, அவ்வளவுக்கவ்வளவு இவ ருடைய அங்கசேஷ்டைகளும் வெளிப்பட்டன.

அங்கே வந்திருந்த ஜில்லா ஸர்ஜன் ஒரு வெள்ளைக் காரர். அவருக்கு நம்முடைய தேசத்துச் சங்கீதம் விளங்கவில்லை. அதனால் அவருடைய காது அப்பொழுது பயன்படவில்லை. ஆயினும் வைத்தியநாதருடைய தேகத்தில் உண்டாகும் சேஷ்டைகளை அவர் கண்கள் கூர்ந்து கவனித்தன. நேரம் ஆக ஆக அந்தச் சேஷ்டை கள் அதிகப்பட்டன; ஸர்ஜனுடைய கவனமும் அதிகமாயிற்று.

வைத்தியநாதையருடைய குடுமி அவிழ்ந்து நான்கு புறமும் விரிந்து பரவியது; கண்கள் பிதுங்குவன போல இருந்தன; வாய் ஆவெனத் திறந்தது; கைகளோ தரை யிலும் துடையிலும் பளீர் பளீரென்று அறைந்தன; அருகிலுள்ளவர்கள் விலகிக்கொண்டார்கள். இவற்றை யெல்லாம் ஸர்ஜன் பார்த்தார்; 'சரி, சரி, இவர் பாட வில்லை; மத்தியிலே இவருக்கு ஏதோ வலிப்பு வந்துவிட் டது; இந்தப் பைத்தியக்கார ஜனங்கள் இதைச் சங்கீத மென்று எண்ணி இந்த மனுஷரைச் சாவ அடித்து விடுவார்களென்று தோற்றுகிறது' என்று அவர் எண்ணினார்.

வித்துவான் துள்ளித் துள்ளி நான்கு புறமும் திரும் பிச் செய்யும் சேஷ்டைகளை மட்டும் கவனித்த அவருக்கு இரக்கம் உண்டாயிற்று. அவற்றோடு மிக்க பலமாக உச்சஸ்தாயியில் வித்துவான் பல்லவியை ஏகா ரத்துடன் முடிக்கும்போது, அந்தக் கோஷம் வலிப்பு வந்தவன் உயிருக்கு மன்றாடிக் கத்துவதைப்போல ஸர்ஜனுக்குத் தோற்றியது. அதற்கு மேல் அவராற் பொறுக்க முடியவில்லை; அவர் தம் கைக்கடியாரத்தை எடுத்தார்; கலெக்டரை நோக்கினார்; "ஐயா, இந்த மனுஷர் இன்னும் ஐந்து நிமிஷம் இப்படியே கத்தினால் நிச்சயமாக உயிர் போய்விடும். நிறுத்தச் சொல்ல வேண்டும். இப்பொழுது இவருக்கு வலிப்பு ஏதோ கண் டிருக்கிறது" என்று வேகத்தோடு சொன்னார். கலெக்டர் சமஸ்தானத்தின் முக்கிய அதிகாரியை அழைத்து இதை அறிவித்தார். அவர், "இவர் பாட்டல்லவா பாடுகிறார்!" என்றபோது ஸர்ஜன், "பாடவாவது! முன்பு பாடி யிருக்கலாம். இப்பொழுது பாடவேயில்லை. எனக்கல்லவா அந்த விஷயம் தெரியும்! இவரை நிறுத்தச் செய்யாவிட் டால் அப்புறம் விபரீதமாகிவிடும்!" என்றார். அதிகாரி என்ன செய்வார் பாவம்! ஜில்லாவுக்கே வைத்திய அதி காரியாக இருப்பவர் வலிப்பென்று சொல்லும்பொழுது அதை மறுத்துப் பேச அவருக்குத் துணிவு உண்டாக வில்லை.

அதிகாரி மெல்லப் பெரிய வைத்தியநாதையர் அரு கிற்சென்று பக்குவமாக, "இன்னும் சில வித்துவான் களைப் பாடச் சொல்ல வேண்டுமென்று கலெக்டர் துரை முதலியவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் அவகாசம் குறைவு; அதற்குள் சிலரைப் பாடச்சொல்ல வேண்டும். தாங்கள் தயை செய்து அவர்களுக்கும் சந் தர்ப்பம் கொடுக்க வேண்டும்" என்று வேண்டிக்கொண் டார்; அன்றியும் உயர்ந்த சம்மானங்களையும் அளித் தார். சட்டென்று நிறுத்தும்படி சொன்னால், மிக்க தைரியசாலியாகிய வைத்தியநாதையரால் ஏதாவது விப ரீதம் விளையுமென்பதை அவ்வதிகாரி உணர்ந்தவர். அவர் வேண்டுகோளின்படியே இவர் ஒருவாறு தமது பாட்டை முடித்து மரியாதைகளைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டு விட்டார்.

பிறகு அங்கிருந்த வித்துவான்களுள் ஸ்ரீ வைகுண் டம் சுப்பையரென்ற ஒருவர் பாடினார். அவர் சித்திரம் போல இருந்து பாடும் இயல்புள்ளவர். அவருடைய பாட்டு அனைவருக்கும் திருப்தியை விளைவித்தது; ஸர் ஜன், "இதுதான் பாட்டு; இவரல்லவா உண்மையாகப் பாடுபவர்!" என்று தம்முடைய மதிப்புரையில் வெளி யிட்டார்.*
---------
* மேலேயுள்ள இரண்டு நிகழ்ச்சிகளும் மேலகரம் ஸ்ரீ சுப்பிர மணிய தேசிகரவர்கள் கூறியவை.

பேயாட்டம்

தஞ்சாவூரில் ஒரு முறை இவர் பாடினார்; வழக்கம் போல இவருடைய சேஷ்டைகள் இருந்தன; அப்போது அங்கிருந்தவரும், தஞ்சாவூர் சமஸ்தானம் சங்கீத வித்துவான்களில் ஒருவருமாகிய + தோடி சீதாராமைய ரென்பவர் அவற்றைப் பார்த்துவிட்டு, "இந்தப் பெரிய வைத்தி பேயாடுகிறான்; கிஞ்சிராக்காரன் உடுக்கை யடிக்கிறான்; கடவாத்தியக்காரன் குடமுடைக்கிறான்!" என்று சொல்லி ஆச்சரியப்பட்டாராம்.
--------
+ இவர் ஸோல்ஜர் சீதாராமையரென்றும் கூறப்படுவார்.

சித்தபேதம்

லாகிரி வஸ்துக்களை உபயோகித்து வந்ததன் பய னாக இவர் பிற்காலத்தில் சிறிது சித்தபேதத்தை யடைந் தார்; இவருடைய கம்பீரம் குறைந்தது; ஓரிடத்தில் பாடிக் கொண்டே யிருப்பார்; திடீரென்று நிறுத்திவிட்டு எங் கேனும் போய்விடுவார். மிகவும் உச்ச ஸ்தாயியில் பாடி வந்ததனால் இவருக்குச் செவிட்டுத் தன்மையும் உண்டாயிற்று.

அக்காலத்தில், பல இடங்களில் முன்னமே இருந்த பழக்கமிகுதியால் அங்கங்கே இருந்தவர்கள் தங்களிடம் இவர் வந்தபோது ஏதேனும் உதவி செய்து பாதுகாத்து வந்தார்கள்.

உடுக்கடித்துப் பாடியது

ஒரு சமயம் மைசூர் மகாராஜாவைப் பார்க்கவேண்டு மென்றெண்ணி அந்நகருக்குப் போயிருந்தார். அங்கே மருத்துவக்குடி ஜஞ்சாமாருதம் சுப்பையர் முதலிய சங் கீத வித்துவான்கள் இருந்தனர். அறிவின் மாறுபாட் டினால் ஏதேனும் விபரீதமாக இவர் நடந்து கொண்டால் என்ன செய்வதென்றெண்ணி அங்குள்ளவர்கள் இவ ருடைய வரவை அரசருக்குத் தெரிவிக்கவில்லை; எப்படி யேனும் அரசரைப் பார்த்துவிட்டே போவதென்று பிடி வாதத்தோடு இவர் அங்கே சில நாள் ஒரு சத்திரத்தில் உண்டு தங்கியிருந்தார். சிலர் இவருக்கு வேண்டிய வற்றை அளித்துப் பாதுகாத்தனர்.

ஒருநாள் மகாராஜா அரண்மனையிலிருந்து வெளியே புறப்பட்டு வந்தார். அப்போது தெருவிலுள்ள ஒரு கோயிலுக்கு அருகிலிருந்த இவர் அங்கிருந்த பூசாரியின் கையிலிருந்த உடுக்கையை வாங்கி அதை அடித்துக் கொண்டே பாடத் தொடங்கினார். உடுக்கையினுடைய முழக்கத்துக்கு நடுவே இவருடைய இனிய சங்கீதம் வீதி வழியே சென்ற மன்னரின் உள்ளத்தைக் கவர்ந்தது. அவர் தம் வாகனத்தை நிறுத்தச் செய்து பாடுபவர் யாரென்பதை விசாரித்தார். பெரிய வைத்தியநாதைய ரென்பதை அறிந்தார்; இவருடைய ஆற்றலைப்பற்றி அவர் முன்னமே கேள்வியுற்றவராதலின், உடனே இவரை அரண்மனைக்கு வருவித்துப் பாடச் செய்து கேட்டு மகிழ்ந்தார். இவர் மிக அருமையாகப் பாடி மகா ராஜாவால் அளிக்கப்பெற்ற சம்மானங்களைப் பெற்று ஊர்வந்து சேர்ந்தார்.

பிற்கால நிலை

மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் பெரிய பட் டத்தைப் பெற்றுத் திருவாவடுதுறையில் இருந்த காலத் தில், இவர் சிலமுறை அங்கே சென்றதுண்டு. இவ ருடைய சக்தி மழுங்கியிருந்தபோது இவரை நான் பார்த்திருக்கிறேன். அப்போது இவர் திடீரென்று அழுவார்; பிறகு சிரிப்பார். பழைய சமாசாரத்தைச் சொல்லிக்கொண்டே வந்தால் இவருக்கு உத்ஸாக முண் டாகிவிடும்; இடையிடையே நிறுத்தி விடுவார்.

ஒருமுறை இவர் திருவாவடுதுறைக்கு வந்த காலத் தில் என்னுடைய தந்தையார் இவரை வீட்டிற்கு அழைத்து வந்து உபசரித்தனர். இவர் மைசூரில் தாம் அரசரைக் கண்ட வரலாற்றைச் சொன்னார். "அங்கே இருந்த பயல்கள் என்னை உள்ளே விடாமல் தடுத்தார் கள். நானா விடுபவன்? உடுக்கையைத் தட்டிப் பாட ஆரம்பித்துவிட்டேன். அப்புறம் ராஜாவாவது, சக்கர வர்த்தியாவது! எல்லாரும் மயங்க வேண்டியதுதானே!" என்று இவர் அதைப்பற்றிக் கூறினார். பிறகு சில கீர்த் தனங்களைப் பாடினார். பாட்டு மிக அருமையாக இருந்தது. திடீரென்று திண்ணையிலிருந்து குதித்து எங்கேயோ போய்விட்டார்.

அப்போதிருந்த இவருடைய நிலையைக் கண்டு நான் வருந்தினேன். பூர்வ ஜன்ம புண்ணிய வசத் தினால் அருமையான வித்தை கிடைத்திருந்தும், அதைத் தக்கபடி வைத்துக் காப்பாற்றாமல் மனம் போனவாறு உழன்று அறிவையும் தேகத்தையும் கெடுத்துக் கொண்ட இவருடைய பேதைமையை நினைந்து இரங்கினேன்; கல்வி அறிவு ஒழுக்கம் என்பவற்றை ஒருங்கு சேர்த்துப் பெரியோர்கள் கூறுவதில் எவ்வளவு உயர்ந்த கருத்து அடங்கி யிருக்கிறதென்பதை உணர்ந்தேன்.

பெரிய வைத்தியநாதையருடைய குறைகள் பல; இவருடைய வித்தை பெரிது. அந்த வித்தையின் பிரகாசம் சில காலம் வீசியது; பிறகு இவருடைய குறை களால் அது மங்கியது. அதுவே இவர் ஜாதகமாக அமைந்து விட்டபோது நாம் என்ன செய்யலாம்!
-----------------

6. * கலைகள்


கலைகளுக் கெல்லாம் தெய்வமாக விளங்கும் தேவி யைக் கலைமகளென்று வழங்குகின்றோம்.
-------
* கலைமகள், தொகுதி 1, பகுதி 1.


    (வெண்பா)
    "ஆய கலைக ளறுபத்து நான்கினையும்
    ஏய வுணர்விக்கு மென்னம்மை - தூய
    உருப்பளிங்கு போல்வாளென் னுள்ளத்தி னுள்ளே
    இருப்பளிங்கு வாரா திடர்"

என்ற செய்யுளால் கலைகள் அறுபத்து நான்கென்ப தனையும் அவற்றைக் கலைமகள் அருளிச் செய்பவ ளென் பதையும் அறியலாம்.

    " எண்ணெண் கலையு மிசைந்துடன் போக"
    கிரட்டி யிருங்கலை" (சிலப்பதிகாரம்)

    " யாழ்முத லாக வறுபத் தொருநான்
    கேரிள மகளிர்க் கியற்கையென் றெண்ணிக்
    கலையுற வகுத்த"

    " செம்மறையா ரணமுதனா லீரெட்டுக் கலைமுழுதும்
    தெரிந்தா ளந்த
    மெய்ம்மறையார் கலையனைத்து மேகலையா மருங்கசைத்த
    விமலை யம்மா" (திருவிளையாடல்)

என வருவனவற்றாலும் அறுபத்து நான்கு கலைக ளுண்மை பெறப்படும்; அவை அக்கர இலக்கண (அக்ஷ்ர லக்ஷண) முதல் அவித்தைப் பிரயோகம் வரை உள்ளன வாகும்; வேறுவகையாகக் கூறுவதும் உண்டு. அறுபத்து நான்கு கலைகளையன்றி அவற்றைப் பின் பற்றிய கலை களும் உள்ளன என்பர்.

வேறுபாடுகள்

அந்தணருக்குரிய கலைகள் இவை, மன்னருக்குரிய கலைகள் இவை, வணிகருக் குரிய கலைகள் இவை, வேளாளருக்குரிய கலைகள் இவை, மகளிருக் குரியன இவை, பொது இவை என அவற்றுள் வேறுபாடுண்டு. தமிழிலுள்ள பழைய நூல்களில் தமிழ்நாட்டிலும் பிற நாட்டிலும் இருந்த கலைகளைப் பற்றிய செய்திகள் கூறப் படுகின்றன. அத்தகைய கலைகளிற் பலவற்றிற்குரிய நூல்கள் அக்காலத்தில் தமிழில் இருந்தன்; இக்காலத்தும் சில உள்ளன.

இசையும் நாடகமும்

தமிழ் நாட்டுக் கலைகளில் மிகச் சிறப்பாக இருந்து வந்தவை இசையும் நாடகமுமாம். பழைய நூல்களிற் காணப்படுகின்ற பலவகை இசைக்கருவிகளைப் பற்றிய செய்திகள் இக்காலத்தில் எந்த வகையாலும் அறிய முடியாமல் இருக்கின்றன. தோற் கருவி வகைகளில் அளவிறந்தனவும், யாழ்வகைகளிற் பலவும், தாளம் முதலியவற்றில் அவ்வாறே பலவும் இருந்தனவென்று தெரிகின்றது. இசையானது முத்தமிழ்களுள் ஒன்றாகக் கூறப்படுவதிலிருந்தே அக் கலை மிகவும் விரிவுடைய தென்று தோற்றுகின்றதன்றோ? இசைச் சங்கமொன்று பண்டைக்காலத்தில் இருந்ததென்றும், அதில் பல புல வர்கள் இருந்து இசைப் பயிற்சியும் ஆராய்ச்சியும் செய்து வந்தார்களென்றும், இசையைப் பற்றிய பல நூல்களை அவர்கள் இயற்றியுள்ளார்களென்றும் பரி பாடல், சிலப்பதிகாரம் முதலிய பழைய நூல்கள் அறி விக்கின்றன. பிற்காலத்திலும் அரசர்களிடத்தும் பிரபுக் களிடத்தும் சங்கீத வித்துவான்கள் பலர் இருந்து வந்தார்கள்.

நாடகக்கலையையும் தமிழர்கள் நன்கு போற்றி வந்தார்களென்பதை அது முத்தமிழிலொன்றாக வைக்கப் பட்டிருப்பதால் அறியலாகும். நாடகம் பலவகைப் படுதலையும், அதற்கு உரியவர்களுடைய இலக்கணங் களையும், பிறவற்றையும் விரிவாக்க் கூறும் நூல்கள் பல முன்பு இருந்தன; இப்பொழுது அழிந்து விட்டன. சிலப்பதிகாரத்தால் மட்டும் சில செய்திகள் தெரிய வருகின்றன.

ஓவியம்

ஓவியக்கலை அல்லது சித்திரசாஸ்திரம் மிக உயர்ந்த நிலையில் இருந்தது.

    "ஓவியச் செந்நூ லுரைநூற் கிடக்கையும்"

என்ற மணிமேகலையடி ஓவிய சம்பந்தமான நூல் இருந் தமையை அறிவிக்கின்றது. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் ஓவிய நூலென ஒன்றைக் கூறி அதிலிருந்து சில விஷயங்களை எடுத்துக் காட்டுகின்றார். ஓவியம் வல்லார் பலர் தமிழ் நாட்டில் நிறைந்திருந் தனர்;

    "எவ்வகைச் செய்தியு முவமங் காட்டி
    நுண்ணிதி னுணர்ந்த நுழைந்த நோக்கிற்
    கண்ணுள் வினைஞரும்"

என்ற மதுரைக் காஞ்சிப் பகுதியால் இது விளங்கும். மாடங்களில் அழகிய சித்திரங்கள் எழுதப்பட்டிருந்தன:

    "மாடக்குச் சித்திரமும்"

என்பது மாடங்களுக்கு அழகுசெய்வது சித்திரமென்ற தமிழ் நாட்டார் கொள்கையைக் காட்டுகின்றது.

    "சுடும ணோங்கிய நெடுநிலை மனைதொறும்
    மையறு படிவத்து வானவர் முதலா
    எவ்வகை யுயிர்களு முவமுங் காட்டி
    வெண்சுதை விளக்கத்து வித்தக ரியற்றிய
    கண்கவரோவியங் கண்டுநிற் குநரும்" (மணிமேகலை)

என்பதில் மாளிகையிற் பலவகை ஓவியங்கள் காண் போர் கண்களைக் கவர்ந்து நின்றமை கூறப்படுதல் காண்க. ஆடைகளிற் சித்திரங்களை எழுதும் வழக்கம் பழமையானது; படமென்னும் பெயர் இக்காரணத்தா லேயே வந்தது (படம் - வஸ்திரம்). ஒத்த அன்பினளாகிய தலைவியொருத்தியைப் பெறமுடியாமல் வருந்தும் தலைவன் தனக்கும் அவளுக்கும் உள்ள அன்பை வெளிப் படுத்த எண்ணிப் பனைமடலாற் செய்த குதிரை யொன்றில் ஏறிவருவானென்றும் அப்பொழுது தலை வியைப்போன்ற படமொன்றை யெழுதி அதில் வைத்து எடுத்து வருவானென்றும் அகப்பொருள் நூல்கள் தெரிவிக்கின்றன. அந்தப்படத்தைக் கண்ட ஊரார் இன்ன மங்கையிடம் இவன் அன்பு பூண்டுள்ளா னென்று ஐயமற அறிவாராம். இச்செய்தியால் ஒரு வரைப் பார்த்து அவரைப்போலவே சித்திரம் எழுதும் வன்மை அக்காலத்தில் இருந்ததென்று அறிந்து கொள்ளலாம். ஓவியம் எழுதுபவர்கள் முதலில் தாம் கருதியிருக்கும் உருவத்தைக் குறித்துக்கொண்டு பினபு வர்ணங்களையமைத்து அதனை அழகுபடுத்துவார்கள். அவ்வாறு முதலில் எழுதப்படுவது புனையா ஓவியம் என்ற வழங்கும். நெடுநல்வாடையிலும் மணிமேகலையி லும் புனையா ஓவியம் உவமையாக எடுத்தாளப்பட்டிருக் கிறது. திரைச்சீலைகளில் சித்திரங்கள் அமைக்கப் பெற்றிருந்தன; பாயற் கட்டிலைச் சுற்றக் கட்டப்படும் திரைகளிலும் படுக்கையின்மேல் விரிக்கும் துணிகளிலும் மேற்கட்டியிலும் சித்திரங்கள் இருந்தன; ஆடைகளிற் சித்திரங்கள் எழுதப்பட்டன; நெய்யும்பொழுதே ஆடை களிற் சித்திரங்களை அமைத்து வந்தார்கள்.

    "குரவரு மரவமுங் குருந்துங் கொன்றையும்
    திலகமும் வகுளமுஞ் செங்கால் வெட்சியும்
    நரந்தமு நாகமும் பரந்தலர் புன்னையும்
    பிடவமுந் தளவமு முடமுட் டாழையும்
    குடசமும் வெதிரமுங் கொழுங்கா லசோகமும்
    செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்
    எரிமல ரிலவமும் விரிமலர் பரப்பி
    வித்தக ரியற்றிய விளங்கிய கைவினைச்
    சித்திரஞ் செய்கைப் படாம்போர்த் ததுவே
    ஒப்பத் தோன்றிய வுவவனம்" (மணிமேகலை)

என்று கூறப்பட்ட அடிகளினால் இயற்கை யெழிலை அவ்வாறே எடுத்துக்காட்டும் சித்திரப் படாங்களை அமைக்கும் திறனைத் தமிழ் நாட்டார் அறிந்திருந்தமை புலப்புகின்றதன்றோ?

சிற்பம்
சிற்பக்கலையில் வல்லுநர்கள் மண்ணினாலும், செம்பு பொன் முதலிய உலோகங்களாலும், கல்லாலும், சுண் ணாம்பினாலும், மரத்தினாலும், தந்தத்தினாலும் பலவகைப் பாவைகள் முதலியவற்றை அமைத்தார்கள். மண்ணாற் பாவை அமைப்பவர் மண்ணீட்டாள ரெனப்பட்டனர்.

தந்தத்தினால் தேர் முதலியன அமைக்கப்பட்டன. கல்லில் அமைந்த சிற்பங்களில் தமிழ்நாடு மிகவும் சிறந்த தென்பதை யார்தாம் மறுப்பார்? பிற்காலத்தில் பல்ல வர்கள் சோழர்கள் முதலியவர்களுடைய அரசாட்சியில் தமிழ்நாட்டுக் கோயில்கள் சிற்பத்திறன் அமையக் கட்டப் பட்டன. அக்காலத்தில் பல சிற்பிகள் அவ்வரசர்களால் *முற்றூட்டுப்பெற்று வாழ்ந்து வந்தனர். அவர்களுடைய கைவன்மையை இன்றும் வெளிப்படுத்திக்கொண்டு விளங்கும் கோயில்களைக் காணும் பிறநாட்டார் வியப் படைகின்றார்கள். சோழ நாட்டுச் சிற்பிகள், 'திருவலஞ் சுழிப் பல்கணி, திருவீழிமலை வௌவானத்தி மண்டபம், ஆவுடையார் கோயிற் கொடுங்கை என்னும் மூன்றைப் போலச் செய்ய இயலா; மற்றவற்றைப் போலச் செய் வோம்' எனவும், கொங்கு நாட்டில், 'தாரமங்கலம், தாடிக் கொம்பென்னும் இரண்டிடங்களிலுள்ள சிற்பங் களைப்போல இயற்ற எங்களால் இயலாது' எனவும் உடன்படிக்கை யெழுதிக் கொடுக்கும் வழக்கமுண்டென் னும் கர்ணபரம்பரைச் செய்திகள் அவ்விடங்களில் உள்ள சிற்பத்தின் உயர்வை வெளிப்படுத்துகின்றன.
-----
*முற்றூட்டு - சர்வமானியம்.

மரத்தினாலும் உலோகத்தினாலும் பலவகை வண்டி கள் செய்யப்பெற்றன. அவை வையம், பாண்டில், தேர் முதலிய பலவகையானவை. தாமரை மலரைப் போன்ற வண்டியொன்றின் வருணனை பெருங்கதையிற் காணப் படுகிறது:

    "யவனக் கைவினை யாரியர் புனைந்தது
    தமனியத் தியன்ற தாமரை போலப்
    பவழமு மணியும் பல்வினைப் பளிங்கும்
    தவழ்கதிர் முத்துந் தானத் தணிந்தது
    விலைவரம் பறியா வெறுக்கையுண் மிக்க
    தலையள வியன்றது தனக்கிணை யில்லது
    தாயொடு வந்த தலைப்பெரு வையம்"

என அதன் இயல்பு உரைக்கப்படுதல் காண்க.

அணிகள்

பொன்னாலும் வெள்ளியினாலும் நவமணிகளாலும் செய்யப்பெற்ற பலவகை அணிகள் அக்காலத்தில் அணி யப்பட்டு வந்தன. அவற்றை இயற்றும் பொற் கொல் லர்கள் தங்களுக்குரிய நூலில் நல்ல தேர்ச்சியுடையவர் களாக இருந்தார்கள்; நவமணிகளைப்பற்றிய இலக்க ணங்களையும் நன்கு அறிந்திருந்தனர். அவற்றிற்குரிய நூல்கள் பல இருந்தன. சிலப்பதிகாரத்திலும் அதன் உரையிலுள்ள மேற்கோட் சூத்திரங்களிலும் நவமணி களைப் பற்றிய வரலாறுகள் பல கூறப்படுகின்றன. கல்லாடத்திலும், திருவிளையாடற் புராணங்களிலும், பழைய சாஸனங்களிலும் நவமணிகளுக்குரிய குணங் களும் குற்றங்களும் சொல்லப்படுகின்றன.

நெய்தல்

நெய்யுந்தொழிலிலும் தமிழ்நாட்டார் சிறப்பெய்தி யிருந்தனர். பருத்தியினாலும், எலிமயிர், ஆட்டுமயிர் முதலியவற்றாலும், பட்டினாலும் ஆடைகள் நெய்யப் பெற்றுவந்தன. கைம்மை நோன்பு நோற்கும் பெண் டிரும் பிறரும் பஞ்சினை நூற்று வந்தனர்.

    "ஆளில் பெண்டிர் தாளிற் செய்த
    நுணங்குநுண் பனுவல்" (நற்றிணை)

    "பருத்திப் பெண்டின் பனுவ லன்ன" (புறநானூறு)

என வருவனவும்,

    'நுண்ணிய பலவாய பஞ்சு நுனிகளாற் கைவன்
    மகடூஉத் தனது கைமாண்பினால் ஓரிழைப்
    படுத்தலாம் உலகத்து நூல் நூற்றலென்பது'

என்ற இறையனாராகப் பொருளுரையும் மகளிர் நூற்று வந்த வழக்கத்தை விளக்குகின்றன.

ஆடைகள்

ஆடைகளிற் பலவகை உண்டு. நீல நிறம் முதலிய பலநிறக் கச்சுகளும், ஆடைகளும், பூத்தொழில் அமைந்த கலிங்கங்களும், முடிச்சுக்களையும் மணிகளையும் விளிம்பிலேயுடைய பட்டுடைகளும் இருந்தன:

    "சிறந்த கருமை நுண்வினை நுணங்கறல்
    நிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர்" (மதுரைக் காஞ்சி)
    "நீலக் கச்சைப் பூவா ராடை" (புறநானூறு)
    "கொட்டைக் கரைய பட்டுடை" (பொருநராற்றுப்படை)

பாம்பின் சட்டையையும் மூங்கிலின் உரித்த தோலை யும் பாலாவியையும் புகையையும் ஆடைகளுக்கு உவமை யாக நல்லிசைப் புலவர்கள் கூறியிருப்பதனால் மிக மெல்லிய ஆடைகளைத் தமிழ் நாட்டார் அணிந்துவந்தன ரென்பது வெளியாகின்றது.

    "நோக்குநுழை கல்லா நுண்மைய பூக்கனிந்
    தரவுரி யன்ன வறுவை" (பொருநராற்றுப்படை)
    "இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம்" (மலைபடுகடாம்)
    "இழையணி வாரா வொண்பூங் கலிங்கம்" (புறநானூறு)

என்பன ஆடைகளின் நுண்மையை வெளிப்படுத்து கின்றமை காண்க.

    "பொருந்துபூம் பொய்கைப் போர்வையைப் போர்த்து"
    (சீவக சிந்தாமணி)

என்பதில் பொய்கைவடிவு எழுதின படாமொன்று சொல்லப்படுகின்றது.

மாலை தொடுத்தல்

மாலைகளைத் தொடுப்பதிற் பலவகையான விசித்திர முறைகளைத் தமிழ்நூல்கள் தெரிவிக்கின்றன. "மல ராய்ந்து தொடுத்தல்" என்று சீத்தலைச் சாத்தனாரும், "கடிமலர்ச் சிப்பம்" என்று கொங்குவேளிரும் அட் தொழிலைக் குறிக்கின்றனர். இண்டை, கண்ணி, தார் முதலிய பலவகைகள் மாலைகளில் உண்டு.

மடைநூல்

உணவு சமைக்கும் முறைகளைக் கூறும் நூல் 'மடைநூல்' எனப்படும். அதைப்பற்றிய செய்திகள் சிறுபாணாற்றுப்படை, மணிமேகலை, பெருங்கதை முதலிய நூல்களிற் கூறப்படுகின்றன. பலவகை உணவு வகைகள் தமிழ் நூல்களிற் காணப்படுகின்றன. காலத் திற்கு ஏற்ற உணவுகளையும் சாதி, நிலம் முதலியவற்றிற் கேற்ற உணவுகளையும் அந்நூல்களால் அறிந்து கொள்ள லாம். சீவகசிந்தாமணியில் முத்தியிலம்பகதில் இருது நுகர் வென்னும் பகுதியில் சில பெரும்பொழுதிற்குரிய உணவு வகைகள் கூறப்பட்டுள்ளன.

சோதிடம் முதலியன

சோதிடம், நிமித்தம்பார்த்தல் முதலிய கலைகள் தமிழில் இருந்தன. அக்கலைத் திறனுடையார் காலக் கணிதரென்றும் கணிகளென்றும் கூறப்படுவார். கணி தத்திற் சிறந்த சிலர் சங்கத்தே யிருந்த நல்லிசைச் சான் றோர்களுள்ளும் காணப்படுகின்றனர். அரசன் போர் புரியச் செல்லும்பொழுது நற்சொல், காக்கை கரைதல் முதலியவற்றால் நிமித்தம் பார்ப்பது வழக்கம். அகத் திணையுள்ளும் பலவகை நிமித்தங்கள் சொல்லப்படுகின்றன. விரிச்சி (நற்சொல்), தோள் கண் முதலியன துடித்தல், காக்கை கரைதல், பல்லி ஒலித்தல் முதலிய நிமித்தங்கள் உண்டு. கட்டுவிச்சி யென்னும் வெறியாடு பவளாற் *கட்டுப் பார்த்தலும் வெறியாடுபவனாகிய வேலனாற் கழங்கு பார்த்தலுமாகிய நிமித்தங்கள் தொல் காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ளன.
---------
*முறத்தில் நெல்லை வைத்து எண்ணி நிமித்தம் பார்த்தல்.

வானசாஸ்திரம்

வானசாஸ்திரப் பயிற்சியும் அக்காலத்தே இருந் தது. சந்திரன் பரிவேடங் கொள்ளுங் காலத்தில் குறிஞ்சி நிலத்தார் மணம் செய்வார்கள். நெடுநல் வாடையில், கட்டிலுக்குமேலே கட்டியிருக்கும் மேற் கட்டியில் பன்னிரண்டு ராசிகளும் எழுதப்பட்டிருந்தன வென்னும் செய்தி உள்ளது; நட்சத்திரங்களின் பெயர் களிற் சில சங்கநூல்களில் வந்துள்ளன. அரசர் முதலி யவர்கள் பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டாடும் வழக்கம் முன்பே இருந்து வந்தது. கோச்சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரலிரும்பொறை இறக் குங் காலத்தைக் கூடலூர் கிழார் ஏழு நாட்களுக்கு முன் ஒரு விண்மீன் விழுந்தமையால் அறிந்தனர்; அவன் துஞ்சிய காலத்து, "இதனை முன்னரே அறிந்தேன்" என்று வருந்தி ஒரு செய்யுள் கூறியுள்ளார். அதில் மீன் விழுந்த நாளில் இருந்த நட்சத்திரங்களின் நிலை காணப்படுகிறது.(புறநானூறு, 229). இவற்றால் நட்சத் திரங்களைப்பற்றிய அறிவு இருந்தமை உணரப்படும்.

மருத்துவம்

மருத்துவ நூல்களும் மருத்துவம் வல்ல நல்லிசைப் புலவர்கள் பலரும் இருந்ததைப் பழைய நூல்களால் அறியலாம். மூலிகைகளைப்பற்றிய ஆராய்ச்சி விரிவுற் றிருந்தது. தமிழ் வைத்தியம் சித்த வைத்தியமென்னும் பெயரால் இக்காலத்து வழங்கப்படுகிறது. இப்பொழு துள்ள நூல்கள் பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டினர் பயின்று வந்த முறைகளை அறிந்த பிற்காலத்தார் எழுதி யவை. அவை பெருஞ் சிறப்புடையன. ஆயுள்வேதத் தைத் பற்றிய செய்தி சிலப்பதிகாரத்தில் உள்ளது.

நகரமைப்பு

நகரமைப்பு, வீடுகட்டுதல் முதலியவற்றைப் பற்றிய சிறந்த அறிவும் தமிழ்நாட்டாருக்கு இருந்து வந்தது. நகரங்களில் உள்ள வீதிகள் ஒழுங்காக அமைந்திருந் தன. பல கடைகள் வகைவகையாக இருந்தன. சந்தி, சதுக்கம், அம்பலம், மன்றம், பொதியில் முதலிய இடங் கள் இருந்தன. அசுத்த நீரை ஊருக்கு வெளியே போக்குதற்குரிய கரந்து படை அல்லது கரந்துறை (undergroung drainage) யென்னும் ஜலதாரைகள் வீதியின் நடுவிற் கீழே இருந்தன. கற்களால் அவை மூடப்பட்டிருக்கும். வேண்டின் நீரை நிரப்பியும் வேண் டாவிடிற் போக்கியும் விடுதற்குரிய வாவிகள் இருந்தன. அவை எந்திரவாவி யெனவும், இலவந்திகையெனவும் கூறப்படும்;

    "எந்திர வாவியி லிளைஞரு மகளிரும்
    தந்தமி லாடிய சாந்துகழி நீரும்" (மணிமேகலை)
    "நிறைக்குறி னிறைத்துப் போக்குறிற் போக்கும்
    பொறிப்படை யமைந்த பொங்கில வந்திகை" (பெருங்கதை)

மாலை நேரங்களிலும் வேனிற்காலத்திலும் புகுந்து மகிழ் தற்குரிய பல சோலைகள் இருந்தன; செய்குன்றங்களும் உண்டு:

    "சேணோங் கருவி தாழ்ந்தசெய் குன்றமும்
    வேணவா மிகுக்கும் விரைமரக் காவும்" (மணிமேகலை)

இவற்றையன்றி,

    "எந்திரக் கிணறு மிடுங்கற் குன்றமும்
    வந்துவீ ழருவியு மலர்ப்பூம் பந்தரும்
    பரப்புநீர்ப் பொய்கையுங் கரப்புநீர்க் கேணியும்
    ஒளித்துறை யிடங்களும் பளிக்கறைப் பள்ளியும்" (மணிமேகலை)

ஆகிய பல இடவகைகளும் உண்டு. அரசர் முதலியவர் களுக்குத் தனித்தனியே வீதிகள் இருந்தன.

பலவகைத் தொழில் செய்வார்க்குரிய வீதிகள் முறைப்படி அமைக்கப்பட்டிருந்தன. மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்களில் மதுரை, காவிரிப்பூம்பட்டினம், வஞ்சிமாநகர், காஞ்சி முதலிய நகர அமைப்புக்களைப் பற்றிச் சொல்லும் பகுதிகளால் அக்காலத்தில் நகரங்கள் அமைக்கப்பட்ட முறைகள், அவற்றிலிருந்த தெருக்கள், இடங்கள் முதலியவற்றைப்பற்றிய பல செய்திகளை அறியலாம். அப்பகுதிகள் படிக்கப் படிக்க இன்பத்தை அளிப்பனவாகும்.

மதுரை நகரத்திலும் காவிரிப்பூம்பட்டினத்திலும் நாளங்காடி அல்லங்காடி என்ற இருவகைக் கடைத் தெருக்கள் இருந்தன. நாளங்காடி - காலைக்கடை; அல்லங்காடி - மாலைக்கடை. அவ்விரு நகரங்களிலும் பலவகைக் கோயில்கள் இருந்தன. காவிரிப்பூம்பட்டி னத்திற் பண்டசாலைகள் பல உண்டு.

அரசர்கள் வாழும் நகரங்களில் அகழியும் மதிலும் இருந்தன. மதிலின்மேற் பகைவர்களைத் தடுத்தற்குப் பலவகைப் பொறிகள் அமைக்கப்பெற்றிருந்தன. கோட்டை வாயில்களும் ஊருக்குள் பிறரறியாதவாறு வெளியிலிருந்து புகுதற்குரிய நுழைவழிகளும் உண்டு. காஞ்சிநகர் தாமரை மலர்போல அமைந்துள்ளதென்று பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.

    "மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
    பூவொடு புரையுஞ் சீரூர் பூவின்
    இதழகத் தனைய தெருவ மிதழகத்
    தரும்பொகுட் டனையதே யண்ணல் கோயில்" (பரிபாடல்)

என்பதில் மதுரையும் அவ்வாறு கூறப்பட்டுள்ளது. பெருங்கதையில் இராசகிரிய மென்னும் நகரத்தைத் தாமரை மலராகவும் பலவகை தெருக்களைப் புறவிதழ் புல்லிதழ் அகவிதழ் முதலியவைகளாகவும் அரசன் அரண்மனையை நடுவிலே யமைந்த கர்ணிகையாகவும் ஆசிரியர் உருவகம் செய்துள்ளார். இதனால் நகரங்கள் அழகும் ஒழுங்கும் சிறந்த வீதிகளால் அமைந்திருந்தன வென்பது உணரப்படுகின்றதன்றோ?

கட்டிடச் சிற்பம்

வீடுகளை அமைப்பதில் சில முறைகள் அக்காலத்தில் உண்டு.

    "பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து" (நெடுநல்வாடை)

என்பதனால் அவரவர்களுக்கேற்றபடி மனைகள் அமைக் கும் வழக்கம் இருந்ததென்பதை அறிந்து கொள்ளலாம். வீடுகளைக் கட்டுவதற்காக அஸ்திவாரம் போடும் காலம் நெடுநல்வாடையிற் காணப்படுகின்றது. கோபுரங்களும், வாயின்மாடங்களும், நிலாமுற்றங்களும், தெற்றிகளும், அறைகளும் அமைக்கப்பட்டன. வீடுகளின் நிலைகளிற் சித்திரவேலைகள் செய்யப்பட்டிருந்தன. கஜலக்ஷ்மியின் திருவுருவம் நிலைக்கு மேலே மத்தியில் முற்காலத்தும் அமைக்கப்பட்டமையை நெடுநல்வாடை முதலியவற்றால் அறியலாம். மாடங்களாகவே சில வீடுகள் கட்டப்பட் டிருந்தன. வீட்டின் சுவர்களிற் பலவகைச் சாளரங்களை வைப்பதுண்டு; 'காலதர்' என்று அவை கூறப்படும்; காற்றுப் போகும் வழியென்பது அதன்பொருள். இதனால் தேகசௌக்கியத்திற் குரியனவும் கவனிக்கப்பெற்று வந்தமை தெரிகின்றது.

கூபநூல்

கிணறுகளை வெட்டும் முறைகளை யறிவிக்கும் கூபநூல் ஒன்று உண்டு. இன்ன இடத்தில் வெட்டி னால் நல்ல ஜலமிருக்குமென்பதை அதனால் எளிதில் அறியலாம். உதயணன் இந்நூலில் தேர்ச்சியுடையவ னாக விருந்தானென்ற செய்தி பெருங்கதையில் காணப் படும்.

காவல்நூலும் கரவடநூலும்

காவல் காத்தற்குரிய காவல்நூல், கரவடநூல் முதலிய பலநூல்களின் பெயர்கள் தெரிய வருகின்றன. நூலேணியை அரையிற் சுற்றியவர்களாய்க் கறுப் புடையை அணிந்துகொண்டு கள்வர்கள் பதுங்கி வருவார்களென்றும், அவர்களை ஒற்றியறிந்து காவ லர்கள் பிடிப்பார்களென்றும், அக்காவலர்கள் காவல் நூல், கரவடநூல் என்னும் இரண்டிலும் வல்லவர்களாக இருந்தார்களென்றும் மதுரைக் காஞ்சியும் அதன் உரையும் அறிவிக்கின்றன. தக்கயாகப்பரணி உரையாசிரியர்,

    'உடன்கள்ளரும் ஒற்றிக் கொடுப்போரும்
    பெருநிலை நிற்போரும் கரவட சாத்திரமும் வேண்டும்'

என்று ஓர் இடத்திற் களவுக்குரிய உபகரணங்கள் சில வற்றைத் தெரிவிக்கின்றார்.

போர்க்கலை

போருக்குரிய கலை தமிழ்நாட்டில் தனி இலக்கணத் தோடு இருந்தது. தொல்காப்பியம் புறத்திணையியலிலும் பன்னிரு படலத்திலும் புறப்பொருள் வெண்பாமாலை முதலிய நூல்களிலும் கூறப்பட்ட புறத்திணைத் துறை களிற் பெரும்பாலன போரையும் அதனைச் சார்ந்தவற் றையும் பற்றிய செய்திகளைக் கூறுவனவாம். பகைவர்க ளுடைய நாட்டிலுள்ள பசுக்கள் மகளிர் முதலியோ ருக்குப் போரினால் ஏதம் வருமென்று அஞ்சி, "யாம் போர் செய்யப் போகிறோம்; மகளிர் முதலியோர் இந்நாட்டை நீங்கிக் காவலுடைய நாட்டிற்குச் சென்று விடுங்கள்" என்று போர்புரியச் செல்வோர் பறையறை விப்பார். தாமே செல்ல ஆற்றலில்லாத பசுக்களை அப்பகைவரது நாட்டிலிருந்து தம் நாட்டிற்குக் கொண்டுவந்து விடுவார்கள். அதுமுதல் போர் தொடங்கப்படும்.

நிரைகவர்தல், போர்செய்யப் புறப்படுதல், மதிலை வளைத்தல், போர் செய்தல், வெற்றி யுறுதல் என்று போரில் பல பெரும் பிரிவுகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை வெட்சி முதலிய திணைகளாக நூல்கள் வழங்கு கின்றன. அவ்வத்திணைக்குரிய மலர்களைச் சூடிக்கொண்டு போர்புரிதல் வழக்கம். ஒவ்வோர் அரசருக்கும் தனித் தனி அடையாளப் பூக்கள் உண்டு. போர்புரிகையில் அவற்றை வீரர்கள் அணிந்துகொள்வதால் அவர்களை இன்னாருடைய படையைச் சேர்ந்தவர்களென்று எளிதில் தெரிந்து கொள்வார்கள். அத்தகைய பூக்களைப் பொன் னாற் செய்வித்து அணிந்து கொள்வதும் உண்டு. புறத் திணைகளுள் ஒவ்வொன்றிலும் பல துறைகள் உண்டு. தோணிகளில் ஏறி அகழிற் போர் புரிதலும், மதில் மீதேறிப் போர் புரிதலும் ஆகிய பலவகைப் போர்கள் உள்ளன. வீரர்களுக்குள் படைத்தலைவர்கள் முதலிய பல வேறுபாடுகள் உண்டு. சேனாதிபதிகளுக்குப் பட்டங் கள் வழங்கப் பெற்றன. அவற்றுள் ஏனாதி என்பது ஒன்று. அப்பட்டத்துக்குரிய மோதிரம் ஏனாதி மோதிர மென்று வழங்கப்பெறும்.

    "போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக்
    கார்க்கடல் பெற்ற கரையன்றோ-போர்க்கெல்லாம்
    தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சேர்
    ஏனாதிப் பட்டத் திவன்"

என்பது இங்கே அறிதற்குரியது. வீரர்களுக்குரிய பல ஆயுதங்களின் பெயர்களை நூல்களிற் காணலாம். வேல், வாள், அம்பு, கிடுகு என்பவற்றிற் பல வகைகள் உண்டு.

கப்பற்றொழில்

தமிழ் நாட்டார் கப்பல்களைச் செய்து அவற்றைப் பலவகையிற் பயன்படுத்திக் கொண்டனர். காவிரிப்பூம் பட்டினத்துக் கடற்கரையில் உள்ள பல பண்டசாலை களில் பல நாடுகளிலிருந்து வந்த பண்டங்கள் இருந்தன வென்று பட்டினப்பாலை தெரிவிக்கின்றது. பிறநாட்டி லிருந்து கப்பல்களிலும் பல பண்டங்கள் வந்து குவிந்தன.

    "வாலுளைப் புரவியொடு வடவளந் தரூஉம்
    நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை"

என்ற பெரும்பாணாற்றுப்படை யடிகளால் குதிரைகள் முதலிய வடநாட்டுப் பொருள்கள் தமிழ்நாட்டுக்கு நாவாய்களில் வந்தமை தெரியவரும்.

    "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்" (பட்டினப்பாலை)
    "பொன்மலிந்த விழுப்பண்டம்
    நாடார நன்கிழிதரும் ஆடியற் பெருநாவாய்" (மதுரைக்காஞ்சி)

    "விழுமிய நாவாய் பெருநீ ரோச்சுநர்
    நனந்தலைத் தேஎத்து நன்கல னுய்ம்மார்
    புணர்ந்துடன் கொணர்ந்த புரவி" (மதுரைக்காஞ்சி)

என்பவற்றாலும் இச்செய்தியை அறியலாம்.

கட்டுரைவகை

'கட்டுரை வகை' என்ற ஒரு கலையின் பெயர் மணிமேகலையிற் கூறப்படுகின்றது. தொடுத்துக் கூறும் சொல்வன்மையே அது. பெருங்கதையாசிரியர் 'வாக் கின் விகற்பம்' என அதனைக் குறிப்பார். இன்னாரிடம் இன்னபடி பேசவேண்டு மென்பதும், இன்ன பொருளை இவ்வாறு அமைத்துப் பேச வேண்டு மென்பதுமாகிய பல வரையறைகளை இலக்கியங்களை நுணுகி ஆராய் வதனால் அறியலாம். அரசர் முதலியவர்களிடத்தில் ஒரு துயரச் செய்தியையோ, அறிவுரையையோ கூறப்புகுங் காலத்து அவர்களை வாழ்த்தி அவர்களுடைய பெருமை யைச் சொல்லிப் பாராட்டிய பின்னரே அவற்றைச் சொல்லுதல் புலவர்கள் வழக்கம். வாழ்த்தின் வகை களுக்குரிய இலக்கணங்கள் சில உண்டு.

அளவை நூல் முதலியன

அளவை நூல், எண்ணூல், கனா நூல், கோழி நூல், குதிரை நூல், யானை நூல், புதையல் நூல், யோக நூல் முதலிய நூல் வகைகளும் கரந்துறை கணக்கு, கோலங் கோடல் முதலிய வேறு பலகலைகளும் இருந்தன.

தங்களுடைய கருத்துக்களைப் பிறருக்கு அறிவிப் பதற்குரிய பலவழிகள் தெரியவருகின்றன. கோவல னுக்கு மாதவி தாழை மடலில் செம்பஞ்சுக் குழம்பிற் றோய்த்த பித்திகையரும்பினால் ஒரு திருமுகம் எழுதி அனுப்பினாளென்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. வாசவ தத்தையின் வண்ணமகளாக இருந்த மானனீகை யென்பவளும் உதயணனும் தத்தம் உள்ளக்கருத்தை வாசவதத்தையின் முகத்தில் யவன பாஷையில் ஒருவருக் கொருவர் எழுதிவிடுத்த சித்திர வெழுத்துக்களால் அறிந்துகொண்டார்களென்ற ஒரு செய்தி பெருங் கதை யில் காணப்படுகிறது. அந்நூலில், இவ்வரலாற்றைக் கூறும் பகுதி முகவெழுத்துக்காதை யென்றே பெயர் பெறும்.

அரண்மனையில் இருந்த நாகமாலை யென்பவள் அங்கே நடந்த நிகழ்ச்சிகளை மந்தணமாகச் சீவகனுக்கு அறிவித்து வந்தாள். அவள் ஒரு குவளை மலருக்குள் ஒரு திருமுகம் வைத்து அனுப்பினாளென்றும், அக் குவளையின் காம்பே அத்திருமுக வோலையின் சலாகை யாக அமைந்திருந்ததென்ற்யும், அவ்வோலை அகவிதழுக் குள் பொருத்தப்பெற்றிருந்ததென்றும் அதனுள் எழுதப் பட்டவை துகிலிகைக் கணக்காலெழுதப்பட்டவையென் றும், அதனை அதற்கு அமைந்த முறைப்படி சீவகன் பிரித்துக் காம்பிற் சுற்றி வாசித்தறிந்தானென்றும் சீவக சிந்தாமணியால் அறியலாம்.

இவ்வாறு பலவகைக் கலைகளும் அவற்றிற்குரிய நூல்களும் தமிழ்நாட்டில் மலிந்திருந்தன. அவற்றில் வல்லாரும் பலர் இருந்தனர். பிறநாட்டுக் கலைவல்லார் இந்நாட்டில் வந்து தம் ஆற்றலைப் புலப்படுத்தி வந்தனர்.

    "மகத வினைஞரு மராட்டக் கம்மரும்
    அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
    தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி" (மணிமேகலை)

வாழ்ந்து வந்தனர். பிற நாட்டாரிடமிருந்து கற்றவற் றையன்றித் தமிழ்நாட்டாரே அறிந்து பயின்ற கலைகளும் நூல்களும் பல உண்டு. வட மொழியிலுள்ள கலைநூல் களையும் தமிழிற் பெயர்த்துக் கொண்டார்கள்.

செய்யவேண்டுவன

இக்காலத்தில் மேனாட்டாருடைய உதவியினாற் பல புதுக்கலைகள் உலகில் உலவுகின்றன. அவற்றிற்குரிய நூல்கள் பல ஆங்கிலம் முதலிய மொழிகளில் உள்ளன. அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து வருதல் வேண்டும். பண்டைக் காலத்தினர் பிறமொழிகளிலுள்ள கலைநூல்களை மொழி பெயர்த்துக் கொண்டது போல இக்காலத்துக் கேற்ற நூல்களையும் பிறமொழியிலிருந்து அறிஞர்கள் பெயர்த்தமைத்தல் முறையேயாகும். நம் நாட்டில் சிறந் தோங்கியிருந்த சிற்பம் முதலிய கலைகளின் திறத்திலும் நம்முடைய முயற்சி சிறக்கவேண்டும். ஏட்டுச்சுவடி களில் உள்ள கலைநூல்களை ஆராய்ந்து அறிந்து வெளிப் படுத்த வேண்டும். நான் ஏடுதேடச் செல்லும்பொழுது முதன் முறைகண்ட பலவகைக் கலைநூல்களிற் பெரும் பாலன மறுமுறை சென்றபொழுது அருமையறிந்து பாதுகாப்பார் இன்மையாற் சிதைந்து போயின; பல காணப்படவில்லை. அதை நினைக்கையில் இப்பொழுது கிடைப்பவற்றையேனும் அறிஞர்கள் பாதுகாத்து ஆராய்ந்து வெளியிட்டால் நலமாயிருக்குமே யென்று தோற்றுகிறது. கலைவல்லார்களுடைய குடும்பங்களி லுள்ளோரிடம் பல செய்திகளை வாய்மொழியாகக் கேட்டறியலாம். அவ்வாறு அறிந்து பலவற்றைத் தொகுக்கலாம். எனக்கு இருந்த ஐயங்களிற் சில வேறு ஊர்களுக்குச் சென்றிருந்தபொழுது அங்கங்கே யிருந்த முதியவர்களால் நீங்கின. என்னுடைய இளமையில் திருவீழிமிழலையில் சிறந்த சிற்பியொருவர் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். அவர் பல விஷயங்களைத் தெளி வாகச் சொன்னார். சீவகசிந்தாமணியில் வந்துள்ள யானைப்பேச்சு இப்பொழுதும் வழங்கி வருகின்றனவா வென்று திருவிடைமருதூரிலிருந்த ஒரு யானைப் பாகனைக் கேட்டேன். அவன் அவை அப்படியே வழங்கு கின்றன வென்றும், யானையின் இலக்கணங்கள் முதலிய வற்றைப்பற்றித் தமிழில் எழுதப்பெற்றுள்ள சுவடி யொன்று உள்ளதென்றும் கூறினான். அதைப் பார்க்க வெண்ணிப் பெற முயன்றும் அது கிடைக்கவில்லை. இப் பொழுது கிடைத்துள்ள பழைய நூல்களிலும் சாஸனங் களிலும் கலைகளைப்பற்றிய விஷயங்கள் பல உள்ளன. அவற்றை ஆராய்ச்சி செய்து வெளியிட்டால் உலகத்திற்கு மிகவும் பயன்படும்.
-------------

7. நிலவில் மலர்ந்த முல்லை


சீவகசிந்தாமணியை நான் முதன்முறை ஆராய்ந்து பதிப்பித்து வருகையில் (1887-இல்) அதிலுள்ள மேற் கோள்கள் இன்ன இன்ன நூலிலுள்ளன வென்று கவனித்தேன்; அப்பொழுது பல பழைய தமிழ் நூல் களைப்பற்றி அறிந்தேன். பத்துப்பாட்டென்று ஒரு தொகை நூல் உண்டென்பதும் அது *திருமுருகாற்றுப்படை முதலிய பத்துத் தனி நூல்களை உடையதென்பதும் நாளடைவில் தெரியவந்தன. அதனால், பத்துப் பாட்டைத் தேடிப் பெற்று ஆராயவேண்டுமென்ற ஆவல் உண்டாயிற்று. பல நண்பர்களுடைய உதவியால் பத்துப்பாட்டின் ஏட்டுப்பிரதிகள் சில கிடைத்தன. ஆனாலும் அவற்றில் பத்துப் பாட்டுக்களும் இல்லை. இருந்த பாட்டுக்களும் தனியே மூலமில்லாமல் உரை மட்டும் உள்ளனவாகவும், இடையிடையே குறைந்தன வாகவும் இருந்தன; உள்ள பகுதிகளும் திருத்தமாக இல்லை. ஆகையால் மேலும் மேலும் பத்துப்பாட்டுப் பிரதிகளைத் தேடிவந்தேன்.
------
* (1) திருமுருகாற்றுப்படை, (2) பொருநராற்றுப்படை, (3) சிறுபாணாற்றுப்படை, (4) பெரும்பாணாற்றுப்படை, (5) முல் லைப்பாட்டு, (6) மதுரைக்காஞ்சி, (7) நெடுநல்வாடை, (8) குறிஞ்சிப்பாட்டு, (9) பட்டினப்பாலை, (10) மலைபடுகடாம் என்பன.

நான் கும்பகோணம் காலேஜில் வேலைபார்த்துவந்த அக்காலத்தில் விடுமுறைகளில் வெளியூர்களுக்கு இதன் பொருட்டுப் பிரயாணம் செய்து வருவதுண்டு.

ஒருசமயம் ஆவணியவிட்டத்தோடு தொடர்ந்து ஒரு வாரம் விடுமுறை கிடைத்தது. திருநெல்வேலிப் பக்கத் திற் பரம்பரை வித்துவான்களுடைய வீடுகளில் தேடினால் சுத்தமான பிரதிகள் கிடைக்கக் கூடுமென்று எண்ணி யிருந்தேன். ஆதலின் அவ்விடுமுறையில் திருநெல் வேலிக்கும் ஆழ்வார் திருநகரி முதலிய ஊர்களுக்கும் சென்றுவர நிச்சயித்து அங்கங்கேயுள்ள சில அன்பர் களுக்கு நான் வருவதை எழுதியிருந்தேன். இதனை என் தந்தையாரிடம் தெரிவித்தபோது அவர், "சிராவணத் திற்கு இங்கே இராமல் வெளியூருக்குப் போகவேண்டாம். அடுத்த விடுமுறையில் பார்த்துக் கொள்ளலாம்" என்று எனது எண்ணத்திற்குத் தடையை உண்டாக்கினர். நான் போகவேண்டிய அவசியத்தைச் சொன்னேன். அவர் சிறிதேனும் இணங்காமல், போகக்கூடாதென்று தடுத்தனர். சிராவணத்தைக் காட்டிலும் பத்துப்பாட்டு எனக்குப் பெரிதாக இருந்தமையால் மிகவும் சிரமப்பட்டு அவரிடம் தக்க சமாதானம் கூறி விடைபெற்றுப் புறப் பட்டேன்.

இரவு எட்டுமணி, 'ரெயில்வே ஸ்டேஷனு' க்கு ஒற்றை மாட்டுவண்டியொன்று பேசிக்கொண்டு ஏறி னேன். என் தந்தையார் அரைமனத்தோடு விடை கொடுத்தனுப்பினார். ஒரு தகரப்பெட்டிமட்டும் உடன் வந்தது. வண்டி வாணாதுறை என்னும் இடத்துக்குத் தென்பாற் செல்லும்போது எதன்மேலோ மோதிக் குடைசாய்ந்துவிட்டது. நான் கீழே விழுந்தேன்; என் மேலே பெட்டி விழுந்தது. இந்த நிலையிலும் எனக்கு ஊக்கக் குறைவு உண்டாகவில்லை. என் மனம் முழுவதும் திருநெல்வேலியில் இருந்தது. ஏதாவது ககன குளி கையை ஒரு மகான் கொடுத்து, 'இதை மிகவும் அவசர மான சமயத்தில் உபயோகி' என்று சொல்லியிருந்தால், அந்தச் சமயத்தில் அதை உபயோகித்திருப்பேன். என் மனவேகத்துக்கு நேர்மாறாக வண்டியின் வேகம் இருந்த தோடு இடைவழியில் கீழேயும் வீழ்த்திவிட்டது.

திரும்பி வீட்டுக்குப் போய் இருந்து மறுநாள் புறப் படலாமென்று முதலில் எண்ணினேன்; முன்பே எனது பிரயாணத்தைத் தடுத்த என் தந்தையாருக்கு வண்டி குடைசாய்ந்த அபசகுனமும் துணைசெய்து பின்னும் என் பிரயாணத்தைத் தடுக்க ஏதுவாகுமென்று நினைந்து அங்ஙனம் செய்வது தக்கதன்றென்று பின்பு துணிந் தேன். ஆதலால் உடனே வண்டிக்காரனுக்குரிய சத்தம் முழுவதையும் கொடுத்துவிட்டுப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு 'ஸ்டேஷனை' நோக்கி நடந்தேன். நல்ல வேளையாக நான் உத்தேசித்துச் சென்ற புகைவண்டி கிடைத்தது; ஏறிச்சென்றேன்.

தஞ்சாவூருக்கு அப்பால் வரும்போது நடுவழியில் ஒரு காட்டில் வந்து வண்டி திடீரென்று நின்றது. ரெயில்வே அதிகாரிகள் பலர் வந்து நான் இருந்த வண்டி யைக் கீழும் மேலும் பார்த்தார்கள். தூக்க மயக்கத் தோடு இருந்த என்னைக் கீழே இறங்கி வேறு வண்டிக் குப் போகும்படி அதட்டிச் சொன்னார்கள். நான் இருந்த வண்டிக்கு முன்னே இருந்த வண்டியில் தீப்பிடித்து விட்டதாம். அதனால் இரண்டு வண்டிகளையும் கழற்றிவிட அவர்கள் எண்ணினார்கள். நான் ஈசுவரத்தியானம் செய்துகொண்டு வேறுவண்டியிற் போய் ஏறினேன். புறப்பட்டது முதல் உண்டான இந்த இடையூறுகளால் மனத்துக்குள் சிறிது சஞ்சலம் உண்டாயிற்று? எனக்கு இருந்த ஊக்கமிகுதியாற் பிறகு அது நீங்கிற்று.

மறுநாட் காலையில் சௌக்கியமாக நான் திருநெல் வேலியை அடைந்தேன். அங்கே அக்காலத்தில் கனக சபை முதலியாரென்ற கனவான் ஒருவர் ஸப்ஜட்ஜாக இருந்தார். அவர் தஞ்சாவூரில் உத்தியோகத்தில் இருந்து பிறகு அங்கிருந்து திருநெல்வேலிக்குப் போன வர். தஞ்சாவூரில் இருந்த காலத்தில் அவர் எனக்குப் பழக்கமானார். அப்பொழுது ஒருமுறை என்னுடைய நண்பர் கே. சுந்தரராமையரவர்கள் மூலம், தாம் திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும், அங்கே ஏடுகள் தேடும் விஷயத்தில் தம்மால் இயன்ற உபகாரம் செய்வதாகவும் சொல்லியனுப்பியதுண்டு. அது நினை வில் இருந்தமையாலும், நான் புறப்படுவதற்கு முன் அவருக்கு எழுதியிருந்தமையாலும், திருநெல்வேலியில் அவர் இருப்பிடத்தை விசாரித்துக்கொண்டு அவரிடம் சென்றேன். என்னை அவர் கண்டவுடன் எனது க்ஷேம சமாசாரத்தைக் கூட விசாரியாமல், "உங்களுக்கு இப்போதுதான் ஒரு கடிதம் எழுதித் தபாலுக்கு அனுப்ப இருந்தேன்; உங்களிடம் சொல்லவேண்டிய வற்றை இந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறேன்" என்று சொல்லி ஒரு கடிதத்தை என்னிடம் நீட்டினார். அது விலாஸ மெழுதித் தபால் தலையும் ஒட்டப்பெற்று அனுப்பத் தக்க நிலையில் இருந்தது. அதனை நான் பிரித்துப் பார்த்தேன். அதிலிருந்த செய்திகளின் கருத்து வருமாறு:-

"நான் தங்களுக்கு வாக்களித்தபடி ஏட்டுச் சுவடிகள் விஷயத்தில் உதவிசெய்ய இயலாதவனாக இருக்கி றேன். இளமை முதற்கொண்டு என்னுடைய நண்பரா யுள்ள ஸ்ரீ சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் தமக்குச் சில ஏட்டுச் சுவடிகள் வேண்டுமென்று எழுதியிருக்கிறார் கள். நான் தேடித் தருவதாக அவர்களுக்கு வாக்களித் திருக்கிறேன். தங்களுக்கு வேண்டியனவாகச் சொன்ன புஸ்தகங்களையே அவர்களும் கேட்டிருக்கிறார்கள். அதனால் தங்களுக்கு உதவி செய்ய இயலாதென்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இப்பக்கங்களில் வந்து தேடிச் சிரமப்பட வேண்டாம்."

இதைப் படித்துப் பார்த்தேன்; முதலியாரை நோக்கி, "மெத்த ஸந்தோஷம். நீங்கள் உதவி செய்வ தாகச் சொல்லியிருந்தமையால் உங்களைத் தேடி வந் தேன். தங்களுக்கு என்னைப்பற்றிய கவலைவேண்டாம். இந்தப் பக்கங்களில் எனக்குப் பழக்கமுள்ள பல பிரபுக் களும் வித்துவான்களும் இருக்கிறார்கள். அவர்கள் மிக்க அன்போடு எனக்கு உதவி செய்வார்கள். ஆதலால் நான் போய் வருகிறேன்" என்றேன்.

நான் மிக வருத்தப்படுவேனென்று முதலியார் நினைத்திருப்பார் போலும்! எனது விடை அவருடைய முகத்தில் ஒரு வியப்புக் குறிப்பை உண்டாக்கிற்று. "அப்படியா! உங்களுக்கு யார் யார் நண்பர்கள்? எந்த எந்த ஊர்களுக்குப் போகப் போகிறீர்கள்?" என்று அவர் கேட்டார்.

நான், "இந்தப் பக்கத்திலே பெரிய கனவான்கள், பலருடைய ஆதரவு எனக்குக் கிடைக்கும். பல ஜமீன் தார்களுடைய பழக்கம் எனக்கு உண்டு. ஆழ்வார் திருநகரி, ஸ்ரீ வைகுண்டம், தென்றிருப்பேரை முதலிய இடங்களுக்கெல்லாம் போய்த் தேட எண்ணியிருக் கிறேன்" என்று சொல்லிவிட்டு மெய்யன்பர்களாகிய பல உத்தியோகஸ்தர்கள் பெயர்களையும் கனவான்கள் பெயர்களையும் சொன்னேன். நான் குறிப்பிட்டவர்களெல்லாம் முதலியாருடைய அதிகாரத்திற்குப் புறம்பானவர்கள். கேட்ட முதலியார், "அப்படியானால் கிடைக்கும் புஸ்தகங்களில் எனக்கும் ஏதாவது கொடுத்தால் தாமோதரம் பிள்ளைக்கு அனுப்புவேன்Ţ" என்றார்.

நான் நகைத்துக்கொண்டே " நானே பறந்துகொண்டு இருக்கின்றேன் இந்த நிலையில் உங்களுக்கு வேறு கொடுக்க வேண்டுமா? நீங்கள் பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய செல்வாக்கில் எவ்வளவோ சுவடிகள் கிடைக்கலாம் " என்று விடைபெற்று வந்து விட்டேன்.

பிறகு கைலாச புரத்திலிருந்த வக்கீலும் ஜனோபகாரியாகிய அன்பர் ஸ்ரீ கிருஷ்ணசாமி ஐயர் என்பவரது வீடு சென்றேன். அவர் மிக்க அன்போடு, "எப்போது வந்தீர்கள்? நீங்கள் வருவதை முன்பே தெரிவிக்கக் கூடாதா" என்று சொல்லி உபசரித்து உணவு முதலிய சௌகரியங்களைச் செய்தார். ஆழ்வார் திருநகரிக்குப்போய் அங்கேயுள்ள கவிராயர்கள் வீடுகளில் தேடுவதற்கு வந்த என் கருத்தை அவரிடம் நான் தெரிவித்தேன். அவர், " நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் . என்னுடைய நண்பரும் வக்கீலுமாகிய சுப்பராய முதலியாரென்பவர் ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கிறார். அவருக்கு ஒரு கடிதம் தருகிறேன் உங்களுக்கு வேண்டிய அனுகூலங்களை எல்லாம் செய்து கொடுப்பார். " என்று கூறினார். பிறகு ஸ்ரீவைகுண்டத்திற்கு ஒர் வண்டி ஏற்பாடு செய்து கொடுத்து என்னை அனுப்பினார்.

அங்ஙணமே ஸ்ரீவைகுண்டம் போய்ச் சேர்ந்து வக்கீல் சுப்பராய முதலியாரைக் கண்டேன். அவர் மிக்க அன்போடு உபசரித்துப் பேசினார். தம்மால் இயன்ற உதவிகளை எல்லாம் செய்வதாக வாக்களித்தார். பிறகு அவருடன் அங்கிருந்து அருகிலுள்ள ஆழ்வார் திருநகரிக்குச்சென்றேன். நான் கடிதம் அனுப்பியிருந்த ஆழ்வார் திருநகரி அன்பர்கள் என்வரவை எதிர்பார்த்திருந்தனர். அப்போது திருவாவடுதுறை மடத்திலுள்ள அதிபர்களாக இருந்த அம்பலவாண தேசிகர் அவர்கள் அவ்வூர் மடத்திலுள்ள காரியஸ்தர்களுக்கு என்னை கவனித்துக் கொள்ளும்படி உத்தரவு செய்திருந்தார்கள். அவர்கள் யாவரும் முயன்று கவிராயர் வீட்டிலுள்ள சுவடிகளெல்லாம் தேடிஎடுத்து நான் வந்தவுடன் பார்க்கத் தயார் நிலையில் வைத்திருந்தனர்

நான் முதலில லஷ்மண கவிராயரென்ற ஒருவருடைய வீட்டிற்குப்போனேன். அவர் மிகவும் சிறந்த வித்துவானாகிய தீராத வினைதீர்த்த திருமேனி கவிராயரென்பருடைய பரம்பரையினர். அவர் வீட்டில் ஆயிரக் கணக்கான சுவடிகள் இருந்தன. பல பழைய நூல்களும் இலக்கணங்களும் பிரபந்தங்களும் புராணங்களும் இருந்தன. எல்லாவற்றையும் பிரித்துப் பிரித்துப் பார்த்து வந்தேன் நான் தேடிவந்த பத்துப்பாட்டு மட்டும் கிடைக்கவில்லை. ஒரு சுவடியில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட நூல்களின் 'ஜாப்தா' இருந்தது. அதில் கண்டவற்றுள் பத்துப்பாட்டின் முதல் ஏழு பாடல்கலுள்ள பிரதியின் பெயர் ஒன்று.. ஊரைவிட்டு புறப்பட்டது முதல் அனுகூலமான செய்தி யொன்றையும் பெறாமல் தளர்ச்சி அடைந்திருந்த என் மனத்தில் அப்போது சிறிது ஊக்கம் பிறந்தது அந்தச் சுவடிக் குவியல் களிலே பத்துப்பட்டு அகப்படக் கூடுமென்றே நம்பினேன்.

மூன்று நாட்கள் ஆழ்வார் திருநகரியில் இருந்தேன். வந்த முதல்நாள் ஆவணி அவிட்டம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்த பள்ளிக்கூட பரிசோதகரும் என்நண்பருமான சிவராமைய ரென்பவருடைய வீட்டில் தங்கி இருந்தேன். ஒவ்வொரு நாளும் லக்ஷ்மண கவிராயர் வீட்டில் ஏடு பார்ப்பதும் இடையே சில சமயங்களில் தாயவலந்தீர்த்த கவிராயர் அமிர்த கவிராயர் முதலிய வேறு கவிராயர்கள் வீடுகளிலுள்ளவற்றைப் பார்ப்பதும் என்னு டைய வேலைகளாக இருந்தன. முப்பது கவிராயர்கள் வீடுகளில் தேடினேன். லக்ஷ்மண கவிராயர் வீட்டிலுள்ள ஏடுகள் எல்லாவற்றையும் பார்த்தேன். பத்துப்பாட்டு அகப்படவில்லை. இது நான் புறப்பட்ட காலத்து ஏற் பட்ட சகுனங்களின் பயன் என்றெண்ணி வருந்தினேன்; என் உள்ளம் சோர்ந்தது.

அப்பொழுது லக்ஷ்மண கவிராயர், "எங்கள் வீட் டில் அளவற்ற ஏடுகள் இருந்தன. எங்கள் முன்னோர்களில் ஒரு தலைமுறையில் மூன்று சகோதரர்கள் இருந் தார்கள்; அவர்களில் ஒருவர் இறந்து விட்டனர். அவருடைய மனைவியாரின் பிறந்தகம் தச்சநல்லூர். தம் புருஷர் இறந்தவுடன் அவர்கள் தச்சநல்லூர் சென்று விட்டார்கள். போகும்போது இங்கிருந்த சுவடிகளையெல்லாம் பாகம் பண்ணி மூன்றில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு போய்விட்டார்களாம்" என்றார். "பத்துப் பாட்டும் அந்தச் சுவடிகளோடு தச்ச நல்லூருக்குப் போயிருக்க வேண்டும். சரி; இவ்வளவு சிரமப்பட்டும் பயனில்லாமற் போயிற்றே!" என்று வருந்தி நான் கூறினேன்.

அவர் திடீரென்று எதையோ நினைத்துக்கொண்டு, "ஒரு விஷயம் மறந்துவிட்டேன்; இவ்வூரில் என்னு டைய மாமனார் இருக்கிறார். தேவபிரான்பிள்ளை யென் பது அவர் பெயர். அவருக்கும் எனக்கும் இப்பொழுது மனக்கலப்பில்லை. என்னுடைய வீட்டிலிருந்த வேலைக் காரன் ஒருவன் சில சுவடிகளைக் கொண்டுபோய் அவரி டம் கொடுத்துவிட்டான். அவரிடம் நீங்கள் தேடும் புஸ்தகம் இருக்கிறதாவென்று பார்க்கச் செய்யலாம். ஆனால் நான் அவரோடு பழகுவதை இப்போது நிறுத்தி விட்டேன்" என்றார்.

"அவற்றையும் பார்ப்போம். தாங்கள் மட்டும் தயை செய்யவேண்டும். எனக்காகவும் தமிழுக்காகவும் மனஸ்தாபத்தை மறந்து தாங்களே அவர் வீட்டில் இருப்பவற்றை வாங்கித் தரவேண்டும்; என்னை வரச் சொன்னாலும் உடன் வருவேன்" என்று நான் அவரைக் கேட்டுக் கொண்டேன்; அருகிலுள்ளவர்களும் சொன் னார்கள். கவிராயர் அங்ஙனமே செய்வதாக ஒப்புக் கொண்டார்.

ஏடுகளைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கையும் மன மும் சோர்ந்து, அவ்வூரில் ஸப்ரிஜிஸ்திராராக இருந்த இராமசாமி ஐயரென்பவர் வீட்டுக்குப் போனேன். இரவு அவர் வீட்டில் போஜனம் செய்துவிட்டுத் திண்ணையில் உட்கார்ந்தேன். அவ்வூரிலுள்ள ஸ்ரீ வைஷ்ணவப் பெரி யார் சிலர் நான் விரும்பியபடி திவ்யப் பிரபந்தத்திலுள்ள சில பாசுரங்களின் பழைய வியாக்கியானங்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர். நான் மிக்க விருப்பத் துடன் கேட்டு மகிழ்ந்தேன். இயல்பாகவே அவ்வியாக்கி யானங்களைக் கேட்டு அடையும் முழுமகிழ்ச்சியும் எனக்கு அப்பொழுது உண்டாகவில்லை. அதற்குக் காரணம் அவற்றைச் சொன்னவர்களது குறையன்று; என் உள்ளத்துக்குள்ளேயிருந்த, 'பத்துப் பாட்டு அகப் படவில்லையே!' என்ற கவலையே.

இப்படி இருக்கையில், அன்று ஏதோ விசேஷ மாத லின், திருவீதியில் பெருமாளும் சடகோபாழ்வாரும் எழுந்தருளினார்கள்: ஆழ்வார் அவதரித்த திவ்யதேசம் அவ்வூரென்று நான் சொல்வது மிகை; நானும் பிறரும் எழுந்து தரிசனம் செய்தோம். நான் வணங்கினேன். பட்டர்கள் சந்தனம் புஷ்ப மாலை முதலியவற்றை அளித் தார்கள். எல்லோருடைய அன்பும் ஒருமுகப்பட்டு அத் தகைய மரியாதைகளை நான் பெறும்படி செய்தது. அப் பொழுது நம்மாழ்வார் திருக்கோலத்தைத் தரிசித்தேன்; அவரைப் பார்த்து, "ஸ்வாமி! தமிழ் வேதம் செய்தவ ரென்று தேவரீரைப் பாராட்டுகின்றார்கள். தேவரீருடைய ஊருக்குத் தமிழ் நூலொன்றைத் தேடி வந்திருக்கிறேன். தமிழுக்குப் பெருமை யருளும் தேவரீருக்கு, நான் படும் சிரமம் தெரியாத தன்றே! நான் தேடி வந்தது கிடைக் கும்படி கருணை செய்யாமல் இருப்பது நியாயமா!" என்று சொல்லிப் பிரார்த்தித்தேன். உள்ளம் அயர்ந்து போய், 'இனிமேல் செய்வது ஒன்றும் இல்லை' என்ற முடிவிற்கு வந்தமையினால் இங்ஙனம் பிரார்த்தனை செய்தேன்.

பெருமாளும் ஆழ்வாரும் அவ்விடத்தைக் கடந்து அப்பால் எழுந்தருளினார்கள். உடனே நாங்கள் திண்ணை யில் வந்து அமர்ந்தோம். நிலா ஒளி நன்றாக வீசியது. அப்பொழுது லக்ஷ்மண கவிராயர் எதையோ தம் மேலா டையால் மறைத்துக்கொண்டு மிகவும் வேகமாக எங்களை நோக்கி வந்தார். திருக்கோயிலில் பிரசாதங்களைப் பெற்று அவற்றை மறைத்துக்கொண்டு வருகிறாரென்று நான் நினைத்தேன். வந்தவர், "இந்தப் புஸ்தகத்தைப் பாருங்கள்; இந்த ஒன்றுதான் என் மாமனாரிடம் இருக் கிறது; பார்த்துவிட்டுத் திருப்பி அனுப்பிவிடுவதாகச் சொல்லி வாங்கி வந்தேன்" என்று கூறி மேல் வஸ்திரத் தால் மூடியிருந்த சுவடியை எடுத்தார். அவர் என்னிடம் கொடுப்பதற்கு முன்பே ஆத்திரத்தால் நான் அதனைப் பிடுங்கினேன்; மேலே கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து அந்த நிலாவின் ஒளியிலேயே பிரித்தேன். சட்டென்று முல்லைப் பாட்டு என்ற பெயர் என் கண்ணிற் பட்டது. நிலவில் மலர்ந்த அம்*முல்லையினால் என் உள்ளம் மலர்ந் தது. எனக்கு உண்டான சந்தோஷத்திற்கு எல்லை யில்லை. மிகவும் விரைவாக முதலிலிருந்து திருப்பித் திருப்பிப் பார்த்தேன். ஆரம்பத்தில் திருமுருகாற்றுப் படை, அப்பால் பொருநராற்றுப்படை, அதன்பின் சிறு பாணாற்றுப்படை-இப்படி நெடுநல்வாடை முடிய ஏழு பாட்டுக்கள் இருந்தன. ஒவ்வோர் ஏட்டையும் புரட்டிப் புரட்டிப் பார்க்கையில் என்னையே மறந்து விட்டேன். சந்தோஷ மிகுதியினால் அப்பொழுது என் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அருகிலிருந்தவர்களுக்குப் பொருள் பட்டிரா. அந்தச் சமயத்தில்மட்டும் என்னை யாரேனும் புதிதாகப் பார்த்திருந்தால் எனக்குப் பைத்தியம் பிடித் திருப்பதாகவே கருதியிருப்பார்; என்னுடைய மன உணர்ச்சி அவ்வளவு தீவிரமாக இருந்தது.
----------------
* பத்துப்பாட்டில் ஐந்தாவதாகிய முல்லைப்பாட்டு முல்லை யெனவும் வழங்கப் பெறும்.

"ஆழ்வாரைப் பிரார்த்தித்தது வீண்போகவில்லை. அவர் கண்கண்ட தெய்வமென்பதில் ஐயமேயில்லை" என்றுஅருகிலிருந்தவர்களிடம் கூறினேன். அன்று இரவு முழுவதும் சந்தோஷ மிகுதியினால் எனக்குத் தூக்கமே வரவில்லை. மறுநாட் காலையில் திருக்கோயிலுக்குச் சென்று பெருமாளையும் ஆழ்வாரையும் தரிசித்து அர்ச்சனை செய்வித்து, "இப்படியே நான் நினைத்த காரியங்களுக்கெல்லாம் அனுகூலம் செய்தருள வேண் டும்" என்று பிரார்த்தித்துவிட்டு வந்தேன்.

அப்பால், ஊற்றுமலை ஜமீன்தாராகிய ஹிருதயாலய மருதப்பத் தேவருக்குக் கொடுக்கும் பொருட்டு ஊரி லிருந்து கொண்டு போயிருந்த சீவக சிந்தாமணிப் புஸ்த கத்தையும் வேறு சில புஸ்தகங்களையும் லக்ஷ்மண கவிராயருக்குக் கொடுத்தேன். அங்கே கிடைத்த *ஐங்குறு நூற்றின் பழைய உரையுள்ள குறை ஏட்டுப் பிரதி ஒன்றையும் பதிற்றுப்பத்து, புறப்பொருள் வெண்பாமாலையாகிய இரண்டையும் பத்துப்பாட்டோடு பெற்றுக்கொண்டு முக்கியமானவர்களிடமெல்லாம் விடை பெற்று வேறு சில ஊர்களிலுள்ள கவிராயர்கள் வீடுகளி லிருந்த ஏடுகளையும் பார்த்துக் கொண்டு திருநெல்வேலி சென்றேன்.
--------------
* இந்தப் பிரதிதான் ஐங்குறுநூற்றை நான் பதிப்பித்தற்கு ஆதாரமாக இருந்தது.

திருநெல்வேலியில் கனகசபை முதலியாரைக் கண்டேன். அவர், "எங்கெங்கே போயிருந்தீர்கள்? யார் யார் உதவி செய்தார்? என்ன என்ன நூல்கள் கிடைத்தன?" என்று விசாரித்தார். எனக்கு இன்னா ரின்னார் உதவி செய்தனரென்றும் கிடைத்த சுவடிகள் இன்னது இன்னதென்றும் தெரிவித்தேன். அவர், "எனக்கு ஏதாவது தந்தால் தாமோதரம் பிள்ளைக்கு அனுப்புவேன்" என்றார். "தேடாத இடமெல்லாந் தேடி அலையாத அலைச்ச லெல்லாம் அலைந்து பெற்ற வைகளை உங்களுக்கு நான் எப்படித் தருவேன்? நீங்கள் சிரமப்படாமல் பிறருடைய சிரமத்தினால் லாபம் பெறுவது நியாயமா?" என்று சொன்னேன். அவர் மேலே ஒன்றும் பேசவில்லை. அப்பால் அங்கே கைலாசபுரத்திலிருந்த கிருஷ்ணசாமி ஐயரவர்களைப்பார்த்து அவர்கள் மூலம் கிடைத்த உதவியைப் பாராட்டி விடைபெற்றுக்கொண்டு கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.

நிலவில் மலர்ந்த முல்லையையுடைய அப்பிரதியிலும் ஏழு பாட்டுக்களின் உரைமாத்திரம் இருந்தது; ஆனால் திருத்தமுள்ளதாகக் காணப்பட்டது. நான் ஏடுகளைத் தேடிச் சென்று பட்ட சிரமத்தைப் பற்றிய வரலாறு கள் மிகப் பல; அவற்றுள் இந்த நிகழ்ச்சி ஒன்று.
----------------------

8. இராவுத்தர்*


* "தாருல் இஸ்லாம்" பதினேழாம் ஆண்டு ஹிஜ்ரி மலர், 29-6-35

தென்னாட்டு முகம்மதியர்களுள் ஒரு சாரார் இராவுத்தரென்னும் பட்டப் பெயரை உடையவர் களாக இருக்கின்றனர். இப் பெயர் சில பழைய தமிழ் நூல்களிலும் சிலாசாஸனங்களிலும் காணப்படுகிறது. தமிழ் நூல்களிலுள்ள பிரயோகங்களைப் பார்க்கும் போது இச்சொல் குதிரையை அடக்கி யாண்டு செலுத் தும் வீரரென்னும் பொருள்படுகின்றது. வேறு இடங் களிலுள்ள பிரயோகங்கள் இது சிறந்த நிலையிலுள்ளவர்களாற் கொள்ளப்படும் பட்டப்பெயரென்பதைப் புலப்படுத்துகின்றன.

பழைய திருவிளையாடலிற் கண்ட செய்திகள்

பெரும்பற்றப்புலியூர் நம்பி யென்னும் புலவர் பெருமான் இயற்றிய திருவாலவாயுடையார் திருவிளை யாடற் புராணத்தில் இச்சொல் மூன்று இடங்களில் வந்துள்ளது. மாணிக்க வாசகருடைய அன்புக்கு இரங்கிய சிவபெருமான் அவர் பொருட்டாகப் பாண்டிய னுக்குக் குதிரைகளை அளிக்க வந்தாரென்னும் வரலாற் றைச் சொல்லும் பகுதி ஒன்று அப்புராணத்தில் உண்டு. அக்கடவுள் தாம் கொணர்ந்த பரிகளைப் பாண்டியன் பால் ஒப்பித்ததற்கு அறிகுறியாகக் கயிறு மாறின செய்தியை,

    "ஐயமில் லாமன் முன்னின் றாவணி மூல நன்னாள்
    துய்யபே ருலகுக் கெல்லாந் துளங்கிரா வுத்த ராயன்
    மெய்யைமெய் யுடைய மெய்யன் மெய்யடி யானை வேண்டிப்
    பொய்யிலா மன்னன் காணப் பொய்ப்பரி மாற்றஞ் செய்தான்"

என்று ஆசிரியர் கூறுகிறார். இதில், 'துய்ய பேருலகுக் கெல்லாந் துளங் கிரா வுத்த ராயன்' என்று குதிரைச் சேவகராக வந்தவரைச் சிறப்பிக்கின்றார். இராவுத்த ராய னென்பது இராவுத்தர்களுக்குத் தலைவனென்று பொருள்படும். பல குதிரைகளோடு வந்தாரென்பது வரலாறாதலின் அக்குதிரைகளை நடத்தும் இராவுத்தர் களுக்கு அவர் தனித் தலைவரானார். சிவபக்தராகிய புலவர் ஒருவரால் தம்முடைய வழிபடு கடவுளைக் குறிக் கையில் இராவுத்தராயனென்ற சொல் வழங்கப் படுதலின் இச்சொல் மதிப்புடையதாகவே இருக்க வேண்டும். பின்னும், குதிரைகளைப் பெற்றுக்கொண்ட பாண்டிய மன்னன் அவற்றை யளித்தவருக்கு வரிசை வழங்க வேண்டுமென்றெண்ணி ஓரழகிய ஆடையை அளித்தா னென்பதை ஆசிரியர்,

    "இந்நெறி மன்னர் மன்னன் இனிமைகூர்ந் திராவுத் தற்கு
    நன்மைகூரு வரிசைத் தூசு நல்குவ மென்று நல்க"

என்று சொல்கிறார். இங்கே குதிரைச் சேவகராக வந்த கடவுளை 'இராவுத்தன்' எனக் குறிக்கின்றனர்.

இப்புராணத்திலே சோழனைக் கொண்டாழியிற் றாழ்த்த திருவிளையாட லென்னும் ஒரு வரலாறு உண்டு. பக்தனாகிய ஒரு பாண்டியன் பொருட்டு அவன் பகைவ னாகிய சோழனொருவனைச் சிவபிரான் குதிரைவீரராக வந்து கொண்டாழியென்னும் ஒரு வகை நீர்நிலையில் ஆழ்த்தினாரென்ற செய்தி அதிற் சொல்லப்படுகிறது:

    "துன்று பல்படைச் சோழனை யாழ்த்திய
    கொன்றை மாலைக் குதிரை யிராவுத்தன்
    வென்றி நீள்குரல் காட்டி விளங்குபொன்
    மன்று ளாலயம் புக்கு மறைந்தனன்"

என்பது அதில் உள்ள ஒரு செய்யுள். இதன் கண், சோழனை ஆழ்த்திய குதிரை வீரராகிய சிவபிரான் ஆலயத்துள் மறைந்தாரென்று காணப்படுகிறது. இங்கே குதிரை இராவுத்தனென்னும் சொல் குதிரை வீரனென் னும் பொருளிலேயே வழங்கப்பட்டிருத்தல் காண்க.

திருப்பெருந்துறைப் புராணம்

திருவாவடுதுறை யாதீனத்து வித்துவானாக இருந்த ஸ்ரீ சாஸ்திரம் சாமிநாத முனிவரென்பவரால் இயற்றப் பெற்ற பழைய திருப்பெருந்துறைப் புராணத்தில் மாணிக்க வாசகர் பொருட்டுச் சிவபிரான் குதிரைவீரராக வந்த செய்தி அமைந்துள்ள,

    "கோட்டமில் லாமா ணிக்கவா சகர்முன்
            குதிரைரா வுத்தனாய் நின்று
    வாட்டமில் லாத்தன் கருணையா ரமுதம்
            வளர்பெருந் துறையரன் புரிந்து"

என்னும் ஒரு செய்யுள் காணப்படுகிறது. இதன் கண் ணும் குதிரை ராவுத்தன் என்ற சொல் வந்துளது. இவ்வரலாற்றிற்கு அறிகுறியாகத் திருப்பெருந்துறைச் சிவாலயத்தில் குதிரை ஸ்வாமி மண்டபம், அல்லது குதிரை ராவுத்தர் மண்டபம் என ஒரு மண்டபம் உள்ளது. அங்கே சிவபிரான் குதிரைவீரராக உள்ள திருவுருவம் ஒன்று விளங்குகிறது.

கந்தரலங்காரம்

கந்தரலங்காரத்தில் முருகக்கடவுளை அருணகிரி நாதர்,

    "மாமயி லேறு மிராவுத்தனே"

என்று துதிக்கின்றார். மயிலைக் குதிரையாக வைத்து அதனை நடத்தும் முருகக்கடவுளைக் குதிரைவீரரென்பார் இராவுத்தனென்றார். "வாசுகி எடுத்துதறும் வாசிக் காரனும்" என்று அவரே வேறிடத்தில் மயிலைக் குதிரை யாகக் கூறுவர்.

விறலிவிடு தூது

கூளப்ப நாயகன் விறலிவிடு தூதில்,

"இராவுத்தர், கைக்குளடங் காதுபரி கான்மீற"

என ஒரு பகுதி உள்ளது. அதில் இராவுத்தரென்பது குதிரையை அடக்கியாளும் ஆற்ற லுடையவரென்னும் பொருளில் வந்தது.

குதிரை யேற்றம்

முற்காலத்தில் குதிரையைச் செலுத்தும் ஆற்றல் மிக உயர்வாகக் கருதப்பட்டு வந்தது. பஞ்சபாண்ட வர்களுள் ஒருவனாகிய நகுலனும் நளச் சக்கரவர்த்தியும் குதிரை யேற்றத்திற் சிறந்தவர்கள். அறுபத்து நான்கு கலைகளில் குதிரை யேற்றமும் ஒன்றாகும். குதிரையைச் செலுத்தும் வீரம் குதிரை மறம், குதிரைவென்றி யென் னும் புறப்பொருட்டுறைகளில் பாராட்டப் படுகின்றது. சேரமான் செல்வக் கடுங்கோவாழி யாதனென்னும் அரச னது கையைச் சிறப்பிக்கவந்த கபிலரென்னும் பொய்யா வாய்மொழிப் புலவர் பெருமான், 'அகழியின்கண் விழாமல் தடுக்கும் பொருட்டு குதிரையை வேண்டுமள விலே பிடிக்கும் வலிமையை யுடையன நின் கைகள்' என்னும் பொருளமைய,

    "பாருடைத்த குண்டகழி
    நீரழுவ நிவப்புக்குறித்து
    நிமிர்பரிய மாதாங்கவும்

வலிய வாகுநின் றாடோய் தடக்கை" (புறநானூறு)

என்கிறார். இதனாற் குதிரையை அடக்கிச் செலுத்தும் வீரம் மிகவும் உயர்வுடையதென்பது பெறப்படுகின்ற தன்றோ?

"உருவகக் குதிரை மழவர்"

என ஒருவகைக் குதிரைவீரர்களை அகநானூற்றால் அறிய லாம்.

குதிரையைச் செலுத்தும் பேராற்றலையுடையவ ரென்று அரசர் முதலியோர் சிறப்பிக்கப்படுதல் தொன்று தொட்ட வழக்கம். அவ்வீரத்தாற் பெறப்படும் இராவுத்த ரென்னும் சிறப்புப் பெயரைப் பிற்காலத்தில் அரசர்களும் அவர்களுடைய அதிகாரிகளும் உடையவர்களாயினர்.

சாஸனங்கள்.

திருவானைக்காவிலுள்ள *ஒரு சிலாசாஸனத்தில், 'ராஹுத்த ஜாஜல தேவர்க்கு' என்ற தொடர் காணப்படுகிறது. ஜாஜல தேவரென்பவர் 'ஸௌபாண குல திலகர்' என்று சிறப்பிக்கப்படுகிறார்.
--------------
* South Indian Inscriptions, Vol. V Page, 428.

ராஹுத்தரென் பது ராவுத்தரென்பதன் திரிபேயாகும். அம்மன்னர் அப்பெயருடையராக இருத்தல் அப்பட்டம் அரசர்களா லும் மேற்கொள்ளப் பெறுவதைப் புலப்படுத்துகின்றது. கோயம்புத்தூர் ஜில்லா ஈரோட்டிலுள்ள *சாஸன மொன்றில் 'மகா மண்டலேச்வரன்...பர்வத ராவுத்தர்' என ஒரு சிற்றரசன் பெயர் உள்ளது. இங்ஙனமே, + உதயகிரி யென்னும் இடத்திலிருந்த அரண் காவற்றலை வனாகிய திருமலை ராவுத்தராயனென்னும் அதிகாரி யொருவனும், ++ ஹொய்சள அரசராகிய இராமநாத தேவ ரென்பவரால் விருத்திபெற்று வாழ்ந்த இராவுத்தராய னென்ற ஓர் அதிகாரியும் இப்பெயரை உடையவர்களாக இருந்ததைச் சிலாசாஸனங்கள் தெரிவிக்கின்றன.

கொங்கு நாட்டிலுள்ள $ ஆமூரென்பது இராவுத்த ராய நல்லூரென்னும் பெயருடையதென்று தெரிகிறது. கள்ளக்குறிச்சி தாலுகாவில் இராவுத்த நல்லூ ரென் னும் ஊரொன்றுண்டு. ஊர்ப்பெயர்கள் பெரும்பாலும் அரசர், சிறந்த அதிகாரிகள் முதலியவர்களுடைய பெய ரால் வழங்கப் பெறுதல் வழக்க மாதலின் மேற்கூறிய ஊர்ப்பெயர்களால் அறியப்படும் இராவுத்தராயர், இரா வுத்தரென்பன சில சிற்றரசர் அல்லது அதிகாரிகளையே குறிப்பனவாகக் கொள்ள வேண்டும்.

இதுகாறுங் கூறிய இலக்கிய வழக்காறுகளாலும் சாஸன வழக்காறுகளாலும் இராவுத்தரென்பது அரசர் களும் சிற்றரசர்களும் அதிகாரிகளும் வீரர்களும் புனையும் சிறப்புப் பெயரென்பது அறியப்படும்.
---------
* South Indian Inscriptions 169, of 1910.
+ Ibid. 80 of 1911.
++ S.I. Inscriptions, 414 of 1913
$ I bid, 588 of 1905.

"ரவுத்"

பலிஜவாரு என்னும் ஜாதியினருள் ஒரு சாரார் 'ரவுத்' என்னும் குடிப்பெயருடையவராக இருக்கின்ற னர். அவர்கள் பாளையக்காரர்களிடம் போர் வீரர்களாக இருந்தமையின் அப்பெயருடையராயினர் என்று சிலர் கூறுகின்றனர். இங்ஙனமே மைசூர் அரசர்கள் பால் போர்வீரர்களாக இருந்தவரென்று கூறப்படும் கன்னடி யர்களிற் சிலர் 'ரவுத்' என்னும் மரபுப்பெயர் கொண் டிருக்கின்றனர். ரவுத்தென்பது வீரத்தொடர் புடை மையை இவை புலப்படுத்தும். ரவுத்தென்பதும் ராவுத்த ரென்பதும் ஒரே பெயரின் திரிபுகளென்பர்.

பெயர்க் காரணம்

ராவுத்த ரென்பது இன்ன காரணத்தால் வந்த பெயரென்பது இப்பொழுது தெளிவாக அறியக்கூட வில்லை. சில வடமொழி யறிஞர்கள் ராஜபுத்திரர் என் பதன் சிதைவாக இருத்தல் கூடுமென்று எண்ணுகின் றனர். ரா என்பது குதிரையைப் புலப்படுத்தும் சொல் லென்றும் அதனடியாக இச்சொல் பிறந்திருக்குமென்றும் சிலர் ஊகிக்கின்றனர். இப்பெயரின் காரணம் யாதா யினும் இது வீரத்தைப் புலப்படுத்துவ தென்பதில் மாறு பாடு ஒன்றும் இல்லை.

வீரர்களுக்குரிய சிறப்புப் பெயர்களுள் ஒன்றாகிய இராவுத்தரென்னும் இது முகம்மதியர்களுள் ஒரு சாரார்க்கு அமைந்ததற்குரிய வரையறையான காரணம் புலப்படவில்லை. ஆயினும் எனக்குத் தோற்றும் காரணம் ஒன்றை இங்கே கூறுகிறேன்.

பண்டைக்காலம் தொடங்கித் தமிழ் நாட்டில் அரசர் கள்பால் வேற்று நாட்டு வீரர்கள் இருந்து பலவகை யான உதவிபுரிந்து வாழ்ந்து வந்தனர். குதிரை வீரர்க ளாக இருந்தவர்களிற் பலர் வேற்று நாட்டார்களே.

சீவகசிந்தாமணியாலும் பெருங்கதை முதலியவற்றாலும் வேறு பாஷையைப் பேசும் பிறநாட்டு வீரர்கள் குதிரை களைச் செலுத்தினார்களென்ற செய்தி தெரிகிறது. பட்டினப்பாலையினாலும் வேறு சில நூல்களாலும் வட நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்குக் குதிரைகள் கப்பல் களில் வந்து இறங்கின வென்று அறியலாம். முகம்மதி யர்களுக்குரிய நாடாகிய அரபி நாட்டில் சிறந்த பல வகைக் குதிரைகள் உள்ளன வென்பதும் அவற்றைப் பாதுகாத்து வளர்ப்பதில் அரபியர்கள் இணையற்றவர்க ளென்பதும் உலகமறிந்த செய்திகள். ஆதலின் அந் நாட்டிலிருந்து இந்நாட்டுக்குக் குதிரைகள் வந்தகாலத் தில் அவற்றுடன் குதிரை வீரர்களும் வந்தனரென்றும் அவர்களை இராவுத்தரென்ற பெயரால் தமிழ் நாட்டினர் அழைத்தனரென்றும் கொள்ளலாம். அங்ஙனம் வந்த இராவுத்தர்கள் முகம்மதியர்களாதலின் அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் பிற்காலத்தில் இராவுத்தர்க ளென்ற பெயராலேயே அழைக்கப்பட்டனர். உடையார் பாளையம் முதலிய சமஸ்தானங்களில் குதிரைகளைப் பாதுகாக்கும் பணியை இன்றும் முகம்மதியர்களே செய்து வருகின்றனர்.

சிவபிரான் குதிரைவீரராக வந்து திருக்கோலத்தை வருணிக்கையில் திருவாதவூரர் புராண ஆசிரியராகிய கடவுண்மாமுனிவர்,

    "ஒப்பரிய சட்டையு முடுத்திலகு பட்டும்
    தொப்பியும் முகத்திடை துலக்கமுள ராகி"

வந்தாரென்கிறார். அந்த இராவுத்தத் திருக்கோலத்தி லுள்ள சட்டையும் இடைப்பட்டும் தொப்பியும் தென்னாட்டு முகம்மதியர்கள் உடைகளை நினைப்பிக் கின்றன.

முற்கூறிய திருப்பெருந்துறைப் புராண ஆசிரியர், பாண்டியன் குதிரை யிராவுத்தரை முதலிற் கண்டவுடன் அதிசயித்து அவரது அழகை நோக்கி,

    ".......அன்பாய், ஏலுநன் னுதன்மேற் கைவைத்
    தொழிற்சலாம் செய்தல் கண்டு"

    "மாறிலாக் கருணைவள்ளல் மன்னன்போற் றாமுஞ் செய்து
    தேறுசீ ரருட்கண் ணாற்புன் சிரிப்பொடும் பார்த்த"

தாகக் கூறுகின்றார். குதிரை இராவுத்தருக்குப் பாண் டியன் தன் நெற்றிமேற் கைவைத்துச் சலாம் செய்தா னென்று இவ்வாசிரியர் கூறுதல் கருதத்தக்கது. குதிரை வீரராக வந்தவர் முகம்மதியக் கோலத்தோடு வந்தன ராதலின் அவருக்கேற்ப அரசன் சலாம் செய்தானென்று ஆசிரியர் அமைத்தனரென்றே கொள்ள வேண்டும். இதனாலும் குதிரை நடத்தும் வீரத்துக்கும் முகம்மதியர் களுக்கும் உள்ள தொடர்பு விளங்கும்.

எனவே, குதிரைகளாற் சிறப்புற்ற நாட்டைத் திசை நோக்கித் தொழும் முகம்மதியர்கள் குதிரை வீரர்களுக் குரியதாகிய இராவுத்தரென்னும் சிறப்புப் பெயரை உடையராதல் பொருத்தமும் மிக்க மதிப்பும் உடைய தென்பதில் ஐயமில்லை.
------------------

9. *ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்


*8-12-35ல் சென்னை பச்சையப்பர் கலாசாலை மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரவர்கள் நூற்றாண்டு விழா வின்போது செய்த முன்னுரைப் பிரசங்கம் இது.

வித்துவான்களின் உபகாரம்

நாம் ஜபம் செய்யும் மந்திரங்களுக்கு உரிய ரிஷிகள் இருக்கிறார்கள். எந்த மந்திரத்தை ஜபம் செய்ய ஆரம்பித்தாலும் அதை வெளிப்படுத்திய ரிஷியை முதலில் வணங்கிவிட்டு ஆரம்பிகிறோம். ஞானத்தையும் வித்தையையும் உலகத்துக்கு அளித்த பெரியோர்களை வந்தனம் செய்யவேண்டிய அவசியத்தையும் அவர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய நன்றியறிவையும் இது புலப்படுத்தும். இப்படியே பலவகையான கலை களைப் பயில்பவர்கள் அவற்றை உலகத்தில் வழங்கச் செய்த பெரியோர்களை வணங்குவது கடைமையாகும்.

வித்தைகள் அழிந்துபோகாமல் வித்துவான்கள் காப்பாற்றி அவற்றை உலகத்தில் பிரகாசிக்கச் செய் கிறார்கள். பிரமதேவருடைய சிருஷ்டி அழிந்தாலும், அவர்களுடைய சிருஷ்டி அழியாமல் நிலைபெற்று விளங் குகின்றது. வித்தைகள் உலகத்திலே அழியாமல் இருக்க வேண்டுமென்று மனம், வாக்கு, காயம் என்னும் திரிகர ணங்களாலும் அவர்கள் பலவகையாக உழைத்து ஒன் றையும் எதிர்பாராமல் பேருதவி புரிகின்றார்கள். அவர்கள் செய்த நன்றியை நாம் எந்தக் காலத்திலும் மறவாமல் இருக்கவேண்டும்.

சங்கீதமும் தெய்வங்களும்

பழையகாலம் முதல் சங்கீத வித்தையை உலகத்தில் பரவச் செய்தவர் பலர். நமது நாட்டில் சங்கீதம் உயர்ந்த ஸ்தானத்தை அடைந்திருக்கிறது. தேவர்களே சங்கீதத்துக்கு முதற்குருவாக விளங்குகிறார்கள். அதற்கு உரிய ஆசாரியர்கள் சிவபெருமான், நந்திதேவர், முருகக்கடவுள், மாதங்கி, பதஞ்சலி, நாரதர் முதலியோர். இசையைப்பற்றி மகா வைத்தியநாதையரவர்கள் செய்த ஓர் உபந்நியாசத்தில், "பசுர் வேத்தி, சிசுர்வேத்தி வேத்தி கான ரஸம்பணி:" என்பதை எடுத்துக்காட்டி 'இதில் பசு வென்றது நந்தி தேவரையும், சிசு வென்றது முருகக் கடவுளையும், பணியென்றது பதஞ்சலியையும் குறிக்கும்' என்றார்கள். இதற்கு வேறு வகையாகப் பொருள் சொல்வதும் உண்டு.

பரமசிவன் இரண்டு வித்தியாதரர்களைத் தம் காதிலே இரண்டு குழைகளாக அணிந்துகொண்டிருக் கிறார். தாமே வீணையை வாசித்து மகிழ்ந்து வருகிறார். "எம் இறை நல் வீணை வாசிக்குமே" என்றார் ஒரு பெரியார். திருமாலோ எப்பொழுதும் தும்புரு நாரதர் களுடைய கானலஹரியில் ஈடுபட்டு இன்புறுவதோடு தாமும் புல்லாங்குழலை வாசித்து உயிர்களை இன்புறுத்து கிறார். பிரமதேவரோ கலைமகளின் யாழிசை யமுதத்தைப் பருகிக்கொண்டிருக்கிறார். இந்திராதி தேவர்கள் ரம்பை முதலிய மங்கையரின் சங்கீதத்தில் உருகி மகிழ்கிறார்கள். கந்தர்வர், வித்தியாதரர், கின்னரர் என்னும் தேவகணங் களுக்குச் சங்கீதமே காலப்போக்கு.

சங்கீதமும் ஆலயங்களும்

இவ்வாறு தெய்வங்களையும் தேவகணங்களையும் கவர்ந்துகொண்ட சங்கீதத்திற்குத் தெய்வஸ்தானங் களாகிய கோயில்களின் தனிச்சிறப்பு ஏற்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது. இசையை ஈசுவரார்ப்பணம் செய்வதுதான் தக்கது. இதனையறிந்தே பழைய காலத் தில் சங்கீத நிகழ்ச்சிகள் ஆலயங்களிலே நிகழ்ந்து வந்தன. கோயில்தோறும் சங்கீத வித்துவான் ஒருவர் நியமிக்கப்பெற்று ஒவ்வொரு காலத்துக்கும் உரிய கானங் களைச் செய்து வந்தனர்; ஒவ்வொரு ஸந்நிதிக்கும் தனித் தனியே அமைக்கப்பட்டவர்களும் உண்டு.

சிவாலயங்களிலும் விஷ்ணு வாலயங்களிலும் முறையே தேவாரத்தையும் திவ்யப்பிரபந்தத்தையும் பண்ணோடு ஓதிவரும்படி முற்காலத்தில் அரசர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

திருஆமாத்தூர் என்னும் ஸ்தலத்தில்தேவாரங்களைப் பண்ணோடு கற்றுச் சந்நிதியில் பாடும் பொருட்டுப் பல குருடர்களுக்கு ஆகாரம் முதலியன அளித்து வரும்படி ஒரு சோழன் ஏற்பாடு செய்திருந்தானென்று சிலாசாஸ னங்களால் அறிகிறோம். தஞ்சை முதலிய இடங்களி லுள்ள சிவாலயங்களில் தேவாரம் ஓதுவதற்கு உரிய வர்கள் பழைய அரசர்களால் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்கள் *'பிடாரர்கள்' என்று சாஸனங்களில் வழங் கப்படுகிறார்கள். கோயில்கள் நிறைந்து விளங்கும் தமிழ் நாட்டில் கோயிலில்லாத ஊர் எப்படி அருமையோ அப் படியே சங்கீதமில்லாத கோயிலும் அருமையாகும்.
--------
* இது 'பட்டாரகர்கள்' என்பதன் மருஉ.

இசைத்தமிழ்

பழைய காலத்தில் சங்கீதத்திற்கு ஒரு தனிச் சிறப்பு இருந்ததென்று தமிழ் நாட்டின் பழைய சரித்திரம் தெரி விக்கின்றது. தமிழின் பெரும் பிரிவுகள் மூன்று. அவற் றுள் ஒன்று சங்கீதமாகிய இசைத்தமிழ். இசைத்தமிழ் தான் தனியே ஒன்றாக நிற்பதோடு மற்ற இரண்டு பிரிவு களாகிய இயலிலும் நாடகத்திலும் கலந்திருக்கிறது. இயற்றமிழ்ச் செய்யுட்களை இசையோடு சொல்லாவிட் டால் அவற்றிற்குரிய நயம் புலப்படாது. தமிழில் வழங் கும் செய்யுட்களுள்ளே இன்ன இன்ன செய்யுளை, இன்ன இன்ன ராகத்திலேதான் படிக்கவேண்டுமென்ற வரை யறை யுண்டு. நாடகத் தமிழுக்கோ இசையானது இன்றி யமையாததென்பது வெளிப்படை. அதனாலேதான் இசையை நடுநாயகமாக வைத்து இயலிசை நாடக மென்று வழங்கினார்கள் போலும்.

சங்கீத வித்துவான்களுக்கு இருந்த மதிப்பு

சங்கீத வித்துவான்களுக்கு முற்காலத்தில் இருந்த கௌரவத்திற்கு எல்லையில்லை. எந்தக்குலத்திற் பிறந்த வர்களாயிருப்பினும் அவர்களுக்கு முடியுடைவேந்தர் களும் பிறரும் மிக்க மதிப்பையளித்து மற்ற வித்துவான் களைக் காட்டிலும் அதிகமான சம்மானம் செய்துவந் தார்கள். அரசர்கள் காலையில் விழித்து எழும்பொழுதே சங்கீதத்தைக் கேட்டு எழுவார்கள். அவர்களுடைய முன்னோர்களின் குண விசேடங்களைத் தெரிவிக்கும் பாட்டுக்களைப் பாடி அம்மன்னர்களை எழுப்புவதற்கென்று தனியே நியமிக்கப்பட்ட சில சங்கீத வித்துவான்கள் இருந்தார்கள்; இவர்களைச் சூதரென்றும் இங்ஙனம் பாடு தலைத் துயிலெடை நிலையென்றும் சொல்லுவார்கள். அரசன் போர்க்களத்தில் புண்பட்டு விழுந்துகிடந்தால் அந்தப் புண்ணாலுண்டான துன்பத்தை இசையால் போக்குவது அக்கால வழக்கம்.

ஒரு சங்கீத வித்துவானுடைய கவலையைப் போக்கு வதற்கு விறகு சுமந்து சென்று பாடி அவருடைய பகை வனை மதுரை ஸ்ரீ சோமசுந்தரக் கடவுள் ஓடச் செய்த தோடு சேற்றில் நின்று பாடிய அந்த வித்துவானுக்குத் தம் சந்நிதியில் நின்று பாடும்படி ஒரு பலகையையும் அளித்தாரென்று திருவிளையாடல் தெரிவிக்கின்றது.

நாயன்மார்களுள் ஆனாயநாயனா ரென்பவர் புல்லாங் குழல் ஊதியும், திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருஞான சம்பந்தமூர்த்தியின் தேவாரப் பதிகங்களை யாழில் அமைத்து வாசித்தும், ஆழ்வார்களுள் திருப்பாணாழ்வா ரென்பவர் வீணையை வாசித்தும் பேறு பெற்றார்கள். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி யென்ற மூவரும் தாம் இயற்றிய சிவஸ்தோத்திரங் களைச் செய்திருக்கிறார்கள். "அருச்சனை பாட்டே யாகும்" என்றார் ஒரு பெரியார். இதனால் சிவபெருமா னுக்குச் சங்கீதத்திலுள்ள பிரியம் வெளிப்படும். கோபத் தைத் தணிப்பது சங்கீதத்தின் பெருமைகளுள் ஒன்று; முருகக் கடவுள் சூரனையழித்த கோபம் தணியுமாறு கந்தர்வர்கள் பாடிக்கொண்டு சென்றார்களென்றும், கைலாச மலையை எடுத்த இராவணன் மீது ஈசுவரனுக்கு இருந்த கோபம் சாமகானத்தால் நீங்கிற்றென்றும் நூல்கள் கூறுகின்றன. "இழுக்குடைய பாட்டிற் கிசை நன்று" என்பதனால் சில பாட்டுக்களிலுள்ள சொற் குற்றம் இசைநயத்தால் புலப்படாதென்று தெரிகிறது.

சங்கீத வித்துவான்களின் வகை

சங்கீதத்தை வளர்த்துவரும் பெரியோர்கள் பலர். அவர்களுள் சங்கீதத்தை மட்டும் அப்பியாசம் செய்து வந்து தம்முடைய வாய்ப்பாட்டினால் யாவரையும் இன்புறுத்தியவர்கள் ஒரு சாரார்; சங்கீதத்தை ஓரளவு பயின்று அதற்கேற்ற சாகித்தியங்களைச் செய்து உதவி யவர்கள் ஒரு சாரார்; சங்கீதத்திலே சிறந்த ஆற்றல் படைத்துச் சாகித்தியத்திலும் வன்மையடைந்து பொன் மலர் மணம் பெற்றதுபோல விளங்கியவர்கள் ஒரு சாரார். இம் மூவகையினராலும் சங்கீதம் விரிவடைந் தது. இவர்களை யன்றி இசையைக் கருவிகளில் அமைத் துப் பாடி இன்புறுத்தியவர்களும் உண்டு. சங்கீதப் பயிற்சி மட்டும் உடையவர்களாகப் பாடிவந்த பெரியோர் களுடைய ஆற்றல் அவர்கள் காலத்தோடு போய்விடும்; அவர்களால் அக்காலத்திலிருந்தவர்கள் மட்டும் பய னடைகின்றனர். சாகித்தியம் செய்யும் வகையினருடைய உழைப்போ அவர்கள் காலத்தோடல்லாமல் பிற்காலத் திலும் பயனைத் தருகின்றது. சாகித்தியம் மட்டும் இயற்று பவர்கள் சங்கீத ரசத்திற்கேற்ற சாகித்தியஙகளை செய் வதற்குத் தடையுறுவார்கள். ஸ்வானுபவத்தில் சங்கீதப் பயிற்சியும் இடைவிடாது பாடும் முயற்சியும் உடையவர் களுடைய சாகித்தியத்தில் தனியாக ஒரு ஜீவன் இருக் கும். அங்ஙனம் அமைந்த சாகித்தியங்களே சங்கீத மாளிகைகளை அழகுபடுத்தும் பிரதிமைகளாகும். அவற்றை அமைப்பவர்களே சங்கீத தெய்வத்திற்கு மிகவும் சிறந்த பணிவிடை செய்தவர்களாவார்கள். அத் தகைய பெரியோர்கள் பலர் தமிழ் நாட்டில் இருந்து வந்தார்கள். வேங்கடமகி, பச்சை மிரியன் ஆதிப்பை யர், பாபநாச முதலியார், அனந்தபாரதி, பெரிய திருக் குன்றம் சுப்பராமையர், கனம் கிருஷ்ணையர், மதுரகவி, கவி குஞ்சரமையர், ஆனை ஐயா, கோபாலகிருஷ்ண பாரதிகள், வையை ராமசாமி ஐயர், பட்டணம் சுப்பிர மணிய ஐயர் முதலிய வித்துவான்கள் சங்கீதத்திலும் சாகித்தியத்திலும் ஒருங்கே ஆற்றல் வாய்ந்தவர்களாக விளங்கினார்கள். மெட்டுக்களைப் பிறரைப் பாடச் செய்து அவற்றிற்கேற்பச் சாகித்யங்களை இயற்றி அவற்றைப் பிறரைக்கொண்டு பாடச்செய்தவர் சிலர். அவர்களுள் மாயூரம் முன்ஸீபாக இருந்த வேதநாயகம் பிள்ளை ஒருவர்.

சங்கீத மும்மணிகள்

சிலர் வடமொழியிலும் தெலுங்கு முதலிய பிற பாஷைகளிலும் கீர்த்தனங்களை இயற்றி விளங்கினாரகள். அவர்களுள் மிகச் சிறந்த மூவர்களைச் சங்கீத மும்மணிக ளென்று சங்கீத உலகம் பாராட்டுகின்றது. அவர்கள் திருவாரூர் முத்துசாமி தீக்ஷிதர், தாளப்பிரஸ்தாரம் சாமா சாஸ்திரிகள், ஸ்ரீ தியாகையர் என்பவர்களே. இவர்கள் மூவரும் ஒரே காலத்தவர்கள். தீக்ஷிதரென்றால் முத்துசாமி தீக்ஷிதரையும், சாஸ்திரிகளென்றால் சாமா சாஸ்திரிகளையும், ஐயரவர்களென்றால் தியாகையரவர் களையும் சங்கீத உலகம் குறிக்கும். இதுவும் அவர்க ளுடைய பெருமையைத் தெரிவிப்பதாகும்.

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்

முத்துசாமி தீக்ஷிதரவர்கள் காலஞ் சென்று நூறு வருஷங்களாகின்றன. இவர்களுடைய சரித்திரத்தைப் பலர் எழுதியிருக்கிறார்கள். அவற்றாலும் கேள்வியாலும் எனக்குத் தெரிந்த சில முக்கியமான விஷயங்களை மட்டும் கூறுகிறேன்.

திருவாரூரின் பெருமை

திருவாரூர் என்னும் ஸ்தலத்தில் அவர் பிறந்தவர். பெரியவர்கள் பிறந்ததனால் ஓரிடத்திற்கு மகிமையுண்டாகும். இயல்பாகவே மகிமையுள்ள இடத்தில் அவர்கள் பிறப்பதுமுண்டு. திருவாரூரோ இயல்பாகவே சிறப் புடையது. அந்தப் பூமியே தெய்விகம் பொருந்தியது. அந்த ஸ்தலத்தில் உண்டான புற்றில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்றாரென்றால் அந்த மண் விசேஷத் தைப் பற்றி வேறு என்ன சொல்லவேண்டும்!அதனால் இது பஞ்ச பூத ஸ்தலங்களுள் பிருதிவி ஸ்தலமாகும். திருவாரூரென்பதில் ஆரென்பது பிருதிவியைக் குறிக்கும். இது பூமாதேவியின் ஹிருதய கமலமென்று கூறப்படு மாதலால் இங்கேயுள்ள கோயில் பூங்கோயில் என்று தமிழில் வழங்கும். இது பாராசக்தி க்ஷேத்திரமென்றும் பிரணவஸ்தலமென்றும் கூறப்படும். அத்தலத்தில் பிறத் தல் முக்திக்குக் காரணமென்பர். இங்கே எழுந்தருளி யிருக்கும் மூர்த்திக்கு வன்மீக நாதரென்றும் புற்றிடங் கொண்டாரென்றும் திருநாமங்களுண்டு. இங்குள்ள தியாகராஜமூர்த்தி அஜபா நடனம் செய்தருள்பவர். இந்த மூர்த்தி தந்தையை இழந்த சோழ வமிசத்துக் குழந்தையொன்று ஆளுதற்கு உரிய பிராயத்தை அடை யும் வரையில் பெருங் கருணையால் சோழ அரசராக இருந்து அரசாண்டனர்; அப்போது தருமம் நான்கு கால்களோடு நின்று விளங்கியதால் இத்தலத்தில் தர்ம விருஷபதேவர் நான்கு கால்களோடும் நின்ற கோலமாக ஸ்ரீ தியாகேசர் ஸந்நிதியில் உள்ளார். ஸ்ரீ தியாகேசர் அரசராக இருந்தமைபற்றி அவருக்கு ராஜோபசாரம் நடைபெற்று வந்தது. இப்பொழுதும் அவ்வாறே நடந்து வருகிறது. தேவாரத்தைக் கண்டுபிடித்துப் பண்வகுப் பித்த சோழமன்னன் இந்த ஸ்தலத்தில் தியாகேசருக்கு உரிய திருப்பணிகளைச் செய்தான். ஒரு பசுவின் கன்று இறந்ததற்காகத் தன் மகன் மீது தேரைச் செலுத்திய மனுநீதிச் சோழன் அரசாண்ட நகரம் இதுவே. சோழர் களுக்கு முடி கவிக்கும் நகரங்கள் ஐந்தனுள் ஒன்று இது. சமீபத்தில் சட்டஞானத்தில் ஒப்புயரவற்ற பெரும் புகழ் பெற்ற ஜட்ஜ் முத்துசாமி ஐயரவர்கள் தோன்றிய பெருமை வாய்ந்த ஸ்தலமும் இதுவே.

பிறப்பு

திருவாரூரில் சங்கீத வித்துவான்கள் தொன்று தொட்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தீக்ஷிதர் பிறந்தது சங்கீத பரம்பரை. " குலவிச்சை கல்லாமற் பாகம் படும்" என்பது ஒரு தமிழ்நூற் செய்யுள்; குலவித்தை யானது கல்லாமலே பாதி வந்துவிடுமன்பது இதன் பொருள்.

தீக்ஷிதருடைய முன்னோரகள் அக்கினிஹோத்ரம் செய்துவந்தமையால் இவர் பரம்பரையினருக்குத் தீக்ஷித ரென்னும் பெயர் அமைந்தது. இவருடைய தந்தையா ராகிய ராமசாமி தீக்ஷிதரென்பவர் பெரிய சங்கீத வித்து வான். அவர் வைத்தீசுவரன் கோயிலில் இருந்தபொழுது ஸ்ரீ பாலாம்பிகை கனவில் தோன்றி முத்துமாலை ஒன்றை யளித்தாகக் கூறுவர். அது புத்திரப்பேற்றைக் குறிப் பிக்குமென்பர். இதுபோலவே வெள்ளிய மாலை முதலி யன கனவிற் காணப்பட்டதாகவும் அவற்றின் பயன் புத்திரப்பேறென்று முனிவர்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டதாகவும் சீவகசிந்தாமணி, பெருங்கதை, முதலிய ஜைன நூல்கள் கூறுகின்றன. இவர் பிதாவி னுடைய கிருபையையும் குருவினுடைய கிருபையையும் பெற்றவர்; பஞ்சாயதன பூஜையைச் செய்து வந்தார். அதற்கேற்றவாறு இவர் கீர்த்தனங்களை அமைத்திருக் கின்றார்.

கல்விப் பயிற்சியும் இயற்கையும்

இளமை தொடங்கியே தீக்ஷிதருக்கு வேதத்திலும் வடமொழியிலும் முறையான பயிற்சி உண்டாயிற்று. சில காலம் காசியில் வசித்து வந்தமையால் வடநாட்டுச் சங்கீத்திலும் பழக்கம் ஏற்பட்டது. இவர் நல்ல ஒழுக்கமுடையவர். இவருடைய பெருமைக்கு அதுவும் ஒரு காரணமாகும். பிற வித்துவான்களுடைய திற மையை அறிந்து சந்தோஷிக்கும் நற்குணமுடையவர்; அவர்களுடன் அன்புடன் பழகுபவர்.

ஒரு முறை இவர் திருவையாற்றிற்குச் சென்றிருந் தார். அப்பொழுது உத்ஸவகாலமாதலால் திருவீதியில் எழுந்தருளும் சுவாமிக்குப் பின்னே சிஷ்யர்களோடு பஜனை பண்ணிக்கொண்டு சென்ற ஸ்ரீ தியாகையரவர்கள் நாயகி ராகத்தில் அமைந்த "நீ பஜனகான" என்னும கீர்த்தனத்தைப் பாடிக்கொண்டே சென்ற போது இவர் உடன் சென்று கேட்டுவிட்டு அவரை நோக்கி, " நாய கிக்கும் தர்பாருக்கும் வேறுபாடு இல்லாமல் பலர் பாடு வார்கள். தர்பார் சம்பந்தமில்லாமலே நாயகி ராகத்தை நீங்கள் கீர்த்தனத்தில் அமைத்திருக்கிறீர்கள்; பாடினீர் கள். உங்களைப்போல ராகங்களுடைய நுட்பங்களை அறிந்து பாடுபவர்கள் மிக அருமை" என்று பாராட்டி னாராம்.

மனிதர்களையே பாடிக் காலங்கழித்த சில சங்கீத வித்துவான்கள் பிற்காலத்தில் பச்சாதாப முற்றுத் தெய் வங்களின் மீது பாடியதுண்டு. மதுரகவி, 'எப்படியாட் கொள்வையோ?' என்று ஸ்ரீ மீனாட்சி விஷயமாகவும், கனம் கிருஷ்ணையர், 'தில்லையப்பா' என்று ஸ்ரீ நட ராஜப் பெருமான் விஷயமாகவும் பாடிக் கண்ணீர் விட்டார்களாம். வித்தையை ஈசுவரார்ப்பணம் செய்ய வேண்டு மென்பதே முத்துசாமி தீக்ஷிதருடைய கொள்கை யாதலால் இவருக்கு அந்த விதமான வருத்தம் இல்லை. இவர் சமரச புத்தியை யுடையவர். இன்முகமும் இன்சொல்லுமுள்ளவர். பாடும்போது இவர்பால் அங்க சேஷ்டை இராது. இவருடைய வாழ்க்கை இளமையி லேயே நர்குலப் பிறப்பாலும் சிவஸ்தல யாத்திரையாலும் பெரியோர் அனுக்கிரகத்ததாலும் குறைபாடில்லாத உயர்ந்த வழியிற் சென்றது.

காசியாத்திறையினால் தேசாடன விருப்பம் இவர் மனத்திற் குடிகொண்டது. உபதேச ஸ்தலமாகிய காசி யில் சிதம்பரநாத ஸ்வாமி யென்பவரிடம் ஸ்ரீ வித்தை யைக் கற்றுக்கொண்ட இவர் பராசக்தி க்ஷேத்திரமாகிய திருவாரூரிலிருந்து அந்த மகா மந்திரத்தை உருவேற்றிப் பலனைப்பெற்றது பொருத்தமாகவே உள்ளது.

கீர்த்தனைகளை இயற்றல்

காசியிலிருந்த பின்பு திருத்தணிகைக்கு வந்து தவம் புரிந்து முருகக்கடவுளுடைய திருவருளை இவர் பெற்றார். அதுமுதல் இவர் கீர்த்தனங்களை இயற்றத் தொடங்கினார். ஸ்ரீ குகப்பெருமான் திருவருள் பெற்ற மையை நினைந்து, "குருகுக" என்ற முத்திரையைத் தம்முடைய கீர்த்தனங்களில் அமைப்பது இவர் வழக்கம்.

வடமொழியில் கீர்த்தனம் மிகவும் அரிய செயல். திருவருட்பேறு நிரம்ப உடையவர்களுக்கல் லாமல் அது கைகூடாது. திருத்தணிகைப் பெருமான் பால் அருள் பெற்றது தொடங்கி ஸ்தலங்கள்தோறும் தீக்ஷிதர் சென்று ஸ்வாமி தரிசனம்செய்து அவ்வக் கோயில்களில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகள் விஷய மாக இனிய கீர்த்தனங்களை இயற்றித் துதித்து வந்தார்.

கீர்த்தனங்களின் இயல்பு

தீக்ஷிதருடைய கீர்த்தனங்களில் அவ்வத்தல வர லாறுகள் இயன்ற வரையில் அமைந்திருக்கும். உரிய ராகப்பெயர் பெரும்பாலும் தொனியில் காணப்படும். சங்கீத அம்சம் அவற்றில் மிகவும் சிறப்பாக அமைந் திருக்குமென்று சொல்வது மிகை. சங்கீத இன்பத்தை நினையாமற் படித்து போதிலும் பக்தி மார்க்கத்தை அவற்றால் தெரிந்து கொள்ளலாம். அதனால்தான் இவ ருடைய கிருதிகள் உயர்வடைந்தன.

தேவாரம் முதலிய திருமுறைகளும் திருப்புகழும் ஸ்தலங்கள் தோறுமுள்ள மூர்த்திகளைப் பாடியனவே; திவ்யப் பிரபந்தத்திலுள்ள சில பகுதிகளும் இத்தகை யனவே.

பிற்காலத்தில் மனிதர்களைப் பாடிய பாட்டுக்கள் மலிந்தன. ஆனாலும் அத்தகைய பாட்டுக்களுக்கு அந்த அந்தக் காலத்திலேதான் மதிப்பு இருக்கும். தெய்வ ஸ்துதியாக உள்ள பாட்டுக்களோ என்றும் குன்றாத இளமையோடு இலங்குகின்றன. மனமொழி மெய்களால் தெய்வத்துக்குத் தொண்டு புரிந்த தீக்ஷிதரவர்களுடைய கீர்த்தனங்கள் சங்கீத நூலாதலோடு பக்தி வாசகமும் ஞான சாஸ்திரமும் ஆகும்; ஸ்தலங்களின் பெருமை களைக் கூறும் புராணச் சுருக்கமும் சிவாகம நுட்பங்களை விளக்குவனவும் யோகவழியைக் காட்டுவனவும் அவையே.

இப்படியே பல ஸ்தலங்களுக்கும் சென்று ஸ்தல விஷயங்களை விரிவாக அமைத்துத் தமிழில் கீர்த்தனங் கள் பாடியவர்களுள் எனக்குத் தெரிந்தவர்கள்:-பாப நாச முதலியார், கனம் கிருஷ்ணையருடய தமையனா ராகிய பெரிய திருக்குன்றம் சுப்பராமையர் முதலியவர் கள். இவர்கள் இயற்றியவற்றிற் பல மெட்டுக்கள் விளங் காமையால் ஒளி மழுங்கி மறைந்து கிடக்கின்றன. பாடு வோரும் மிகச் சிலரே.

தேவாரப் பண்கள் ரக்தி ராகத்தில் அமைந்துள்ளன. ஆதலால் அந்த ராக பாவங்களை அறிவதற்குத் தீக்ஷித ருடைய கீர்த்தனங்களைக் கீழ்வேளூர்வாசியான சொக்க லிங்க தேசிகரென்பவர் கற்றனர்; பிறகு ராக பாவங்கள் புலப்படும்படி தேவாரங்களைப் பாடிப் பல பாடசாலைகளை அமைப்பித்துக் கற்பித்து வந்தனர். தேவார கோஷ்டி கள் இப்பொழுது பாடி வரும் சம்பிரதாயங்கள் எல்லாம் அவர் கற்பித்தனவே. அவருடைய சிறிய தகப்பனார் தீக்ஷிதரிடம் கற்றுக் கொண்டவர். அவர் பெயர் ஞாப கத்தில் இல்லை.

தீக்ஷிதருடைய கீர்த்தனங்களின் மேம்பாட்டிற்குக் காரணம் அவற்றிற் பெரும்பாலன ரக்தி ராகங்களிலே அமைந்திருந்தலும் த்ஸௌகத்தில் (முதற் காலத்தில்) அமைந்திருத்தலும் ஆகும். இவர் எல்லாத் தெய்வங் களின்மீதும் பாடியிருக்கிறார். இதனாலும் இவருடைய கிருதிகள் பல இடங்களிற் பரவின.

நமது கடமை

சில வருஷங்களாக இந்நாட்டில் சுத்தமான சங்கீ தத்துக்குப் பலவகையான இடையூறுகள் ஏற்பட்டுள் ளன. பாஷைக்குரிய அழகையும் சங்கீத அமைப்பையும் குலைத்து நிற்கும் பாட்டுக்கள் இப்போது மூலை முடுக்கு களிலெல்லாம் பரவிவிட்டன. பழைய சங்கீத வித்து வான்களையும் பழைய சாகித்தியங்களையும் மறந்து விட்டோம்.

இனி, ஸபைகளில் பழைய ஸாகித்தியங்களைப் பாடும் முயற்சி அதிகரிக்க வேண்டும். தெரிந்தவர்க ளிடத்தில் முறையாக கற்றுப் பாடச் செய்வது உத்தமம். ஸ்வரப்படுத்தி அச்சிற் பதிப்பித்தல் மட்டும் போதாது. அதில் கீர்த்தனங்களின் முழுத் தோற்றமும் அமையாது. ஸினிமா முதலியவற்றிற்குப் புதிய பாட்டுக் களை அமைப்போர்கள் பழைய பாட்டுக்களை இணைக்கக் கூடிய இடங்களில் இணைத்துப் பயன்படுத்த வேண்டும். இத்தகைய செயல்களாலேதான் தீக்ஷிதரைப் போன்ற பெரியோர்களுடைய அருமை பெருமைகளை உலகம் உணர்தல் கூடும். இறைவன் திருவருளால் நம் முயற்சி கள் நற்பயனை அளித்து உதவுவனவாக.
---------------------

10. *குமர குருபரர்


*கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் 1929-ஆம் வருஷம் செய்த பிரசங்கமொன்றன பகுதி.

இளமைப் பருவம்

ஒன்பது கைலாசங்களும் ஒன்பது திருப்பதிகளும் தன்கரையில் அமையப்பெற்ற தாம்பிரபரணி நதி தீரத் தில் ஸ்ரீவைகுண்டமென வழங்கும் நகரின் வடபாலுள்ள ஸ்ரீகைலாசத்தில் சண்முகசிகாமணிக் கவிராய ரென்பவ ருடைய திருக்குமாரராகக் குமரகுருபரர் தோன்றினார். ஐந்து பிராயம் வரையில் இவர் பேசாமல் இருந்தார். இவர் தந்தையார் அதனை யறிந்து வருந்தித் தம் குலதெய்வமாகிய செந்திலாண்டவனைத் தரிசிக்கத் திருச் செந்தூருக்குச் சென்று அங்கேயுள்ள கலியுகவரதனை வணங்கித் தம் பிள்ளையைக் காப்பாற்றுதல் அக்கடவுள் கடனென்று முறையிட்டதோடு குமரகுருபரரைச் சண்முக விலாசத்திலே கிடத்திவிட்டுத் தாமும் அதில் வரங்கிடப்பாராயினர். சண்முகசிகாமணியின் புத்திரர் சண்முக விலாசத்திற் கிடந்ததும் பொருத்தமானது தான்.

தமிழ்ப் பயிற்சி

பின்னர் முருகக்கடவுளுடைய திருவருளால் இவர் பேசத் தொடங்கித் தமிழ் நூல்களைப் பயில ஆரம்பித் தார். முருகப்பெருமானுடைய திருவருள் வாய்ந்திருந் தமையின் பல தமிழ் நூல்களையும் எளிதில் விரைவிலே கற்றுச் சிறந்த புலமை பெற்றதுடன் வட மொழியையும் பயின்றனர். அதன்பின் தம்மை ஆட்கொண்ட முருகக் கடவுள்மீது கந்தர் கலிவெண்பா என்ற ஒரு நூலை இயற்றினார். அதனைத் தமிழ் நாட்டிற் பெரும்பாலோர் பாராயணம் செய்துவருவதே அதன் பெருமையை நன்கு புலப்படுத்தும்.

நூல்கள் இயற்றல்

பின்பு தாம் பிறந்த தலத்திலுள்ள இறைவன் விஷய மாகக் கைலைக் கலம்பகம் என்ற ஒரு நூலை இவர் இயற் றினார். அதன் முழுப்பாகம் இப்பொழுது அகப்பட வில்லை.

சிவஸ்தலங்களைத் தரிசிக்க வேண்டுமென்றும், புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்யவேண்டு மென்றும் குமரகுருபரர் எண்ணி மதுரை முதலிய ஸ்தலங்களை யடைந்து தரிசித்துக்கொண்டு சென்று காசியை அடைந்தார். அங்கே கங்கா ஸ்நானமும் விசுவேசுவர தரிசனமும் செய்துகொண்டு டில்லி பாது ஷாவைப் பார்த்துவிட்டு மீண்டும் தாம்பிரபரணி தீரத்தை அடைந்தார். அங்கே ஸ்ரீவைகுண்டம் முதலிய வற்றில் சில தினங்கள் தங்கியிருந்து திரும்ப மதுரைக்கு வந்தார். அவ்விடத்தில் அப்பொழுது திருமலை நாயக்கர் அரசாட்சி செய்துவந்தார். ஸ்ரீமீனாட்சி விஷயமாக ஒரு பிள்ளைத்தமிழ் பாடித் திருமலை நாயக்கர் முன்னிலையில் அரங்கேற்றினார். அதில் வருகைப்பருவம் படிக்குங்கால் அங்கயற்கணம்மை ஒரு சிறு பெண்ணாக வந்து அவ் வரசர் மடியில் வீற்றிருந்து கேட்டருளியதாகச் சொல்லு வார்கள். அப்பிள்ளைத் தமிழைக் கேட்ட அரசர் வியந்து குமரகுருபரருக்கு இரண்டு கிராமங்களையும் சில விருது களையும் கொடுத்தார். பின்பு அவர் மதுரைக் கலம்பகம் பாடினார். மீனாட்சியம்மை இரட்டைமணி மாலையும் மீனாட்சியம்மை குறமும் இவரால் பாடப்பட்டன வென்பர். ஆயினும் அதற்குரிய ஆதாரங்கள் கிடைக்க வில்லை. பின்பு தருமபுர ஆதீனத்தை யடைந்து அதில் நான்காம் பட்டத்து ஆசிரியராக இருந்த ஸ்ரீ மாசிலா மணி தேசிகரை வணங்கி அவர்பால் ஈடுபட்டுக் காஷாய மும் ஞானோபதேசமும் பெற்றனர். அப்பொழுது அவ் வாசிரியர் விஷயமாக இவராற் செய்யப்பட்ட நூல் பண்டார மும்மணிக்கோவை யென்பது; அது யாருடைய மனத்தையும் உருக்கும்.

பின்பு இவர் திருவாரூர் சேர்ந்து தியாகராஜப் பெருமானை வணங்கித் திருவாரூர் நான்மணி மாலையை யும், புள்ளிருக்குவேளூர் (வைத்தீசுவரன் கோயில்) சென்று ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி விஷயமாக ஒரு பிள்ளைத் தமிழையும் இயற்றினார். அதன்பின் சிதம்பரம் சென்று ஸ்ரீ ஆனந்த நடராஜப் பெருமானையும் சிவகாம சுந்தரி யம்மையையும் வணங்கிச் சிலநாள் அங்கே இருந்தார். அப்பொழுது சிதம்பர மும்மணிக்கோவை இவரால் இயற்றப்பெற்றது; யாப்பிலக்கணத்திற்கு இலக் கியமாகச் சைன மதக் கொள்கைகளையுடைய செய்யுட் கள் காரிகையில் மேற்கோளாகக் காட்டப்பெற்றிருந்த தனை அறிந்து சிலர் வேண்டுகோளின்படி சிவபரமாகச் சிதம்பரச் செய்யுட் கோவையை இவர் இயற்றினார். நீதிநெறி விளக்கம் என்ற நூலையும் அப்பொழுதுதான் இயற்றினரென்பர். குறள் மிக விரிந்திருப்பதால் அந் நூற் கருத்துக்களைச் சுருக்கி அமைத்து ஒரு சிறிய நூல் செய்து தர வேண்டுமென்று திருமலை நாயக்கர் கேட்டுக் கொள்ள அதனைப் பாடினாரென்று சிலரும், டில்லி பாது ஷாவிற்குத் தமிழின் பெருமையையும் நீதிகளையும் அறிவுறுத்தப் பாடினாரென்று வேறு சிலரும் கூறுவர். அந்நூல் முதற் செய்யுளில், "நமரங்கா ளென்னே, வழுத்தாத தெம்பிரான் மன்று" என்று ஸ்ரீ நடராஜப் பெருமானது மன்றம் சொல்லப்படுவதால் சிதம்பரத்தில் இருக்கையிலேயே இவர் அதனைப் பாடினாரென்று கொள்வது பொருத்தமாகும்.

காசி வாசம்

பின்னர் மறுமுறை காசிக்குச் சென்று கங்கையில் நீராடி ஸ்ரீவிசுவேசுவரையும் விசாலாட்சியம்மையையும் தரிசித்துக் காசிக் கலம்பகம் என்ற ஒரு பிரபந்தம் பாடினார். யாத்திரையாக வருவோர் இருத்தற்கு வசதி யில்லாமல் வருந்துவதை யறிந்து காசியிலேயே இருந்து தருமம் செய்துவர வேண்டுமென்ற நோக்கம் இவருக்கு உண்டாயிற்று. ஆயினும் அதற்கு வேண்டிய இடம் பொருள் முதலிய சௌகரியங்கள் இல்லாமையால் அப்பொழுது டில்லியிலிருந்த பாதுஷாவினிடம் அவற் றைப் பெற எண்ணினார். எனினும், அவ்வரசரிடம் பேசுவதற்கு அந்தத் தேச பாஷையாகிய இந்துஸ்தானி தெரியாமையால், அதனை அறிந்துகொள்ள இவர் சரசுவதியைக் குறித்துச் சகலகலாவல்லி மாலை யென்ற ஒரு தோத்திர நூலைப் பாடினார். அம்மாலையிலுள்ள, "மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரு மென், பண்கண்டளவிற் பணியச் செய்வாய்" என்னும் பகுதி இந்தக் கருத்தைப் புலப்படுத்தும். சரசுவதியின் திருவருளால் இந்துஸ்தானி பாஷையிற் பயிற்சியுற்றுத் தமிழ் நூல்களிலுள்ள விஷயங்களை அந்தப் பாஷையிலே பெயர்த்துப் பிரசங்கம் செய்யத் தக்க வன்மையையும் பெற்றார். பிறகு டில்லி பாதுஷாவைக் கண்டு தம்மு டைய உரைவன்மையினால் அவ்வரசருடைய உள்ளத் தைக் கவர்ந்து அவரிடமிருந்து நன்கொடையாக நிலங் கள் முதலியன பெற்றார். கேதார கட்டத்திலுள்ள சிவ லிங்கத்தை மூடி மேலே முகம்மதியர்கள் மசூதி கட்டி யிருப்பதை யறிந்து அவ்விடத்தை பாதுஷா வழங்கத் தமக்குரிமை யாக்கிக்கொண்டு அங்கே சிவபெருமா னுக்குக் கோயில் கட்டி நித்திய நைமித்திகங்களை நடத் தினார். இன்னும் அங்கே தமிழ் நாட்டு முறையில் திரு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. தாம் இருப்பதற் குரிய மடம் ஒன்று அமைத்து அதில் அரசர்கள் மட்டும் கட்டிக்கொள்ளும் ஸர்ஜா என்று வழங்கப்படும் முன் கட்டிடத்தையும் அரசரது வேண்டுகோளின்மேற் கட்டிக் கொண்டார். இதனால் அரசருக்கு இவரிடம் பெருமதிப்பு விளங்குகின்றதன்றோ? அந்த மடம் இப்பொழுது குமாரசாமி மடமென வழங்கும்.

புராணசாலை

தம்முடைய மடத்தில், புராணசாலையென்னும் பெய ருடன் ஒரு மண்டபம் அமைத்து அங்கே நாள்தோறும் தமிழ் புராணங்களையும் பிற தமிழ் நூல்களையும் வாசித்து இந்துஸ்தானி பாஷையில் அந்நூல்களின் பொருளை விரிவாக எடுத்து இவர் பிரசங்கம் செய்தார். அக்காலத்திற் பல பக்தர்கள் வந்து கேட்டு மகிழ்ந்து போவது வழக்கம். அங்ஙனம் வருவோர்களுள் இராம பக்தர்கள் பெரும்பான்மையோராவர். கம்ப ராமாயணம் முதலியவற்றையும் வாசித்து இவர் பொருள் சொல்லி வருவதுண்டு. அவ்வாறு இராமாயணம் வாசிக்கையில் இராம பக்தராகிய துளசிதாஸர் அதனையறிந்து அங்கு வந்து கேட்டுப் போவாரென்று பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவ்வாறு கேட்டதற்கு அறிகுறியாக அவர் ஹிந்தியில் இயற்றிய இராமாயணத்தில், கம்ப ராமாயணத்தில் உள்ள பல கருத்துக்கள் காணப்படு கின்றனவாம்.

நூல்களின் வகை

இவ்வாறு தமிழைப் பிற நாட்டிலும் விருத்தி செய்து விளங்கிய குமரகுருபர முனிவருடைய தமிழ் நூல்கள் எல்லோராலும் போற்றற்குரியன. பல பிரபந்தங்களையும் தோத்திரங்களையும், யாப்பிலக்கணத்திற்கு இலக்கியத் தையும், நீதிநூலையும் இவர் செய்திருக்கிறார். இன்னும் இவரால் இயற்றப்பட்ட நூல்கள் பல இருக்கலாம். அவை இப்பொழுது அகப்படாமையால் அவற்றின் பெயர் தெரியவில்லை.

செய்யுட்களின் இயல்பு

விநாயகர், முருகக்கடவுள், சிவபெருமான், அம் பிகை, சரசுவதி, ஆசிரியர் முதலியவர்களைப் பற்றி இவர் பாடியிருக்கிறார். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் திருமாலைப் பாராட்டுகையில், "பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டலே" என்று திருமால் தமிழில் விருப்பமுடையவர் என்பதை விளக்கியிருக்கிறார்.

இவருடைய செய்யுட்களில் சங்கநூற் கருத்துக் களும், சொற்றொடர்களும், சைவ சித்தாந்த சாஸ்திரத் திலுள்ள நுட்பமான பிரயோகங்களும் பலவிடங்களில் எடுத்தாளப்பட்டு விளங்குகின்றன. பிற பாஷைச் சொற்களை அமைத்து இவர் பாடியிருக்கிறார். அதற்கு உதாரணமாக மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் முருகக் கடவுளைப் பற்றிக் கூறும், "கலாமயிற் கூத்தயர், குளிர் புன மொய்த்திட்ட சாரலிற் போய்ச் சிறுகுறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு குமரனை முத்துக் குமாரனைப் போற்றுதும்" என்ற செய்யுளில் இந்துஸ்தானி பாஷை யிலுள்ள 'சலாம்' என்ற வார்த்தையை எடுத் தாண்டிருப்பதைச் சொல்லலாம். அவ்விடத்தில் அச் சொல்லை அமைக்காவிட்டால் சுவை குன்றிவிடும். அது வேறு பாஷைச் சொல்லேயாயினும் அந்த இடத்தில் தமிழுடன் கலந்து அழகு பெறுகின்றது. இவ்வாறே வடமொழிச் சொற்களையும் தக்க இடங்களில் எடுத் தாண்டு தம்முடைய செய்யுட்களை இவர் அலங்கரித் திருப்பதைப் பலவிடங்களிலும் காணலாம். "பால லோசன பானுவி லோசன பரம லோசன பக்த சகாயமா, காலகாவத்ரி சூலகபால ஏகம்ப சாம்ப கடம்பவனேசனே" என்பதில் மிகவும் அழகாக வட மொழிச் சொற்களை அமைத்திருக்கின்றார். இவ்வாறு ஒரு முறையைக் கைக்கொண்டு தாமே பிரயோகித்தலை உடம்படுபுணர்த்தல் என்பர். அதன் பொருள் உடம்பட்டு உணர்த்தல் என்பது. அதாவது ஒரு விதிக்கு உடம்பட்டு அதனைத் தம்முடைய நூல்களில் எடுத் தாளல் என்பதாம்.

குமரகுருபரர் தாம் பிறந்த நாட்டு வழக்கச் சொல்லை ஓர் இடத்தில் அமைத்திருக்கின்றார். பாண்டி நாட்டில் ஒருவன் பிறர் நிலத்தையோ ஊரையோ ஸ்வாதீனம் செய்துகொள்ளும் செயலைத் தோரணம் வைத்தலென்று குறிப்பார்கள். இதனைக் காசிக்கலம்பகத்தில், "ஆர்க்கும் படைவே ளரசிருப் பென் றஞ்சா தடிக ளருட்காசி, ஊர்க்கும் புதுத் தோரணம் வைத்தால்" என்ற பகுதியில் அமைத்திருப்பதைக் காணலாம்.

வைணவர்கள் பெரும்பாலும் வழங்கிவரும் 'ததியர்' (அடியார்கள்) என்னும் சொல்லைப் பண்டார மும்மணிக் கோவையில், "தவமார், ததியருளத் தானே நின் சந்நிதிப்பட் டேற்குக், கதியருளத் தானே கடன்" என்ற விடத்து எடுத்தாண்டிருக்கிறார்.

இவருடைய நூல்களை எனக்குமுன் கும்பகோணம் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்த ஸ்ரீ தியாகராச செட்டியாரவர்கள் மிகவும் பாராட்டுவதோடு அடிக்கடி படித்து உருகுவார்கள்.

பரம்பரை

குமரகுருபரர் காசியிலேயே இருந்து தர்மபரிபால னமும் சைவபரிபாலனமும் செய்துவந்தார். இவருக்குப் பின் இவருடைய தர்மங்களை நடத்துவதற்கு ஒரு தம்பி ரான் நியமிக்கப்பட்டார். அதுமுதல் ஒருவர்பின் ஒருவ ராகத் தம்பிரான்கள் அந்தத் தர்மங்களை நடத்திப் பாது காத்து வருகின்றனர்.

காசிவாசிகளாகிய இப்பரம்பரையினரில் தில்லை நாயகஸ்வாமிகள் என்பவர் ஸ்ரீ குமாரசாமி மடத்திற் குரிய பல அறப்புறங்கள் சோழ நாட்டில் இருந்ததை அறிந்தும் வேறு சிலவற்றை நினைந்தும் திருப்பனந்தாளில் ஒரு கிளைமடத்தை நிறுவினார். அப்பால் ஸ்ரீ குமரகுருபரருடைய பரம்பரையினர் திருப்பனந்தாளி லேயே இருந்து தம்முடைய கடமைகளை நிறைவேற்றி வருவாராயினர்.

திருப்பனந்தாளிலுள்ள மடம் காசியிலுள்ள குமார சாமி மடத்தோடு தொடர்புடையதாதலின் காசி மடமென்று வழங்கப்பெறும். அங்கே தலைவர்களாக இருப்பவர்கள் காசிவாசி யென்னும் பட்டத்தைப் பெற்று வருகிறார்கள். முதல் முதலில் தலைமை ஸ்தா பனத்தை ஸ்ரீ காசியில் அமைத்தமையாலும், பிற் காலத்தில் குமரகுருபரர் என்ற் பெயருடைய வேறு சிலர் தலைவர்களாக இருந்தமையாலும் இவர் ஆதி குமர குருபரஸ்வாமிகளென்று வழங்கப்படுவர்.
------------

11. * முத்துசாமி ஐயர்


* ஜயபாரதி வருஷ அனுபந்தம், 1936.

பழமை பாராட்டியது

கல்விப் பயிற்சியில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உதாரணபுருஷர்களாக விளங்கிய பெரியார்களுள் ஜட்ஜ் முத்துசாமி ஐயர் ஒருவர். வறிய குடும்பத்திற் பிறந்து மிக்க துன்பத்திலாழ்ந்து கல்வி கற்று, சென்னை ஹைகோர்ட்டில் நீதிபதியாக வந்த இவரது சரித்திரம் விரிவாகவும் சுருக்கமாகவும் சிலரால் எழுதப்பெற்றுப் பள்ளிக்கூட மாணாக்கர்களுக்குப் பாடமாக வைக்கப் படும் தகுதி வாய்ந்திருக்கிறது. இவருடைய வரலாறு கள் பலவற்றைத் தமிழ்நாட்டினர் அறிந்திருக்கிறார்கள்.

இப்பெரியாருடைய உயர்ந்த குணங்கள் பல. இவருடைய ஆசார அனுஷ்டானங்களும், நல்லொழுக்க மும், கடமையில் தவறாத இயல்பும், கல்வியறிவும் அறிஞர்களால் கொண்டாடப்படுவன. இவரோடு சிலமுறை பழகும் பேறு எனக்குக் கிடைத்ததுண்டு. இவருடைய குணங்களும் மிகச் சிறந்தது பழமையை மறவாத இயல்பு. இதனை விளக்கும் இரண்டு நிகழ்ச்சி கள் வருமாறு:-

(1) கும்பகோணம் காலேஜில் பிரின்ஸிபாலாக இருந்த ராவ்பகதூர் த. கோபால் ராவ் அவர்கள் வீட்டில் 1880-ஆம் வருஷம் ஒரு கல்யாணம் நடை பெற்றது. அதற்குத் தமிழ்நாட்டிலுள்ள பல உத்தி யோகஸ்தர்களும், பெரிய மிராசுதார்கள் பலரும் வந்திருந் தார்கள். மகா வைத்தியநாதையர் முதலிய சங்கீத வித்துவான்களும் வந்திருந்தனர்.

அந்த விசேடத்துக்கு முத்துசாமி ஐயரும் வந்தார்; விடுமுறைக் காலமாதலின் இரண்டு மூன்று தினங்கள் கும்பகோணத்திலேயே தங்கியிருந்தார். இவருடைய பெரும் புகழ் எங்கும் பரவியிருந்தமையால் கோபால ராவ் வீட்டுக் கல்யாணத்தைக் கருதி வந்தவர்கள் இவரையும் கண்டு மகிழ்ந்தார்கள். வேறு பலர் இவரைப் பார்த்துவிட்டுப் போவதற்காகவே வெளியூர் களிலிருந்து வந்திருந்தனர்.

கோபாலராவ் வீட்டின் பக்கத்து வீட்டுத் திண்ணை யில் ஒரு கிழவி வெளியூரிலிருந்து வந்து தங்கினாள். அவள் முத்துசாமி ஐயரைப் பார்க்கும்பொருட்டு வந்தவள். அந்த வழியே போவோர்களை அவள், "ஜட்ஜ் முத்துசாமி ஐயர் வந்திருக்கிறாராமே? இங்கே இருக்கி றாரா?" என்று கேட்டனள்.

அவர்கள் அவளை லட்சியம் செய்யவில்லை. சிலர், "அவரைப்பற்றி நீ ஏன் கேட்கிறாய்?" என்று கடுமை யாகவும் சொல்லிவிட்டுப் போனார்கள். இவர் வந்திருப் பது கிழவிக்கு நன்றாகத் தெரியும். பின்னும் வழியிற் செல்வோர்களை, "முத்துசாமி ஐயரை நான் பார்க்க முடியுமா?" என்று அவள் கேட்டாள்.

"நீயா! உனக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதோ? அவரை நீ எதற்காகப் பார்க்கவேண்டும்?' என்று சிலர் ஏளனம் செய்தார்கள்.

"அவரைப் பார்க்க வேண்டும், அவரை எனக்குத் தெரியும்" என்று நயந்த குரலிற் பின்னும் கிழவி கூறினாள்.

"அவரை உனக்குத்தானா தெரியும்? எல்லோருக் குந்தான் தெரியும். ஒவ்வொருத்தரையும் அவர் பார் த்துக்கொண்டிருப்பது சாத்தியமா?" என்று சிலர் நியாயம் எடுத்துரைத்தனர். அவர் பார்க்கச் சம்மதித் தாலும் இவர்கள் பார்க்கவிடமாட்டார்களென்று அவள் எண்ணினாள்.

இப்படி இரண்டு நாள் அந்தக் கிழவி வருவார் போவார்களை விசாரித்துக் கொண்டே கவலையுடன் இருந்தாள். தனக்குத் தெரிந்த வீடுகளுக்குச் சென்று ஆகாரம் செய்துவிட்டு மீண்டும் அந்தத் திண்ணையிலே வந்து தங்கினாள்.

அவளுக்குக் கண்பார்வை பாதி மழுங்கி விட்டது. கால்கள் தள்ளாடின. பற்கள் விழுந்து பல வருஷங் களாயின. ஆயினும் எப்படியாவது முத்துசாமி ஐயரைப் பார்க்கவேண்டு மென்ற வேகம் மாத்திரம் அதிகமாக இருந்தது. பாவம்! அவள் கருத்தை உணர்ந்துகொண்டவர் ஒருவரையும் அவள் காணவில்லை.

மூன்றாம் நாள் முத்துசாமி ஐயருடைய பரிசாரகர் அவ்வழியே சென்றார். கிழவி அவரையும் வழக்கம்போல் விசாரித்தாள். முத்துசாமி ஐயரோடு பல வருடங் களாகப் பழகிய பழக்கத்தாலும் இயல்பினாலும் நல்ல வராக இருந்த அவர் கிழவியின் அருகிற் சென்றார்.

"பாட்டி, என்ன சொல்லுகிறாய்?" என்று அவர் அன்புடன் விசாரித்தார். பலபேருடைய கடுமையான தொனிகளால் வெதும்பியிருந்த அவளுடைய காதில் அந்த வார்த்தைகள் குளிர்ச்சியாக விழுந்தன.

"ஜட்ஜ் முத்துசாமி ஐயர் இங்கே வந்திருக்கிறாராமே; அவரை நான் பார்க்க முடியுமா?" என்று கேட் டாள் கிழவி.

"நீ எந்த ஊர்? பாட்டி!"

"நான் திருவாரூர், அவரைச் சிறு பிராயத்தி லிருந்தே எனக்குத் தெரியும். அவரைப் பார்க்கவேண்டு மென்றே வந்திருக்கிறேன். இந்தக் கல்யாணத்துக்கு அவர் வரக்கூடுமென்று விசாரித்து நான் தெரிந்து கொண்டேன். அதனால் ஒரு துணையுடன் மெல்லமெல்ல நடந்து இவ்வூருக்கு வந்து சேர்ந்தேன்.

"அவரை எப்படி உனக்குத் தெரியும்?"

"திருவாரூரில் அவர் படித்துக்கொண்டிருந்தபோது எனக்குத் தெரியும். என் கையால் அவருக்கு சாதம் போட்டிருக்கிறேன். என்னையும் அவருக்கு ஞாபகம் இருக்கும். என் பேரைச் சொன்னால் தெரிந்து கொள் வார்" என்று சொல்லி விட்டுத் தன் பெயரையும் கிழவி சொன்னாள்.

"அப்படியா! இங்கேயே இரு; நான் போய் விசாரித்துக்கொண்டு உன்னை அழைத்துப் போகிறேன்."

"நீ மஹராஜனாக இருக்கவேணும்! எப்படியாவது அவரை நான் பார்த்துவிட்டுப் போனால் போதும்" என்று கிழவி கூறினாள். அவள் வார்த்தைகளில் அன்பு பொதிந்திருத்தலைப் பரிசாரகர் உணர்ந்தார்.

முத்துசாமி ஐயரிருந்த இடத்திற்கு நேரே பரிசாரகர் சென்றார். முத்துசாமி ஐயர் பல கனவான்களுக் கிடையேயிருந்து பேசிக்கொண்டிருந்தார். பரிசாரகர் இவரை யணுகி இவரது காதில் மட்டும் படும்படி கிழவியின் பெயரைக் கூறி அவள் பார்க்கவேண்டுமென்ற ஆவலோடு வந்து காத்திருப்பதையும் தெரிவித்தார்.

"அப்படியா?" என்று கேட்டுக்கொண்டே திடீ ரென்று முத்துசாமி ஐயர் எழுந்தார்; பரிசாரகர் வழி காட்ட விரைவாக இவர் கிழவியிருந்த திண்ணைக்கு வந்தார். அங்கிருந்த யாவரும் இவரைப் பின் தொடர்ந்தனர். இவர் கிழவியின் அருகே சென்று,"அம்மா! சௌக்கியமா?' என்று சொல்லிக்கொண்டே மேல் ஆடையை இடையிற் கட்டிக்கொண்டு ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

"முத்துசாமியா!" என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் கிழவி.

"ஆமாம்" என்றார் ஐயர்.

இவ்வளவு நாள் காத்துக் கஷ்டப்பட்ட கிழவி இவரே நேரில் வருவாரென்று எதிர்பார்க்கவில்லை. பெருங் கூட்டத்தோடு இவர் வந்து தன்னை வணங்குவதை அவள் கண்டவுடன் வியப்பையும் மகிழ்ச்சியையும் அடைந்து ஊமைபோலாகி விட்டனள். கண்களிலிருந்து அன்பின் அடையாளமாக நீர் வெளிப்பட்டது.

"சௌக்கியமா? அம்மா!" என்று அன்பு வழிந்த குரலில் முத்துசாமி ஐயர் கேட்டார்.

"சௌக்கியந்தான் அப்பா! உன்னைப் பார்க்க வேண்டுமென்ற குறை பலநாளாக இருந்தது. உன்னுடைய கீர்த்தியை நான் கேட்டுக் கேட்டு மனம் பூரித்துப் போனேன். நீ அங்கங்கே உத்தியோகமாக இருப்பதை அடிக்கடி விசாரித்துத் தெரிந்துகொண்டே இருப்பேன். இப்போது யாருக்கும் ஆகாத பெரிய உத்தியோகம் உனக்கு ஆகியிருகிறதாமே?"

"ஆமாம். எல்லாம் உன்னுடைய அன்ன விசே ஷமே. எனக்கு நீ பசியாற அன்னம் போட்டதும் தலை வாரிப் பின்னியதும் ஆதரவு காட்டியதும் என்னுடைய மனசில் குடிகொண்டிருக்கின்றன."

"மஹராஜனாக நீ தீர்க்காயுஸோடு இருக்க வேண் டும்! நீ பட்டணத்தில் இருக்கிறாயே; உன்னைப் பார்ப் பது எப்படி யென்று எண்ணியிருந்தேன். பகவான் வழி விட்டார்; எனக்கு அரைக்கண் இருக்கும்போதே உன்னைப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை இருந் தது. அது பூர்த்தியாயிற்று."

"நீ எப்படி இங்கே வந்தாய்?"

"நடந்து வந்தேன்; உன்னைப் பார்ப்பதற்காகவே ஒரு துணையை அழைத்துக் கொண்டு வந்தேன்."

"எனக்குத் தெரிந்திருந்தால் நானே உன்னைப் பட் டணத்துக்கு அழைத்துவரச் செய்திருப்பேன்."

"என்னைப் பற்றி யார் உனக்குச் சொல்லுவார்கள்? நான் தான் நினைத்துக் கொண்டிருந்தேன். நீயும் மறக்காமல் இருந்தாயே; அதுவே போதும்."

ஒரு தாயும் குழந்தையும் அன்போடு பேசுவதைப் போல அவ்விருவருமே பேசிக் கொண்டிருப்பதையும் உலகத்தையே மறந்து அவர்கள் அன்பில் ஆழ்ந்திருப் பதையும் கண்ட அக்கூட்டத்தினர் அசைவற்று நின்று எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

"சரி, இப்போதாவது என்னுடன் பட்டணம் வந்துவிடு; சௌக்கியமாக இருக்கலாம்" என்றார் முத்துசாமி ஐயர்.

"பட்டணத்தில் எனக்கு என்ன வேலை இருக்கிறது? கடைசிக் காலத்தில் திருவாரூரிலே இருந்து தியாகராஜா வின் தரிசனம் பண்ணிக்கொண்டு இந்தக் கட்டையை ஒருநாள் கீழே போட வேண்டியது தானே?"

"உனக்கு ஏதாவது வேண்டுமா?"

"ஒன்றும் வேண்டாம். உன்னைக் கண்குளிரப் பார்த்தேனே; அதுவே போதும்."

அக்கிழவி முத்துசாமி ஐயருடைய இளமைப் பருவத்தில் அவருக்கு அன்னமிட்டு வந்தவளென்று யாவருக்கும் பின்பு தெரியவந்தது. அக்காலத்தில் 'கிளப்புகள்' இல்லை. பல பிள்ளைகளுக்கு அக்கிழவி சமைத்துப் போட்டு ஜீவனம் செய்து வந்தாள்.

அவள் தனக்கு ஒன்றும் வேண்டாமென்று சொல்லி யும் முத்துசாமி ஐயர் சில புடவைகளையும், போர்வை முதலியவற்றையும் வாங்கிக் கொடுத்துப் பணமும் அளித் துத் துணைக்கு ஒருவரை யனுப்பித் திருவாரூருக்கு வண்டியிலே கொண்டுபோய் விட்டு வரச் செய் தனர்.

முத்துசாமி ஐயருடைய நன்றியறிவின் திறத்தை உலகினர் தெரிந்து கொள்வதற்கு இந்நிகழ்ச்சி முக்கியமான காரியமாயிற்று.

(2) கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் நிகழ்ந்த ஒரு சபைக்கு முத்துசாமி ஐயர் வந்திருந்தார். பெருங்கூட்டம் கூடியிருந்தது. பல பெரிய கனவான் கள் இவரிடம் வந்து தனித்தனியே பேசிச் சென்றார்கள். அந்நகரத்திலிருந்த பெரிய உத்தியோகஸ்தர்களுக்கும் காலேஜ் ஆசிரியர்களுக்கும், அவரைத் தங்கள் தங்கள் வீட்டிற்குப் போஜனம் செய்ய அழைக்க வேண்டுமென்ற ஆவல் இருந்தது. ஆனாலும், அதனை வெளியிட்டுச் சொல்ல அவர்களுக்குத் துணிவு உண்டாகவில்லை. 'ஏற்றுக்கொள்வாரோ மாட்டாரோ!' என்று பலர் எண்ணினர். சிலர் பயந்து கொண்டே மெல்ல அழைத்தனர். "நான் பத்தியமாக ஆகாரம் செய்பவன். உங்கள் வீட்டிலே ஆகாரம் செய்தால் எனக்கு அஜீரணம் உண்டாகும். உங்களுடைய உபசாரம் என்னுடைய சரீரத்துக்கு ஒவ்வாது" என்று அவர்களிடம் சொல்லிவிட்டார்.

அங்கே கூட்டத்தில், சங்கர சாஸ்திரிகள் என்ற ஒருவர் இருந்தார். அவர் முத்துசாமி ஐயருடைய உறவினர்; கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் 15 ரூபா சம்பளத்தில் ஸம்ஸ்கிருத பண்டிதராக இருந்தார்; நல்ல அறிவாளி; சாஸ்திரங்களிலும் காவியங்களிலும் சிறந்த பயிற்சி யுடையவர்.

முத்துசாமி ஐயர் எல்லாரோடும் பேசிக்கொண்டிருக் கையில் திடீரென்று சங்கர சாஸ்திரிகளைப் பார்த்து, "இன்றைக்கு ராத்திரி உங்கள் வீட்டிலேதான் போஜனம் செய்துகொள்ளப்போகிறேன்" என்றார். யாவரும் திடுக் கிட்டனர்; "எவ்வளவோ செல்வவான்களுடைய வீடுகள் இருக்கையில், தாமே வலிந்து இந்த ஏழைப் பண்டிதர் வீட்டிற்குச் செல்ல எண்ணினாரே!" என்று ஆச்சரிய முற்றனர். சாஸ்திரிகளோ பெறாப் பேறு பெற்றவரைப் போல மட்டற்ற மகிழ்ச்சியுடன், "பாக்கியம்" என்றார். முத்துசாமி ஐயர், "நான் வருகிறேனென்று விசேஷ மாக ஒன்றும் செய்யவேண்டாம்; வற்றற் குழம்பும், சீரக ரசமும், அப்பளமும் போதும்" என்றார். "எங்கள் வீட்டில் உள்ளதும் அத்தகைய ஆகாரந்தான்" என்று பணிவோடு சாஸ்திரிகள் சொன்னார். அப்பால் அருகில் இருந்தவர்களைப் பார்த்து முத்துசாமி ஐயர், "இவர் எங்களுக்குப் பந்து. பந்துக்கள் வீடு வேறு, நம்முடைய வீடு வேறென்று நான் வித்தியாசம் பாராட்டுவதில்லை. உங்களுடைய வீடுகளில் சாப்பிடவில்லையென்ற குறை உங்களுக்கு இருக்கலாம். இவர் வீட்டிற் சாப்பிடு வதையே உங்கள் வீட்டிற் சாப்பிடுவதாக நினைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.

அன்று இரவு சங்கர சாஸ்திரிகள் வீட்டில் இவர் உணவுண்டு தாம்பூலம் பெற்றுக்கொண்டு வந்தார். கிருஷ்ண பகவானை உபசரித்த விதுரரைப் பிரபுக்கள் கூடச் சில சமயங்களில் தங்களுக்கு உபமானமாகச் சொல்லிக் கொள்வார்கள். முத்துசாமி ஐயர் தம்முடைய வீட்டிற்கு வந்ததை மறுநாள் சாஸ்திரிகள் என்னிடம் சொல்லிப் பாராட்டி மகிழ்ந்தபோது அந்த உபமானத் தையே சொன்னார். ஆனால் அவர் விஷயத்தில் அது மிகவும் பொருத்தமாகவே இருந்தது.

[இந்த இரண்டும் நான் கும்பகோணத்திலிருந்தபோது நிகழ்ந்தவை. இவற்றைப் பற்றிப் பலர் அடிக்கடி பாராட்டிப் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன்.]

-----------------------------------------------------------

12. * தொண்டைமான் சத்திரம்


* தனவணிகன், பொங்கல் மலர், 1937; செந்தமிழ்ச் செல்வி 12-ஆம் தொகுதியில் 'திருச்சி மலைக் கோயில்" என்ற தலைப்பின் கீழ் உள்ள சில குறிப்புகளையும் சிலரால் அறிந்த செய்தியையும் ஆதாரமாகக் கொண்டு எழுதப் பெற்றது இது.

மௌனஸ்வாமிகள் மடம்

திருச்சிராப்பள்ளி மலையில் மௌன ஸ்வாமிகள் மடமென்ற ஒரு மடம் இருக்கிறது. அங்கே முன்பு பல துறவிகள் ஒருவர்பின் ஒருவர் அதிபதிகளாக இருந்து திருச்சிராப்பள்ளிக் கோயிலுக்குப் பலவகையான திருப் பணிகளைச் செய்திருக்கிறார்கள். அந்த மடம் கி.பி. 1578-ஆம் வருஷம் நிறுவப்பெற்றது.

வைத்தியலிங்க மௌனத்தம்பிரான்.

அம்மடத்தில் 7-ஆம் பட்டத்தில் வைத்தியலிங்க மௌனத் தம்பிரான் என்பவர் கி.பி. 1753 முதல் 1799 வரையில் தலைவராக இருந்தார். திருச்சிராப் பள்ளித் திருக்கோயிலில் அவர் காலத்தில் நிகழ்ந்த தருமங்கள் பல.

தூய ஒழுக்கமும் தவநெறியும் இறைவன் திருப் பணியில் இடையறாத அன்பும் பூண்ட அவரிடத்தில் யாவருக்கும் பெருமதிப்பு உண்டு. பலர் அவருடைய திருப்பணியில் ஈடுபட்டுச் சில சில தருமங்களைச் செய் வதற்குரிய நிலங்களை அவர்பால் விட்டு அந்தத் தருமங் களை ஒழுங்காக நடத்திவரச் செய்தனர். அவர் தமக் கென வாழாது இறைவன் திருப்பணிக்கென வாழ்ந்த பெரியாராதலின் அவருடைய தரும பரிபாலனத்தில் எல்லோருக்கும் நம்பிக்கை இருந்து வந்தது. அவருடைய மேற்பார்வையில் பல அரசர்களும் ஜமீன்தார் களும் மலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தாயுமானவருக்குப் பலவகையான அபிஷேக ஆராதனைகளையும் விழாக்களையும் நடத்தி வந்தனர்.

தொண்டைமான் தருமம்

அக்காலத்தில் புதுக்கோட்டை அரசராக இருந்த தொண்டைமான் ஒருவரால் தாயுமானவருக்குத் தேவ தானமாகச் சில கிராமங்கள் விடப்பட்டிருந்தன. அவற் றின் வரும்படியிலிருந்து ஸ்ரீ தாயுமானவருக்கும் மட்டு வார்குழலம்பிகைக்கும் உச்சிக் காலத்தில் அபிஷேகமும் சுத்தான்ன நிவேதனமும் நடந்து வந்தன. அங்ஙனம் நிவேதனம் செய்த அன்னத்தை நாள்தோறும் பன் னிரண்டு தேசாந்தரிகளுக்குத் தலைக்கு இரண்டு பட்டை வீதம் கொடுக்கும்படி ஏற்பாடு செய்திருந்தனர். அத் தருமம் சிலகாலம் நடைபெற்றது.

தேசாந்தரிகள் வெறும் அன்னத்தை வியஞ்சனம் இல்லாமற் சாப்பிடுவதற்கு வருத்தப்படுகிறார்களென்பதை வைத்தியலிங்கத் தம்பிரான் அறிந்தார். அன்ன தானம் நடந்தாலும் அது நினைத்தபடி நல்ல திருப்தியை அவருக்கு உண்டாக்கவில்லை. இவ்விதம் செய்வதனால் பயனொன்றுமில்லை யென்பதை யெண்ணி வேறு யாது செய்யலாமென்று அவர் யோசித்தார். தொண்டை மானால் விடப்பட்டிருக்கும் நிலவரும்படி அந்த அளவில் நடத்துவதற்குத்தான் போதியதாக இருந்தது.

அன்ன சத்திரம்

தம்பிரான் தம்முடைய மடத்தைச் சார்ந்ததாக ஒரு சத்திரம் கட்டி அதற்குத் தொண்டைமான் சத்திரம் என்று பெயர் வைத்தார். அப்பால் உச்சிக்கால நைவேத் தியத்தை சிறிது அதிகப்படுத்தினார். சுத்தான்னத் தோடு 'நாலு கறியும், பாசிப் பருப்பும், நெய் தயிர் பாயசமும்.........வைத்துச் சுவாமிக்கு' நைவேத்தியம் செய்வித்தார். அந்த நைவேத்தியங்களைச் சத்திரத்திற்கு எடுத்துவரச் செய்து அங்கேயே குழம்பு ரஸம் முதலியன செய்வித்து மோரும் வாங்கி வேற்றூரிலிருந்து வந்தவர் களுக்கு வயிறார உணவளிக்கச் செய்தனர். அந்தணர்கள் பலர் வந்து உணவருந்திச் சென்றனர். சாப்பாடான பிறகு அவர்களுக்குச் சந்தனம் தாம்பூலம் முதலியன கொடுக்கச் செய்து வேதமந்திர கோஷத்தால் அவ்வந்தணர்கள் ஆசிர்வாதம் செய்கையில், "புதுக்கோட் டைத் தொண்டாமானவர்களை ஆசிர்வாதம் செய்யுங்கள்; அவர்களுடைய தருமம் இது" என்று சொல்லி அங்ஙனமே நடத்தி வந்தார்.

அதேமாதிரி தினந்தோறும் நடைபெற்று வந்தது. தொண்டைமான் சத்திரத்தில் உண்டு பசியாறிய வழி நடைப் பிரயாணிகள் தாங்கள் போகும் வெளியிடங்களி லெல்லாம் அச்சத்திரத்தில் நடந்த அன்னதானத்தையும் உபசாரங்களையும் வாயாரப் போற்றி வந்தார்கள்ல். அவர் களிற் பலர் புதுக்கோட்டைக்குப் போக நேர்ந்தால், அவ் வூராரிடம் அவர்கள், "உங்கள் ராஜா மகா புண்ணிய வான்; தர்மராஜா வென்றால் இவரைத்தான் சொல்ல வேண்டும்; திருச்சிராப்பள்ளியில் இவருடைய சத்திரத் தில் ஒருநாள் சாப்பிட்டோம்; என்ன சாப்பாடு! என்ன உபசாரம்! அன்றைக்குப் பூசின சந்தனம் இன்னும் மார்பில் மணக்கிறது" என்று சொல்லி மிகவும் புகழ்ந் தார்கள். இப்படி அவர்கள் பாராட்டப் பாராட்ட, அச் செய்தி தொண்டைமான் காதிற்கு எட்டியது. தமது பெயரால் இன்ன இன்ன தருமங்கள் இன்ன இன்ன இடங் களில் நடைபெறுகின்றன வென்பதை அவர் அறிந்தவர்; அதற்கு ஒரு கணக்குப் புத்தகமும் உண்டு; ஆதலின், 'திருச்சிராப்பள்ளியில் தனியே ஒரு சத்திரம் நடைபெறு வதற்குரிய ஏற்பாடு ஒன்றையும் நாம் செய்யாமலிருக்க இவர்கள் சாப்பிட்டதாகச் சொல்லுகிறார்களே! பன் னிரண்டு தேசாந்தரிகளுக்கு இரண்டிரண்டு சாதம் கொடுக்கும்படிதானே சொல்லியிருந்தோம்? அப்படியிருக்க, நமக்கு இவ்வளவு விசேஷமான புகழ் உண் டாகக் காரணமில்லையே; இது முதலில்லாத லாபமாக அல்லவோ இருக்கிறது!' என்று ஆச்சரியம் அடைந் தார்.

மௌன மடத்தில் காறுபாறாக இருந்த சுப்பிரமணிய பிள்ளை யென்பவர் ஒரு சமயம் புதுக்கோட்டையரசரிடத்தில் வர நேர்ந்தது. அப்பொழுது அரசர் அவரைப் பார்த்து, "திருச்சிராப்பள்ளியில் நம்முடைய பேரால் ஒரு சத்திரம் நடைபெறுகிறதாகவும், அங்கே தினந் தோறும் குறைவில்லாமல் அன்ன மிடுவதாகவும் பலர் இங்கே வந்து சொல்லுகிறார்களே? என்ன சங்கதி?' என்று கேட்டார்.

சுப்பிரமணிய பிள்ளை: ஆமாம், பன்னிரண்டு பேர்களுக்கு நாள்தோறும் பருப்புப் பாயசத்துடன் அன்னம் அளிக்கப்படுகிறது. மகாராஜா க்ஷேமமாக இருக்கவேண்டுமென்றும் சமஸ்தானம் மேலும் அபி விருத்தியாக வேண்டுமென்றும் கருதி இத்தருமம் நடந்து வருகிறது.

அரசர்: நாம் அதற்கு வேண்டிய வரும்படிகளை அமைக்கவில்லையே! இப்படிச் செய்து வருபவர் யார்?

சுப்பிரமணிய பிள்ளை: எங்கள் மடத்துத் தலைவர்களாகிய ஸ்வாமிகளே இங்ஙனம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சமஸ்தானம் இந்தப் புண்ணியத்தால் செழித்தோங்க வேண்டுமென்பது அவர்களுடைய திருவுள்ளம்.

அரசர்: "அப்படியா! நமது சமஸ்தானத்துக்கு அந்த அன்னதானத்தால் எங்கும் புகழ் பரவியிருக்கிறது. உண்மையில் அந்தப் புகழ் ஸ்வாமிகளையே சார வேண்டும். அவர்கள் துறவிகளென்பதை இதிலும் காட்டிவிட்டார்கள். புகழைக் கூடப் பிறருக்கு வாங்கித் தருகிறார்கள். நாமோ வித்தில்லாமல் விளைவு செய் வதைப் போல் புகழை மட்டும் அனுபவித்து மகிழ்ந்து வருகிறோம். இது வரையில் இதைப்பற்றி நாம் விசாரித்துத் தக்க ஏற்பாடுகள் செய்யாமலிருந்தது பெரிய அபசாரம். இந்தத் தருமம் எக்காலத்தும் குறைவின்றி நடைபெறும்படி வேண்டியவகைகளை உடனே செய்வது நமது கடமை" என்று சொல்லி விட்டு அங்கே திவானை வருவித்தார். தொண்டைமான் சத்திரம் உண்மையில் தொண்டைமான் சத்திரமாக நடக்கும் வண்ணம் சில கிராமங்களை அளிக்க உத்தரவிட்டார். அவர் உத்தரவின் படியே வெண்ணெய் மங்கலமென்ற கிராமமும், கொழுப் பட்டியென்ற கிராமத்தில் புன்செய்யில் 27,800 குழிகளும் விடப்பட்டன. பழைய தருமத்திற்காக முன்னமே கோமங் கலம், இடையப்பட்டி முதலியவற்றின் வருமானங்கள் விடப்பட்டிருந்தன.

இவற்றைத் தருமத்திற்காக வழங்கி, "இதுகாறும் இந்தத் தருமத்தை நம்பெயரால் நடத்திய ஸ்வாமிகளுக்கு நாம் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்! தாயுமானவர் எழுந்தருளியுள்ள தக்ஷிண கைலாசமாகிய அந்த ஸ்தலத்தில் இந்த ஸமஸ்தானத்தின் பெயரால் நடைபெறும் தருமத்துக்கு அளவிறந்த பலனுண்டு. அந்தப் பலனை நாம் அறியாவிட்டாலும் பிரத்தியக்ஷமாக அறிந்த பலனாகிய கீர்த்தி என்றும் அழியாது. அதனை நாம் அறியாமலே நமக்கு ஸ்வாமிகள் உண்டாக்கி வைத்தார்கள். நம்முடைய நன்றியறிவையும் வணக்கங்களையும் அவர்களிடம் விண்ணப்பித்து இதுவரையிற் பராமுக மாக இருந்ததை க்ஷமித்தருளும்படி வேண்டிக்கொண்ட தாகத் தெரிவித்துக்கொள்ள வேண்டும்" என்று அரசர் கூறினார். அவருடைய உள்ளம் நன்றியறிவினால் உருகியது.

சுப்பிரமணிய பிள்ளை சந்தோஷமாக எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு திருச்சிராப்பள்ளிக்கு வந்து தம்பிரானவர்களிடம் நடந்தவற்றை விண்ணப்பம் செய்தனர். கேட்ட தம்பிரான், "தருமம் வீண் போகாது; தொண்டைமானார் தம்முடைய புகழை நிலை நிறுத்திக் கொண்டார். எல்லாம் தாயான செல்வத்தின் திருவருளே" என்று கூறி மகிழ்ந்தார்.
-------------

13. *தமிழ்நாட்டுப் பெண்பாலார்


* மயிலாப்பூர் ஸ்திரீகள் சங்கத்தின் ஆதரவில் 28-1-37-இல் செய்த பிரசங்கம்.

ஒரு நாட்டின் சிறந்த நாகரிக நிலையில் உயர்வை அந்நாட்டு மக்களுடைய அறிவு, ஆற்றல் செல்வ நிலை என்பவற்றால் உணரலாகும். இந்த மூன்றுக்கும் உரிய தெய்வங்களாக நாம் முறையே கலைமகள், பராசக்தி, திருமகள் என்பவர்களை வழிபடுகின்றோம்.

மக்களில் ஆடவர் எங்ஙனம் நாட்டினது பெருமைக்குக் காரணமாக இருக்கிறார்களோ அங்ஙனமே பெண்டிரும் காரணமாகின்றனர். ஒரு நாட்டின் சிறப்புக்குக் காரணமாகிய மேலே கூறிய மூன்றுக்கும் அதிதேவதை களாக மூன்று பெண் தெய்வங்களை வைத்தமையே இந்தக் கருத்துக்குத் தக்க ஆதாரமாகும். அறிவுச் சிறப்பு, ஆற்றலுயர்வு, செல்வநிலை ஆகிய இவற்றில் பெண்டிரது பங்கு எங்ஙனம் இருந்ததென்பதை ஆராய்ந்தால் அவர்களுடைய பெருமை நன்கு புலப் படும்.

அறிவுச் சிறப்பு

சங்க காலத்துப் பெண்புலவர்கள்

ஆடவர் மகளிர் ஆகிய இருவருக்குமே அறிவு பொதுவாகும். இப்பொழுது நமக்குக் கிடைப்பனவும், 1800 வருஷங்களுக்குமுன் இயற்றப்பட்டனவுமாகிய புற நானூறு முதலிய தமிழ் நூல்களால் கடைச்சங்க காலத் தில் பல பெண்கள் நற்புலமை வாய்ந்தவர்களாக இருந்தன ரென்பது தெரியவரும். ஏறக்குறைய ஐம்பது பெண்பாலார் இயற்றிய செய்யுட்கள் இப்பொழுது கிடைக்கின்றன. மற்றப் புலவர்கறுடைய வாக்குக்கு எவ்வளவு சிறப்பு உண்டோ அவ்வளவு சிறப்பு இவர்களு டைய செய்யுட்களுக்கும் உண்டு.

இலக்கணம் இயற்றிய பெண்பாலார்

இலக்கிய நூல்களைக் காட்டிலும் இலக்கண நூல் களைப் படித்தறிதல் கடினமானது. இலக்கண நூல் இயற்றுவதற்கோ பரந்த நூலறிவுவேண்டும். இலக் கணம் இயற்றிய புலவர்கள் புலவர்களாற் போற்றப்படும் சிறப்புடையவராவர். காக்கைபாடினியார், சிறு காக்கை பாடினியாரென்ற பெண்புலவர் இருவர் செய்யுளைப் பற்றிய இலக்கண நூல்களை இயற்றியிருக்கின்றனர். யாப்பருங்கல விருத்தியுரை, யாப்பருங்கலக்காரிகை யுரையென்னும் நூல்களில் அவ்விருவர் நூல்களிலிருந் தும் பல சூத்திரங்கள் மேற்கோளாகக் காட்டப்படு கின்றன; அந்நூல்கள் முழுவதும் அகப்படவில்லை.

அள்ளூர் நன்முல்லையார்

சல்க காலத்துப் பெண்புலவர்களுள் அள்ளூர் நன் முல்லையா ரென்பவர் ஒருவர். அவர் அள்ளூரென்னும் ஊரிற் பிறந்தவர். முல்லை மலர் கற்புக்கு அறிகுறி யாதலின் அப்பெயரை அவர் கொண்டாரென்று சொல்ல லாம். மல்லிகா, மாதவி என்று வடமொழியிலும் இத்த கைய மலர்களின் பெயர்கள் பெண்களுக்கு வழங்குகின் றன. அவர் செய்யுட்களில் காணப்படும் உவமைகளால் அவர் இயற்கையிலுள்ள மலர்களையும், பறவைகளையும், விலங்குகளையும் நன்றாகக் கவனித்து அவற்றின் அழகிலும் செயலிலும் ஈடுபட்டவரென்று தோற்றுகினறது.

ஒரு கிளி தன்னுடைய மூக்கினிடையே வேப்பம் கைவிரல் நகத்தினிடையே பொன்னாலாகிய உருண்டைக் காசை வைத்திருப்பதை உபமானமாகச் சொல்லுகிறார். உருண்டை வடிவமான வருவகைக் காசு அக்காலத்தில் வழங்கி வந்தது. பச்சோந்தியின் முதுகுக்குக் கருக்கரிவாளை உவமிக்கின்றார். ஒருவர் முதலில் நன்மையைச் செய்து விட்டுப் பிறகு துன்பத்துக்குக் காரணமாகும் தன்மை நெருஞ்சிமலர் முதலில் கண்ணுக்கு இனியதாகத் தோன்றி அப்பால் துன்புறச் செய்யும் முள்ளைத் தருவது போன்றதென்கின்றார்.

ஒக்கூர் மாசாத்தியார்

ஒக்கூரென்ற ஊரினராகிய மாசாத்தியாரென்பவர் ஒருவர். அவர் பாடியவற்றுள் தேர்ப்பாகன் ஒருவனை ஒரு சேனாதிபதி பாராட்டியதாக ஒரு செய்யுள் உள்ளது. சேனாதிபதி தன்னுடைய மனைவியினிடத்தில் அன்புள்ளவன்; அரசனுடைய கட்டளைப்படி ஒரு முறை யுத்தம் செய்யப் போயிருந்தான். யுத்தம் முடிந்தவுடன் அவன் தன் மனைவியைப் பார்ப்பதற்கு ஆவலுள்ளவனாக இருந்தமையால், விரைவில் தேரை அவன் பாகன் ஓட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்தான். அப்பொழுது "யுத்தம் முடிந்ததென்ற சந்தோஷத்தோடு நான் தேரில் ஏறி னேன்; ஏறினதுதான் தெரியும்; வீட்டுக்கு வந்து சேர்ந்ததை நான் தெரிந்துகொள்ளவில்லை. இறங்குங்க ளென்று நீ சொல்லிய பிறகே தெரிந்து மயங்கிப் போனேன். உனது திறமைதான் என்ன அதிசய மானது! நீ காற்றைப் பிடித்துத் தேரிற் கட்டினையோ? அல்லது உன் மனத்தையே குதிரையாகச் செய்து கட்டி னையோ?" என்று சேனாதிபதி பாகனைப் பாராட்டுகின்றான். தன்னுடைய மனைவியைப் பார்த்த சந்தோ ஷத்தினால் மறந்துவிடாமல் தனக்கு அந்தச் சந்தோஷம் உண்டாவதற்கு உதவி புரிந்த பாகனை அவன் பாராட்டுவது அவனது சிறந்த நன்றியறிவைப் புலப்படுத்து கின்றதல்லவா? இந்தக் கருத்தை,

    "இருந்த வேந்த னருந்தொழில் முடித்தெனப்
    புரிந்த காதலொடு பெருந்தேர் யானும்
    ஏறிய தறிந்தன் றல்லது வந்தவாறு
    நனியறிந் தன்றோ விலனே தாஅய்
    ...............இல்வயின் நிறீஇ
    இழிமின் என்றநின் மொழிமருண் டிசினே
    வான்வழங் கியற்கை வளிபூட் டினையோ
    மானுரு வாகநின் மனம்பூட் டினையோ
    உரைமதி வாழியோ வலவ" (அகநானூறு,384)

என்னும் அடிகள் வெளியிடுகின்றன. வாயுவேகம், மனோவேகம் என்று நாம் சொல்லுவதை மாசாத்தியார் எவ்வளவு அழகாக அமைத்திருக்கின்றார்!

ஒரு வீரப் பெண்ணைப் பற்றி அப்பெண்பாலார் பாடிய பாட்டொன்று (279) புறநானூற்றில் உள்ளது. அது மிக அழகானது. "என்ன வன்னெஞ்சம்! என்ன துணிவு! இவள்தான் சரியான வீரக்குடிப் பெண். அன்றைக்கு மூண்ட போரில் இவளுடைய தமையன் போய்ப் பகைவர்களது யானையைக் கொன்று தானும் இறந்தான். நேற்று நடந்த சண்டையில் இவள் கணவன் போய்ப் பகைவர்கள் கைக்கொண்டு சென்ற மாடுகளைத் திருப்பி அங்கே இறந்தான். இன்று யுத்த முரசின் முழக்கம் கேட்டதுதான் தாமதம்; இவளுக்கு எவ்வளவு கோலாகலம்! இவளுக்கு உள்ளவன் ஒரே மகன்; அவனும் இடையில் ஆடையணியத் தெரியாதவன்; அவன் கையில் வேலைக் கொடுத்து வெள்ளை ஆடையை உடுத்து எண்ணெய் தடவித் தலையை வாரி விட்டு, 'யுத்தத்திற்குப் போ' என்கின்றாள்" என்பது அச்செய்யுளின் கருத்து.

ஔவையார்

ஔவையாரைப் பற்றிய பல செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. அவருடைய பெருமை அளவற்றது. அவருடைய பெயரை வைத்துக்கொண்டு பெருமை பெற்றோர் பிற்காலத்திலும் இருந்தனர். சங்ககாலத்து ஔவையார் கபிலர், பரணர் என்பவர்களைப் போன்ற பெருமை வாய்ந்தவர். அவருடைய மனோதைரியம் ஆச்சரியப்படத்தக்கது. அவரை ஆதரித்த அதிகமா னென்னும் அரசன் ஒருமுறை அவரைத் தொண்டைமா னிடம் தூதாக அனுப்பினான். அவர் தொண்டைமானிடம் போனகாலத்தில் அவன் தன்னுடைய பெருமையைப் புலப்படுத்த வேண்டுமென்று நினைந்து தன் அரண்மனையைக் காட்டினான்; தன்னுடைய ஆயுத சாலையையும் காட்டி, "எப்படி இருக்கிறது?" என்று கேட்டான். அவன் போர் செய்தறியா னென்பதையும் படைக்கலப் பயிற்சிக்கும் அவனுக்கும் நெடுந்தூரம் என்பதையும் ஔவையார் தெரிந்துகொண்டு, "என்ன அழகு! இவை எவ்வளவு ஒழுங்காகத் துடைத்து எண்ணெய் பூசி மாலையணிந்து நன்றாக வைக்கப் பட்டிருக்கின்றன! எங்கள் அதிகமான் வேல் எவ்வளவோ குறையுடையதாக இருக்கிறது. அவன் பகைவரைக் குத்தி நுனி ஒடிந்து ரத்தக் கறையுடன் கொல்லன் பட்டடையிற் கிடக்கின்றன" என்றார். அவ் வரசனை இவ்வளவு துணிவாகப் பரிகாசம் செய்வதற்கு எவ்வளவு தைரியம் அவருக்கு இருக்கவேண்டும்!

ஒருசமயம் நாஞ்சில் வள்ளுவனென்ற ஓர் உப காரியை ஔவையார் பார்க்கப் போயிருந்தார். அவன் தன்னிடம் வரும் புலவர்களுக்கு யானையைப் பரிசாகத் தரும் இயல்புடையவன். அதைக் கண்ட ஔவையார் நகைச்சுவை உண்டாக ஒரு செய்யுள் கூறினார். அது யானையைப் பரிசுபெற்ற பாணன் ஒருவன் கூறியதாக அமைந்தது: "இந்த நாஞ்சில் வள்ளுவன் ஒன்றும் அறியாதவன். 'எங்கள் வீட்டில் அரிசி யில்லை. கொல்லை யிற் கொய்த கீரையைச் சுண்டி அதற்குமேல் தூவும் மாவுக்காகச் சிறிது அரிசி வேண்டும்' என்று கேட்டேன். அவன் ஒரு மலையைப் போன்ற யானையைக் கொடுத் தான். இப்படிப்பட்ட பைத்தியக்காரத் தனமான கொடை உலகத்தில் உண்டா? அவன் தன் பெருமைக் குத் தக்கபடி தந்தான்?" என்பது அச் செய்யுளின் பொருள்.

இத்தகைய பெரியாருடைய செய்யுட்கள் இப்போது அறுபதுக்குமேல் கிடைக்கின்றன.

காக்கைபாடினியார் நச்செள்ளையார்

காக்கைபாடினியார் நச்செள்ளையாரென்பது ஒருவர் பெயர். அன்பர் வருவதைக் குறிப்பித்து நன்னிமித்தமாக காக்கை கரைந்ததைப் பாராட்டி இவர் ஒரு செய்யுள் இயற்றி யிருக்கிறார். அதனால் காக்கை பாடினியாரென்ற சிறப்பைப் பெற்றார். இவர் ஆடுகோட் பாட்டுச் சேரலாதனென்னும் சேர அரசனைப் பத்துச் செய்யுள்களாற் பாடி ஆபரணத்துக்குப் பொன்னும் வேறு பொருள்களும் பரிசாகப் பெற்றார். பதிற்றுப்பத்து என்ற சங்கநூலில் ஆறாம் பத்தில் அச் செய்யுள்கள் உள்ளன.

பல சாதியினர்

குறமகள் குறியெயினி குறமகள் இளவெயினி என் னும் இரண்டு குறப்பெண்டிரும், வெண்ணிக் குயத்தியா ரென்னும் குயவர் குலத்துதித்தவரும் பாடியசெய்யுட்கள் சில உள்ளன. இவர்கள் வரலாற்றால் அக்காலத்தில் எல்லாச் சாதி மகளிரும் நற்புலமை வாய்ந்தவர்களாக இருந்தனரென்று தெரிகின்றது. இவர்களுள் வெண்ணிக் குயத்தியா ரென்பவர் கோவில் வெண்ணியென வழங்கும் ஊரினர். அது தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ளது; பாடல் பெற்ற சிவஸ்தலம். மிகப் பெரிய அரசனாகிய கரிகாற் சோழன் வெண்ணிப் போர்க்களத்திற் போர் செய்ததை இப்பெண் புலவர் பாராட்டிப் பாடிப் பரிசு பெற்றார்.

முடி பெற்றவர்.

பொன்முடியாரென்ற ஒருவர் வீரனுடைய கடமையைச் சிறப்பித்து ஒரு செய்யுள் கூறியுள்ளார். புலவர் களுக்கு முடியணிதல் பண்டை வழக்கம். முரஞ்சியூர் முடிநாகராய ரென்பவர் முடி பெற்றவரே. பிற்காலத் தில் சேக்கிழாரும், பாரதம் பாடிய வில்லிப்புத்தூராழ் வாரும் புலமைக்குரிய முடியைப் பெற்றவர்கள். பொன் முடியாரும் அவர்களைப் போலவே முடிபெற்றனரென் பதை அப்புலவருடைய் பெயரே தெரிவிக்கும்.

அரசன் முடி புனைகையில் அவன் பெருந்தேவியும் உடனிருந்து முடிபுனைவது வழக்கம். இது பெருங்கதை யென்னும் நூலாலும் சிலாசாஸனங்களாலும் தெரிய வரும்.

புலமையும் தலைமையும் பற்றி ஆடவர் முடிபுனை தலைப்போலவே பெண்டிரும் புனையும் வழக்கம் இவற்றால் வெளியாகின்றது.

இளமையிற் புலமை பெற்றோர்

முற்காலத்துப் பெண்புலவர்களிற் சிலர் பசலையார் என முடியும் பெயருடையவர். காமக்கணிப் பசலையார், போந்தைப் பசலையார், மாறோக்கத்து நப்பசலையா ரென்பன அத்தகைய பெயர்கள். பசலை யென்பது இளமைக்கு ஒரு பெயர். ஆதலின் இவர்கள் இளமையிலேயே பெரும்புலமை வாய்ந்தவர்களாக இருந்தனரென்று கருத இடமுண்டு.

பாரியின் மகளிர் இருவர் பாடிய செய்யுள் ஒன்று புறநானூற்றில் உள்ளது. தம் தந்தை இறந்ததை நினைந்து பாடியது அது. அவர்கள் தமக்கு வந்த துன் பத்தை அறியாது அருகே சென்ற உப்பு வண்டிகளை எண்ணிக்கொண்டிருந்தனரென்று கபிலர் பாடுகிறார். இதனால் அவர்கள் இளமைப் பருவத்தினரென்று தெரிகின்றது. அப்பருவத்தில் அவர்கள் செய்யுள் இயற்றும் புலமையுடையவராக இருந்தனர்.

அரச குடும்பத்தினர்

கரிகாற்சோழனுடைய பெண்ணாகிய ஆதிமந்தியா ரென்பவர் சில செய்யுட்கள் பாடியிருக்கிறார். பூத பாண்டியனென்னும் அரசனுடைய தேவியாராகிய பெருங்கோப்பெண்டு என்பவர் தம் கணவன் இறந்த காலத்தில் தீப்பாயும்போது பாடிய செய்யுள் ஒன்று புறநானூற்றில் இருக்கிறது. அப்பாடல் அவருடைய புலமையையும் கற்பின் திண்மையையும் வெளிப்படுத்து கின்றது.

இவற்றால் அரச குடும்பத்திலிருந்த பெண்களும் தமிழ்ப்புலமை வாய்ந்திருந்தனரென்பது நன்கு புலனாகும்.

பிற்காலத்துப் பெண்புலவர்

சங்ககாலத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் விளங்கிய பெண் புலவர்கள் பலர். அவர்களுள், பல அருமையான நீதி நூல்களை இயற்றியவராகிய ஔவையாரென்பவருடைய பாட்டுக்கள் இக்காலத்தில் இளம் பிள்ளைகளுக்கும் உத்ஸாகத்தை உண்டாக்குகின்றன. மிகவும் சுருக்கமாகவும் அகராதி வரிசையாகவும் இயற்றப்பட்ட ஆத்திசூடி, கொன்றைவேந்த னென்பனவும் வேறு நூல்களும் மிக்க பெருமை வாய்ந்தன.

ஆண்டாளுடைய பாசுரங்கள் திவ்யப் பிரபந் தத்தில் ஒரு பகுதியாக விளங்குகின்றன. ஸ்ரீரங்கநாத னுக்குப் பூமாலையைச் சூடிக்கொடுத்த நாச்சியாராகிய அவர் பாமாலையையும் பாடிக்கொடுத்தார்; ஆனால் அவர் சூடிக்கொடுத்த பூமாலை அக்காலத்தில் திருமாலுக்கே பயன்பட்டது; அவர் பாடிக்கொடுத்த பாமாலையோ எவ்வளவோ வருஷங்கள் கடந்தும் வாடாமல் யாவருக்கும் பயன்படுகின்றது.

காரைக்காலம்மையாருடைய பாசுரங்கள் சைவத் திருமுறைகளில் ஒன்றாகிய பதினோராந் திருமுறையிற் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அத்திருமுறையில் ஸ்ரீசோம சுந்தரக் கடவுள் பாடியருளிய ஒரு செய்யுளை அடுத்து இவருடைய பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதனால் இவருடைய செய்யுட்களுக்குச் சைவர்கள் மிக்க சிறப்பளித்தனரென்று தெரியவருகின்றது. திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரே இவ்வம்மையாரைப் பாராட்டி யிருக்கின்றனர்.

கரிவலம் வந்த நல்லூரில் இருந்த வரகுண பாண்டியரென்று ஓரரசருடைய மனைவியார் பெரிய விதுஷி யாகவும் சிவபெருமானிடத்தில் உறுதியான அன்புடையவராகவும் இருந்தார். அவர் சிவபெருமான்மீது பாடிய செய்யுள் ஒன்று வருமாறு:

    "ஆக்கையெனும் புழுக்குரம்பை யணைந்தணையாப் பொருளை
            அருளொளியைப் பராபரத்துக் கப்புறமா மறிவை
    நீக்கமற மயிர்முனைக்கு மிடமறவெங் கெங்கும்
            நிறைந்துநின்ற முழுமுதலை நினைவிலெழுஞ் சுடரைப்
    பாக்கியங்கள் செய்தநந்தந் தவக்குறைகள் முடிக்கும்
            பழவடியார் தமக்குதவும் பசுந்துணர்க்கற் பகத்தை
    வாக்குமன விகற்பத்தா லளவுபடா வொன்றை
            மாசற்ற வெறுவெளியை மனவெளியி லடைப்பாம்."

சில பழைய வரலாறுகளில் சோழனும் அவன் மனைவியும் சேர்ந்து பாடிய சில செய்யுட்கள் சொல்லப்படுகின்றன. தமிழ்ப் புலமையில் இருவரும் சமானராக இருந்ததை இவ்வரலாறுகள் உணர்த்தும்.

ஊற்றுமலை ஜமீன்தாரொருவருடைய மனைவியாரான பூசைத்தாயாரென்பவர் தம் கணவர் பகையரசர்களாற் கொல்லப்பட்ட பிறகு தம் ஜமீனை யிழந்து தென்காசியில் தம்முடைய இரண்டு குமாரர்களுக்கும் கல்வி பயிற்சி செய்வித்து வசித்து வந்தார். ஒருநாள் அவ்விருவருள் இளையவரை மூத்தவர் அடித்தபோது அடிபட்டவர் தம் தாயாரிடம் வந்து முறையிட்டு அழுதார். அப்பொழுது அவரை நோக்கி மனம் வருந்திப் பூசைத்தாயார்,

    "தேரோடு நின்று தெருவோ டலைகிற செய்திதனை
    ஆரோடு சொல்லி முறையிடு வோமிந்த அம்புவியிற்
    சீரோடு நாமு நடந்துகொண் டாலிந்தத் தீவினைதான்
    வாரா தடாதம்பி சீவல ராய மருதப்பனே"

என்னும் செய்யுளைக் கூறினர்;

காஞ்சீபுரத்தில் அம்மைச்சி யென்ற ஒருத்தி இருந்தாள். அவள் தமிழ்ப் புலமை யுடையவள். அவள் வீடு வரதராஜப் பெருமாளது தேரோடும் வீதியில் இருந்தது. ஒருமுறை அந்தத் தேர் போகும் பொருட்டு அவள் வீட்டைச் சிலர் இடித்து விட்டார்கள். அப்பொழுது அவள் வருந்தி இரண்டு செய்யுட்கள் பாடினாள். அவற்றுள், 'பெருமாளே! பாம்பையுங் குரங்கையும் உமக்கு ஊழியக்காரராகக் கூட்டிவந்தீரே; என்னுடைய வீட்டை இலங்கைக் கோட்டை யென்று நினைத்தீரே?" என்னும் கருத்துடையது ஒன்று; அது வருமாறு:-

    "பாப்புக் குரங்கைப் படையாகக் கூட்டிவந்தீர்
    தேப்பெருமா ளேகச்சிச் செல்வரே-கோப்பமைந்த
    கொம்மைச் சிகரிலங்கைக் கோட்டையென்று
    கொண்டீரோ அம்மைச்சி வாழு மகம்."

இதில் தன் வீட்டை இடித்தவர்களைப் பாம்பென்றும் குரங்கென்றும் சமற்காரமாக நிந்தித்திருப்பது அவளுடைய புலமையின் பயனென்று தெரிகின்றதல்லவா?

கந்தியாரென்ற ஜைன சந்நியாஸினி ஒருவர் சீவக சிந்தாமணி முதலிய நூல்களினிடையே பல பாடல்களைப் பாடிச் சேர்த்திருக்கின்றார். அவர் செய்தது குற்றமாயினும் அச்செயல் அவருடைய புலமையை அறிவிக் கின்றது. அங்ஙனம் உள்ள செய்யுட்களின் கீழ் ஏட்டுப் பிரதிகளில், 'இவை கந்தியார் பாடல்' என்ற குறிப்பு எழுதப்பட்டிருக்கும்; நச்சினார்க்கினியரும் தம் உரையிற் குறித்திருக்கின்றார்.

கம்பருடைய தாதி ஒருத்தியும், உத்தர நல்லூர் நங்கை, உறையூரிலிருந்த தமிழறியும் பெருமாள் முத லியவர்களும் தமிழ் புலமை யுடையவர்களாகக் காணப் படுகின்றனர்.

வாதம் புரிந்தோர்

பெண்களில் அறிவுடையோர் பிறரோடு வாதப்போர் நடத்தியதாகத் தமிழ்நாட்டிற் சில வரலாறுகள் வழங்கு கின்றன. குண்டலகேசி யென்னும் ஒரு பெண் பௌத்த மதக் கொள்கைகளை நிலைநிறுத்தினா ளென்றும், அதன் பொருட்டு அவள் பல இடங்களிற் சென்று அங்கங்கே உள்ள மத நூல்களில் அறிவுடைய வித்துவான்களை வாதுக்கழைத்துச் சொற்போர் புரிந்தனளென்றும் தெரிகின்றது. அவளது வரலாற்றைக் கூறும் குண்டலகேசி யென்னும் நூல் தமிழ்க்காப்பியங்கள் ஐந்தனுள் ஒன்றாகும்.

காப்பியங்களிற் கூறப்படும் பெண்கள்

நீலகேசி யென்ற ஜைன நூலில் வரும் நீலகேசியும், சீவகசிந்தாமணியில் வரும் விசயையும், பெருங்கதையில் வரும் வாசவதத்தையும், மானனீகையும் மிகவும் சிறந்த கல்வியறிவுடையவர்களாக இருந்தனரென்று அவ்வந் நூலாசிரியர்கள் புலப்படுத்தி யிருக்கிறார்கள். பெண்டிரும் ஆடவரைப் போன்று கல்வியில் உயர்நிலையை அடைய வேண்டுமென்ற கொள்கை அக்காலத்திலும் பரவி யிருந்தமை இவற்றாற் பெறப்படும். கலிவியிற் பெரியராகிய கம்பர் கோசல நாட்டை வருணிக்கையில்,

    "பெருத்த டங்கட் பிறைநுத லார்க்கெலாம்
    பொருந்து செல்வமுங் கல்வியும் பூத்தலால்
    வருந்தி வந்தவர்க் கீதலும் வைகலும்
    விருந்து மன்றி விளைவன யாவையே"

என்று அமைக்கின்றார். அழகு, கல்வி, செல்வம் என்னும் மூன்றையும் பெண்கள் உடையவர்களாக இருத்தல் ஒரு நாட்டின் சிறப்புக்கு ஆதாரம் என்பது அப்புலவர் கொள்கை.

சங்கீதப் பயிற்சி

பெண்கள் சங்கீதப் பயிற்சி உடையவர்களாக இருந் தனர். பழங்காவியங்களாலும் சங்க நூல்களாலும் அக் காலத்தில் பெண்மணிகளுக்கு இருந்த இசைப் பயிற்சி யின் மிகுதி புலப்படும். மலையைச் சார்ந்த இடங்களில் வாழ்ந்த குறப்பெண்கள் தினைப்புனம் காக்கும்போது பாடுவதும், அப்பாட்டினாற் கிளிகள் மயங்கி விழுவதும், சுனைகளில் அவர்கள் நீராடி மயிரை உலர்த்திக் கொண்டே குறிஞ்சிப் பண்ணைப் பாடுவதும், அப் பாட்டைக் கேட்டு மயங்கிய யானைகள் தினைப் பயிரை மேய்வதை மறந்து நிற்பதும், வீரப்பெண்டிர் தம் கணவர்கள் போர்க்களத்திற் புண்பட்டபோது அப்புண்ணி னால் உண்டாகும் வருத்தம் தோற்றாதபடி இன்னிசை பாடுவதும், விறலியரென்ற வகையினராகிய மகளிர் பெரிய அரசர்களிடத்திற் பாடிப் பரிசு பெறுவதும், கோயில்களில் மகளிர் பாடி வணங்குவதும், யாழ் வாசிப் பதும், காலத்திற்கேற்ற பண்ணால் அன்பர்களுக்குத் தம் உள்ளக் கருத்தைக் குறிப்பிப்பதும், இசையில் வாதிட்டு வெல்வதுமாகிய செய்திகள் பலவற்றை அவற்றிற் காணலாம்.

மதுரையில் இருந்த பாணபத்திரர் என்பவருடைய மனைவி இலங்கையிலிருந்து வந்த இசைப் பயிற்சியை யுடைய ஒரு பெண்ணோடு பாடி வென்றதாக ஒரு வரலாறு உண்டு. இப்பொழுது வழங்கும் தேவாரங்களுக்குப் பண் அமைத்துக் கொடுத்தவர் இராசேந்திர பட்டணத்திலிருந்த ஒரு பெண்மணியே. சங்கீதத்துக்கு அதிதேவதை மாதங்கி யென்னும் பெண் தெய்வமே.

சங்கீதப் பயிற்சியோடு சாகித்ய வன்மையும் சில பெண்பாலாரிடம் இருந்தது. ராக பாவங்களையும் சிறந்த அர்த்தத்தையும் உள்ளடக்கிய பல கீர்த்தனங் களை மாயூரத்தம்மா என்ற ஒருவர் பாடியிருக்கிறார். கனம் கிருஷ்ணையர் முதலிய வித்துவான்கள் அக்கீர்த் தனங்களைப் பாராட்டிப் பேசுவதுண்டு. அவரைப் போன்ற பல பெண்களுடைய கீர்த்தனங்கள் தமிழ் நாட் டில் வழங்கிவருகின்றன.

பிற கலைகளிற் பயிற்சி

முத்தமிழ்களில் ஒன்றாகிய நாடகம் பெண்களையே பிரதானமாகக் கொண்டு நடைபெற்று வந்தது. மாதவி யென்ற நாடகக் கணிகையின் ஆடலுக்கு அங்கமாகப் பலர் இருந்து பாடியும் வாத்தியம் வாசித்தும் சிறப்பித்த வரலாறு சிலப்பதிகாரத்தில் உள்ளது. கோயில்களில் தொண்டுபுரியும் பெண்கள் நாட்டியக் கலையை வளர்த்து வந்தனர். சில ஸ்தலங்களில் தனியே நாடகங்கள் இயற்றப்பட்டு அவர்களால் நடிக்கப்பெற்று வந்தன. தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தில் பழைய காலத்தில் இராஜராஜ நாடகமென்பதும், பிற்காலத்தில் சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகமென்பதும் நடந்து வந்தன. இப்பொழுதும் திருவிழாவில் குறவஞ்சி நாடகம் அங்கே நடைபெறுகின்றது.

தமிழ்ப் பிரபந்த வகைகளில் ஒன்றாகிய உலா என்பது நாடகக் கணிகையரைப்பற்றியதே யாகும். இவர்கள் தளிப் பெண்டுகளெனவும் வழங்கப்படுவர். பழைய காலத்தில் ஒவ்வொரு கோயிலிலும் உலா, கட்டியம், எச் சரிக்கை, ஊஞ்சல், லாலி, அம்மானை முதலிய சொல்லி வழிபடுவது இவர்கள் வழக்கம். இவர்கள் அறுபத்து நான்கு கலைகளிலும் வல்லவர்களாக இருந்தனரென்று மணிமேகலை முதலிய நூல்கள் உணர்த்துகின்றன.

வைத்தியம், சோதிடம், சித்திரம், சிற்பம் முதலிய கலைகளிலும் பெண்டிர் தேர்ந்த அறிவுடையவர்களாக இருந்தனர். இப்பொழுதும் பல குடும்பங்களில் முதிய பெண்டிர் கொடிய வியாதிகளுக்குச் சில சுலபமான பச் சிலை மருந்தைக் கொடுத்துக் குணப்படுத்துகிறார்கள். நட்சத்திரம், திதி முதலியன அவர்களுக்கு நன்றாகத் தெரியும். மந்திர பலத்தினால் பல நோய்களை நீக்கும் ஆற்றல் சிலருக்கு உண்டு. சித்திரக்கலையில் அவர்களுக் குள்ள அறிவை அவர்கள் எழுதும் கோலங்கள் புலப் படுத்தும். பாசிமணியாலும், நூலாலும், மலர்களாலும் பெண்டிர்கள் பலவகைச் சித்திரங்களை அமைப்பர்; ஓலை முதலியவைகளால் பல வகையான பெட்டிகளை முடைவர். இப்பொழுதும் தனவணிகர் வீடுகளிலும் முகம்மதியர் வீடுகளிலும் இவ்வழக்கம் இருக்கிறது. மிகவும் பொறு மையாக மாதக்கணக்கில் இடைவிடாது முயன்று மெல்லச் செய்யும் சித்திர வேலைகளுக்குப் பெண்களே தகுதியுடையவர்கள்.

பெண்களின் ஆற்றல்

எந்த வகையான துன்பத்தையும் பொறுக்கும் ஆற்றலே எவ்வகை ஆற்றலிலும் சிறந்தது.

"வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை"

என்பது குறள்; பலத்திலே சிறந்த பலம் அறிவிலிகள் செய்யும் குற்றத்தைப் பொறுக்கும் பொறுமை யென்று அதிற் சொல்லப்பட்டிருக்கிறது. கணவராலும், சுற்றத் தாராலும், குழந்தைகளாலும் மற்றவராலும் உள்ளத் துக்கும் உடலுக்கும் நேரும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு தமக்கென்று ஒன்றையேனும் கருதாமல் பிறர் நன்மைக்காகவே உழைக்கும் சிறந்த நிலையை யுடையவர் மகளிர்.

    "அன்புடைக் கணவ ரழிதகச் செயினும்
    பெண்பிறந் தோர்க்குப் பொறையே பெருமை"

என்பது பெருங்கதையில் உள்ளது. தம் நாயகர் நன்றாக இருக்கவேண்டுமென்று தம்முடைய பசி, பிணி முதலிய குறைகளை மறைத்து வாழ்ந்த பல பெண்மணிகளுடைய சரித்திரங்கள் உண்டு. அப்படியே தம் குழந்தைகள் சுகப்பட வேண்டுமென்று எண்ணித் தம் வருத்தத்தை வெளிக்காட்டாமல் வாழ்ந்தவர்களும் பலர். நல்ல உணவைத் தம் கணவருக்கும் குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு எஞ்சியுள்ளதை யுண்ணும் பெண்மணிகள் பலர்.

    "கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக்
    கொடுத்த தந்தை கொழுஞ்சோ றுள்ளான்
    ............ ........... ..........
    பொழுதுமறுத் துண்ணுஞ் சிறுமது கையளே"

என்னும் நற்றிணைச் செய்யுள் தன் குடும்பம் வறுமைப் பட்ட காலத்தில் தன் தந்தையின் வீட்டில் சுகமாக வாழும் நிலை இருப்பினும் அந்த உதவியை நாடாமல் புக்ககத்திலிருந்து தான் மட்டும் ஒரே பொழுது உண்ணும் தன்மையளென்று ஒரு பெண்ணைப்பற்றிக் கூறுகின்றது. மதுகையளென்பது பலசாலியைக் குறிக்கும். இப்படியிருப்பதற்கு எவ்வளவு மனோபலம் வேண்டும்!

வீரப் பெண்கள்

பெண்களுடைய வீரத்திற்கு உதாரணமாகக் கண்ணகியைக் கூறலாம். அவளை வீரபத்தினி யென்று வழங்குவர். வீரப் பெண்களது கற்பை மறக்கற்பென் பர்; சீறிய கற்பென்றும் கூறுவர். கண்ணகியின் வரலாற்றில் அவளுடைய உள்ளத்தின் ஆற்றலும் உடலின் ஆற்றலும் ஒருங்கே காணப்படும்.

புறநானூற்றிலுள்ள சில செய்யுட்கள் வீரக்குடிப் பெண்கள் சிலரைப்பற்றிச் சொல்லுவன. போரில் தம் பிள்ளைகள் பகைவரைக் கொன்று இறந்து படுவதைப் பெரும்புகழாக அவர்கள் எண்ணினர். வீரக் குடியிற் பிறந்தவர்களை மூதின் மகளிரென்று கூறுவர். தமிழ் நாட்டிலேயே பழைய காலத்தில் வீரர்கள் இருந்ததற்கு அவர் களுடைய இளமையில் தாய்மார்கள் வீர உணர்ச்சியை அவர்களுக்கு ஊட்டி வந்ததும் ஒரு காரணமாகும்.

உடல் வலிமைக்குரிய பழக்கங்கள்

தங்களுடைய தேகம் வன்மை பெறுவதற்குரிய வேலைகளை அவர்கள் செய்து வந்தனர். அவ்வேலைகள் யாவும் அவர்களுடைய தேக நலத்துக்குரியனவாகவும் பணச்செலவைத் தவிர்ப்பனவாகவும் அமைந்திருந்தன. கிணற்றிலிருந்தும் ஆற்றிலிருந்தும் நீர் எடுத்து வருதல், பாத்திரங்களைத் தேய்த்தல், துணிகளைச் சுத்தம் செய்தல், ஆலயம் செல்லுதல் முதலிய காரியங்களால் அவர் களுடைய தேகமும் வீடும் விளக்கத்தை யடைந்தன. தங்கள் வீட்டுக்கு வேண்டிய அப்பளம், வடகம், வற்றல், குழந்தைகளுக்குரிய சிற்றுண்டிகள் முதலியவற்றைப் பிறரிடமிருந்து விலைக்கு வாங்காமல் பெண்களே செய்து வைப்பர்.

விளையாட்டுக்கள்

பெண்களுக்கென அமைந்த விளையாட்டுக்கள் அவர் களுடைய இயல்புக்கும், உடல் வளர்ச்சிக்கும் ஏற்றபடி இருந்தன. வீட்டில் இருந்தபடியே ஆடும் அம்மானை, பல்லாங்குழி முதலியன அவர்களுடைய நரம்புகளுக்கு உறுதியை உண்டாக்கின. பந்து விளையாடுதல் பெண் களுக்கே உரிய விளையாட்டாக இருந்தது. பெண்களை வருணிக்கையில் பந்தார் விரலியென்றும், பந்தனைவிரலி யென்றும் புலவர்கள் கூறுவர். சில ஸ்தலங்களில் அம்பிகைக்குப் பந்து விளையாடுபவ ளென்ற பொருளுடைய திருநாமங்கள் அமைந்துள்ளன. கும்பகோணத்திற்கு மேற்கிலுள்ள கொட்டை யூரென்னும் ஸ்தலத்தில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையின் திருநாமம் கந்துகக் கிரீடாம்பிகை என்பது; அது தமிழில் பந்தார் விரலியென வழங்கும். பெருங்கதையில், "பந்தடி கண்டது" என்ற ஒரு பகுதி முழுவதும் சில பெண்கள் தம்முள் பந்தயங் கூறிப் பந்தாடிய செய்தியை மிக அழகாகவும் ஆச்சரிய மாகவும் வருணிக்கிறது. அதனால் இராசனை என்பவள் காலாலும் கையாலும் பந்தை அடித்தாளென்று தெரி கின்றது.

    "பாடகக் கான்மிசைப் பரிந்தவை விடுத்ததும்
    சூடக முன்கையிற் சுழன்றுமா றடித்தும்
    அடித்த பந்துக ளங்கையி னடக்கியும்
    மறித்துந் தட்டியுந் தனித்தனி போக்கியும்
    பாயிர மின்றிப் பல்கல னொலிப்ப
    ஆயிரங் கைநனி யடித்தவ ளகல"ப்

பின்பு காஞ்சன மாலை யென்பவள் பந்தை யடித்து ஆகாயத்தில் போக்கியும் அடுத்து வேறொரு பந்தால் அதனைப் பின்னும் அடித்தும் இவ்வாறு ஆயிரத் தைந்நூறு கை அடித்தாள். அப்பால் அயிராபதி என்பவள் அகங்கையாலும் புறங்கையாலும் ஒரே காலத்தில் மலர்முடித்தும் நெற்றியிற் பொட்டிட்டுக் கொண்டும் இரண்டாயிரங்கை அடித்தாள். பிறகு விச்சுவலேகை யென்பவள் ஒரு கோலெடுத்துத் தட்டிப் பந்து விளையாடினாள். இப்படியே வேறுசிலரும் அடித்தனர். இறுதியில் மானனீகை யென்ற ஒருத்தி எல்லோரி லும் சிறப்பாக அடித்தாள். அப்பொழுது,

    "சுழன்றன தாமங் குழன்றது கூந்தல்
    அழன்றது மேனி யவிழ்ந்தது மேகலை
    எழுந்தது குறுவியர் இழிந்தது சாந்தம்
    ஓடின தடங்கண் கூடின புருவம்"

என்று பெருங்கதை ஆசிரியர் விரிவாகக் கூறுகின்றார்.

நகரங்களில் பூம்பொழிலில் மகளிர் கூடிப் பந்தாடும் இடங்கள் இருந்தனவென்று கம்பர் கோசல நாட்டைப் பற்றிக் கூறுகையில் தெரிவிக்கின்றார;

    " பந்தினை யிளையவர் பயிலிடம்" ( நாட்டுப் படலம், 48.)

அப்படியே அயோத்தியிலுள்ள பெண்கள் பந்தாடுதலை,

    "பந்துகண் மடந்தையர் பயிற்றுவாரிடை
    சிந்துவ முத்தினம்" (நகரப்படலம்,45.)

என்றும், மிதிலையிலுள்ள மகளிர் பந்தாடுதலை,

    "மையரி நெடுங்க ணோக்கம் படுதலுங் கருகி வந்து
    கைபுகிற் சிவந்து காட்டுங் கந்துகம் பலவுங் கண்டார்"
    (மிதிலைக் காட்சிப்படலம்.16.)

என்று புனைந்துரைக்கின்றார்.

இங்ஙனம் காலையும் கையையும் வீசியும் குதித்துப் பந்தாடுவதனால் மகளிர் உடம்பிலுள்ள எல்லாப் பகுதி களும் வன்மை பெறும். மகளிர் பந்தாடும்போது பாடிக் கொண்டே அடிப்பார். அப்படிப் பாடும் பாட்டுக்குக் கந்துகவரி யென்று பெயர். அவ்வகைப் பாட்டுக்கள் சிலப்பதிகாரத்திலும்,தத்துவராயர் நூல்களிலும் உள்ளன. பந்தாடுதலையல்லாமல், சாழல், தெள்ளேணம், தோணோக்கம், கோலாட்டம், கும்மியடித்தல், உந்தி முதலிய மகளிர் விறையாட்டுக்கள் பல. அவற்றுள் கும்மி, கோலாட்டமென்பவற்றை-யன்றி மற்றவற்றை இப்போது காணுதல் அரிது. பழந்தமிழ் நூல்களாலேயே அவ்விளை யாட்டுக்களை அறிகிறோம். பெண்களுடைய சங்கீதப் பயிற்சிக்கும் தேகப் பயிற்சிக்கும் அவை ஏற்றபடி இருந் தன்; அவற்றால் அவர்கள் நோயின்றியும் வாழ்ந்தனர். ஆண்களைக் காட்டிலும் பெண்டிர் அதிக உணவை உண்ணுபவர்களென்பது ஒரு வடமொழிச் சுலோகத்தில் உள்ளது. அதற்குக் காரணம் அவர்களுடைய உழைப்பின் மிகுதியேயாம்.

பொது வாழ்க்கை

பொதுவாழ்க்கையில் பெண்கள் மேற்கொண்ட செயல்களை இனி ஆராய்வோம்.

குடும்பத்தலைவி

ஒரு வீட்டின் தலைவி பெண் என்பது நம் நாட்டினர் அமைத்த அமைப்பு. அதனால்தான் இல்லென்றும் மனை யென்றும் பெண்டிர்கள் வழங்கப்படுவர். ஒரு குடும்பத் தின் இன்பதுன்பங்கள் அக்குடும்பத்துத் தலைவியின் இயல்புக்கேற்றபடி அமைந்தவை;

    "இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை"

என்ற திருக்குறளின் கருத்து இதுவே.

இல்லாளுடைய உடன்பாட்டைப் பெற்றே தலைவன் தருமம் செய்யவேண்டும். தருமம் செய்யும் உரிமை பெண்கள்பால் உண்டென்பதைக் காஞ்சீபுரத்திலும், திருவையாற்றிலும், செங்கோட்டையிலும் அம்பிகை அறம் வளர்த்த வரலாறுகள் தெரிவிக்கின்றன. புற நானூற்றில் குமணன்பாற் பரிசுபெற்று வந்ந்த பெருஞ் சித்திரனாரென்பவர் தம் மனைவியை நோக்கிக் கூறியதாக ஒரு செய்யுள் (163) உள்ளது; "இதோ, நான் கொண்டு வந்த இந்தப் பொருள்களை உனக்கு வேண்டியவர்களுக் கும், உன்பால் அன்புடையவர்களுக்கும், நம் சுற்றத் தாருக்கும் நிறைக் கொடு; உனக்குக் கடனாகத் தந்து பலநாட்களாகத் திரும்ப வாங்கிக்கொள்ளமால் இருப்ப வர்களுக்கும் கொடு; இன்னும் உன்னுடைய வருப்பப் படியே கொடுக்க வேண்டியவர்களுக்கெல்லாம் கொடு. என்னைக் கேட்க வேண்டுமென்பதில்லை; பின்னுக்கு இதை வைத்துக் கொண்டு சுகமாக இருப்போமென்றும் எண்ணாதே. எல்லோருக்கும் கொடு" என்று அவர் கூறுகின்றார். சம்பாதிப்பது தம் கடமையென்றும், தருமம் செய்வதும் செலவு செய்வதும் தம் மனைவியின் கடமையென்றும் அப்புலவர் எண்ணினர்.

விருந்தோம்பல்

விருந்தினர்களை உபசரிப்பதில் பெண்களே மிக்க கவனமுடையவர்கள்; தம் வீட்டில் ஆண்பாலார் இல்லாத சமயத்தில் விருந்தினர்வரின் தம் குழந்தைகளை அனுப்பி மாமா, சிற்றப்பா என்ற முறை வைத்து அவர்களை அழைத்துவரச் செய்து உபசரித்தனுப்புவர். இந்தச் செய்தி சிறுபாணாற்றுப்படையிலும் மலைபடு கடாத்திலும் காணப்படுகின்றது. எந்தச் சாதியினராயினும் அவர் களுக்கேற்ற முறையில் உணவளித்து உபசரித்தல் மகளிர் வழக்கம். பாணர்களைப் பல சாதி மகளிரும் உபசரித்து உண்பிக்கும் செய்திகள் பெரும்பாணாற்றுப் படையால் தெரியவரும். கண்ணகி கோவலனைப் பிரிந்து வாழ்ந்த காலத்தில் தனக்கு உண்டான குறையாக வேறொன்றையும் கூறாமல்,

    "அறவோர்க் களித்தலு மந்தண ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலும்
    தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலு மிழந்த வென்னை"

என்று தான் அறவோர் முதலியோரை உபசரியாததையே ஒரு பெருங் குறையாகச் சொல்லுகிறாள். அசோகவனத்தில் இருந்த காலத்தில் சீதை இராம பிரானை நினைந்து, "விருந்தினரைக் கண்டால் என்ன செய்வாரோ!" என்று வருந்தியதாகக் கம்பர் அமைக்கின்றார்;

    "விருந்து கண்டபோ தென்னுறு மோவென்று விம்மும்" (காட்சிப் படலம், 15)

இவற்றால் பெண்களுக்கு விருந்தெதிர் கொள்ளும் தர்மம் சிறந்ததென்று பெறப்படுகின்றது.

கணவர்பால் தமக்கு ஏதாவது மன வருத்தம் உள்ள காலத்திலும் விருந்தினர் வந்தால் அதனை மறந்து உபசாரம் செய்தல் பெண்கள் வழக்கம். கணவர் வீட் டிற்கு வருகையில் தம் மனைவியர் கோபமாக இருத்தலை யறிந்தால் அது நீங்குவதற்காக விருந்தினரை உட னழைத்து வருவர்; அப்பொழுது அவர்களுடைய கோபம் நீங்கும்; இதனை 'விருந்து கண்டொளித்த ஊடல்" என்று புலவர் கூறுவர்.

கற்பு

பெண்களுடைய கற்பைப்பற்றிப் பல நூல்கள் சொல்லுகின்றன. தம் கணவன்மார் உயிர் நீப்பின் உடனே இயல்பாக உயிர் நீங்குதல் தலையாய கற்பென் றும், அக்கினிப் பிரவேசம் செய்தல் இடையாய கற்பென்றும் கூறுவர். பாண்டியன், நெடுஞ்செழியன், பொன்செய்கொல்லன் சொற் கேட்டுக் கோவலனைக் கொல்வித்தபோது தன் குற்றத்தைக் கண்ணகியால் அறிந்து உடனே உயிர் நீத்தான். அவன் உயிர்நீத்த அப்பொழுதே அவனுடைய தேவியும் உயிர்நீத்தாள். இங்ஙனம் இறத்தலை மூதானந்த மென்பர்.

தலைவன் இறந்தபோது தானும் உடன் எரிபுகுதலை ஆனந்தப் பையுளென்பர்; 'ஸஹகமனம்' என்று பிறர் வழங்குவர்.

"நல்லோள் கணவனொடு நளியழல் புகீஇச் சொல்லிடை யிட்ட மாலைநிலை" (புறத்திணையியல், 24)

என்று தொல்காப்பியத்தில் இச்செய்தி சொல்லப்படும். பூதபாண்டியனென்னும் அரசனுடைய தேவியாகிய பெருங்கோப்பெண்டு இங்ஙனம் தீப் பாய்ந்த கற்புடை மகளிருள் ஒருத்தியாவாள். அவள் தீப்புகத் தொடங்கு கையில் அவளைப் புகவேண்டாமென்று சில முதியோர் தடுத்தனர். அவர்களை நோக்கி அவள், "நீங்கள், என்னைக் கணவருடன் செல்வாயாகவென்று சொல்வ தற்கு மாறாக இவ்வாறு தடுக்கின்றீர்களே. பிராயம் முதிர்ந்ததனால் என்ன பயன்? உங்களுடைய சாஸ்திர விசாரத்தை என்னவென்று சொல்வது! கணவர் இறந்த பின்பு கைம்மை நோன்பியற்றி வாழும் பெண்டிர்களுள் ஒருத்தியல்லள் நான். குளிர்ந்த பொய்கையும் நான் புக எண்ணிய தீயும் எனக்கு ஒன்றே" என்று கூறித் தீப்பாய்ந்தாள். கைம்மை நோன்பியற்றும் பெண்டிர் நெய், மலர், படுக்கை இவற்றை விரும்பார்; இலைக் கறியை உண்பர்.

தாயெனக் கருதுதல்

ஆடவர்கள் யாவரையும் தகப்பனென்றும் முறை பாராட்டுவது இல்லை. ஆனால் பெண்களை மாத்திரம் பிராயம், சாதி முதலிய வரையறையில்லாமல் தாயென்று கருதுவது முன்னோர் வழக்கம்; சகோதரிகளாகச் சொல்வது நவீன வழக்கம். பண்டைக்காலத்தில் மனைவி யைத் தவிர்த்து மற்ற யாவரையும் தாயென்றே சொல்லி வந்தனர். ஆடவர்களுடைய பெயர்களுக்குப் பின் செட்டியார், முதலியார் முதலிய சாதிப்பெயர்கள் இருப்பது போலன்றி எல்லாப் பெண்களுக்கும் அம்மை, அம்மா ஆச்சி என்று அமைந்திருத்தலே இக்கொள்கைக்குச் சிறந்த ஆதாரமாகும். காரைக்காலம்மையார், நச்செள்ளையாரென்ற பெயர்களைப் பார்க்க. செள்ளை யென்பது தாயின் பெயர்; ந என்பது சிறப்புப் பொருளைத் தருவது.

பெண்களைத் தெய்வமாகப் போற்றல்

கற்புடைய பெண்களைத் தெய்வமாகப் போற்றும் வழக்கம் பழங்காலமுதல் உண்டு. கண்ணகிக்கும் ஔவையாருக்கும் கோயில்கள் இருக்கின்றன. மங்கை யர்க்கரசியாரைச் சேக்கிழார்,
" மங்கையர்க்குத் தனியரசி யெங்க தெய்வம்"
என்று வாயாரப் பாடுகின்றனர். கற்புடைய மங்கையர் இறந்தவிடத்துக் கல்நட்டுப் பூசித்தனர்; மாஸதிக்கல் என்பது அதன் பெயர். இன்றும் மங்கலத்தோடு இறந்த பெண்களைத் தெய்வமாகக் கொண்டாடும் வழக்கம் நம் குடும்பங்களில் உள்ளது. சுமங்கலிப் பிரார்த்தனை முதலியன இதற்கு உதாரணங்களாம்.

வீடுகளிற் பெண்களின் நிலை

பெண்கள் ஏவலாளரைப்போல் இருந்து வீட்டைச் சுத்தமாக வைத்திருத்தல் சமையல் செய்தல் முதலிய காரியங்களைக் கவனித்து வந்தனர், ஆயினும், "ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடிப்பவள் பாக்கியம்" என்ற பழமொழியால், பெண்களை வெறும் அடுப்பூதிகளாக நினையாமல் பாக்கியசாலிகளாக எண்ணும் வழக்கம் அறியப்படுகின்றது.

வரவுக்கேற்றபடி கவனித்துச் செலவிடும் பொக்கிஷ மந்திரியும் பெண்தான். "தற்கொண்டான், வளத்தக் காள் வாழ்க்கைத் துணை" என்று திருவள்ளுவர் சொல்லுகிறார். இதனால், வரவுக்கு மேற் செலவு செய் பவளை வாழ்க்கைப் பகையென்று நாம் சொல்லிவிடலா மல்லவா? தம் குடும்ப வாழ்க்கைக்கு இன்ன இன்ன பொருள்கள் வேண்டுமென்று கணவர்களுக்கு அறி வுறுத்தி வேண்டியவற்றைப் பெற்று நன்மை உண்டாக்குதல் மகளிர் கடமை.

மகளிர் தம் குழந்தைகளுக்கு முதல் ஆசிரியராக விளங்குகின்றனர். பேசும் பாஷையை முதலில் கற்பிக்கும் கடமை தாய்க்கு உரியது. ஒவ்வொரு வார்த்தை யாகச் சொல்லிச் சொல்லி உலகத்திலுள்ள பொருள்களைக் குழந்தைகளுக்குக் காட்டுவதில் தாய்க்கு உண்டாகும் சந்தோஷம் அளவற்றது; தான் கற்பித்தவைகளை அக் குழந்தைகள் கற்றுக்கொண்டு சொல்வதைக் கேட்பது அதைவிடப் பேரானந்தம் தரும்.

கணவருக்கு யோசனை கூறும் மந்திரியாகவும் மனைவி விளங்குகிறாள்; "விறன்மந்திரி மதி" உடையவள் பெண்ணென்று ஒரு பழைய செய்யுள் கூறு கின்றது. மங்கையர்க்கரசியார் தம் கணவருக்கு ஒரு நன்மந்திரியைப்போல இருந்தனர். குலச்சிறை யென்னும் மந்திரியையும், மங்கையர்க்கரசியாரையும் ஒரே நிலையில் வைத்து ஒட்டக்கூத்தர்,

    "ஒருவரும்பொரு வாததென்ன னிரண்டுகண்களு மொத்தபேர், இருவரும்" (தாழிசை, 177)

என்று தக்கயாகப்பரணியிற் கூறினர்.

தம் கணவருடைய சௌக்கியத்தையும் குழந்தைகளுடைய நலத்தையும் பாதுகாக்கும் வைத்தியர்கள் அவர்களே.

    "தற்காத்துத் தற்கொண்டார் பேணி"

என்பது குறள். தன்னைப் பாதுகாத்துத் தலைவனை யும் பாதுகாத்தல் மனைவியின் வேலை.

அரசியலும் பெண்டிரும் குடித்தனத்தைக் குறைவின்றி நடத்தி வந்த மகளிர் தங்கள் வீட்டுக்கு அரசியராகவே விளங்கினர். சில பெண்கள் ராஜ்யங்களுக்கு அரசிகளாகவும் இருந்தனர். திருவிளையாடற் புராணத்தில் ஸ்ரீ மீனாட்சியம்மை சக்கர வர்த்தினியாக இருந்து அரசாண்ட வரலாறு உள்ளது. மதுரையை யாண்ட ராணி மங்கம்மாளும் சிவகங்கையை ஆண்ட அகிலாண்டேசுவரி நாச்சியாரும் ராஜ்யாதிகாரம் செலுத்தியவர்களே.

பேரரசர்களுடைய தேவியராக இருந்து புகழ் பெற்றவர்கள் பலர். சோழவரசர் முதலியோருடைய மெய்க் கீர்த்திகளின் இறுதியில் இன்னாரோடு வீற்றிருந்தருளிய இன்னாரென்னும் வாக்கியம் அமைந்திருக்கும். பட்டத் தரசியை மாதேவி யென்றும் பெருந்தேவி யென்றும் மாபெருந்தேவி யென்றும் கூறுதல் வழக்கம். பழைய நூல்களில் அரசர்களையும், சிற்றரசர்களையும் பாராட்டும் போது அவர்களுடைய மனைவியரையும் சேர்த்துப் புகழ்வதுண்டு.

வீட்டு நெறி

அறம், பொருள், இன்பமென்னும் மூன்றன் திறத்திலும் பெண்களுடைய சம்பந்தத்தால் நாட்டுக்கு நன்மைகள் உண்டாயின. அப்படியே மோக்ஷத்தை யடையும் முயற்சிகளிலும் பெண்பாலார் சிறப்படைந்திருந்தனர். தொல்காப்பியப் பொருளதிகாரத்தில், தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்திய பின்பு துறவி யாக வாழும் நிலை கூறப்பட்டுள்ளது; இதனை வானப் பிரஸ்தமென்பர்.

சைவ மகளிர்

நாயன்மார்கள் பலர் பக்தி மார்க்கத்தில் தங்க ளுடைய மனைவியருடைய துணையினால் தொண்டுபுரிந்து சிறப்படைந்தனர். சிறுத்தொண்டர் தம் பிள்ளையைக் கறிசமைத்த அருஞ்செயலுக்குத் துணை நின்றவர் அவ ருடைய மனைவியாரே. இளையான்குடிமாற நாயனார், அரிவட்டாய. நாயனார் முதலியோர் தம் மனைவியர் களுடைய துணையை உடன் கொண்டே தம் தொண்டினை நிறைவேற்றினர். திருநீலகண்டரை அவர் மனைவியார், "எம்மைத் தீண்டாதீர்" என்று கூறியதாலேயே அவர் புகழ் உலகிற்கு வெளிப்பட்டது. மங்கையர்க கரசியாருடைய முற்சியினாலேதான் அவருடைய கணவனாகிய பாண்டியன் நன்மை யடைந்தான்; ஞான சம்பந்தருடைய பேராற்றல்களும் வெளிப்பட்டன. 'வம்பறா வரிவண்டு மணநாற மலரும் மதுமலர்க் கொன்றையானடியலாற் பேணா, எம்பிரான் சம்பந்தன்' என்று சிறப்பிக்கப் பெறும் சம்பந்தர் மங்கையர்க்கரசி யரைத் தம் திருப்பதிகத்திற் புகழ்ந்திருக்கின்றார். திலகவதியாருடைய ஈசுவரப் பிரார்த்தனையே ஜைன சமயத்தில் தரும சேன முனிவராக இருந்தவரை நாவுக் கரசராக ஆக்கியது; பரவை நாச்சியாருடைய அன்பே சுந்தரமூர்த்தி நாயனாருக்காகப் பரமசிவனைத் தூது போக்கியது. காரைக்காலம்மையாரும், சுந்தரமூர்த்தி நாயனாருடைய அன்னையாராகிய இசைஞானியாரும் அறுபத்து மூவருட் சேர்த்துப் பூசிக்கப் பெறுகின்றனர். ஒரு பெண், பசுவின் கன்றைக் கட்டும் தறியையே சிவலிங்கமாக எண்ணிப் பூசித்தமையால் கன்றாப் பூரென்னும் தேவாரம்பெற்ற சிவஸ்தலம் உண்டாயிற்று. தாடகையென்னும் ஒரு பெண்ணுக்காக திருப்பனந் தாளிலுள்ள சிவபிரான் வளைந்தருளினார்; அதனால் அக்கோயிலுக்குத் தாடகையீச்சர மென்னும் பெயர் உண் டாயிற்று. பல அரசர்களுடைய தேவியர்களும், தாய்மார் சகோதரிகள் முதலியோரும் ஆலயங்கள் பலவற்றைக் கட்டுவித்திருக்கின்றனர். பல கோயில்கள் அவர்கள் பெயர்களோடு வழங்குகின்றன. திரைலோக்கிய மகாதேவியீச்சரம் முதலியன அத்தகையனவே. முதல் இராஜராஜ சோழனுடைய சகோதரியாகிய குந்தவையார் என்ற ஒருவர் தஞ்சாவூரிலும் சிதம்பரத்திலும் பல தருமங்களைச் செய்திருக்கிறார்.

வைணவ மகளிர்

திருமாலின் அடியார்களாகிய பெண்மக்களில் ஆண்டாள் என்பவர் தலைசிறந்தவர். அவர் ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவராக விளங்குகிறார். ஸ்ரீ இராமா நுஜரை உபசரித்து வழிபட்ட கொங்கு நாட்டுப் பெண்ணாகிய கொங்குப் பிராட்டியாருடைய பரம்பரையினர் இப்பொழுதும் இருக்கிறார்கள். ஸிம்மாஸனாதிபதிகள் எழுபத்து நால்வரில் சில பெண்பாலரும் உண்டு.

பௌத்த மகளிர்

பௌத்த சமயத்தைப் பின்பற்றிய பெயர் பெற்ற மணிமேகலை யென்பவள் ஒரு காவியத்துக்குத் தலைவி யாக விளங்குகிறாள். பௌத்தர்களிற் பெண்களும் துறவு பூண்பதுண்டு. அவர்களைப் பிக்ஷுணிகள் என்பர். தமிழ் நாட்டில் பண்டைக் காலத்தில் பிக்ஷுணிகள் பலர் இருந்தனர்.

ஜைன மகளிர்

ஜைன சந்நியாஸினியாகிய கௌந்தியடிகளென்ற ஒருவருடைய வரலாறு சிலப்பதிகாரத்தில் உள்ளது. ஜைனப் பெண் துறவியர்களிற் கன்னியராகத் துறந்தார், மணம் செய்தபின் துறந்தார், கணவர் இறந்த பின் துறந்தாரென மூவகையினருண்டு; அத் துறவியர் ஜைன மகளிருக்கு உபதேசம் செய்வர். ஜைனசமயக் காப்பியங்களின் முடிவில் யாவரும் துறந்தாரென்ற செய்தி காணப்படும்; பெண்டிரும் துறந்த வரலாற்றை அப்பகுதிகளிற் காணலாம். கந்தியாரென்பவர் அத் தகைய துறவியரில் ஒரு வகையினர்.

வேதாந்தப் பாட்டிகள்

சென்ற நூற்றாண்டுவரையிற் பிராமண குடும்பங்களிலுள்ள முதிய கைம்பெண்கள் சிலர் வேதாந்த நூல்களைக் கற்றுத் தேர்ந்து மகளிருக்குக் கற்பிக்கும் இயல்புடையவராக இருந்தனர். அவர்களை வேதாந்தப் பாட்டிகளென்று அழைப்பது வழக்கம்; வேதாந்தக் கருத்துக்கள் அமைந்த பாடல்களை நூதனமாக அவர்கள் இயற்றி யாவருக்கும் கற்பிப்பதுண்டு. அன்னை பின்னை, ஜீவநாடகம், வேதாந்தக்கும்மி, லாலி, ஓட மென்பன அத்தகையோரால் இயற்றப்பெற்று வாய்ப்பாடமாக வருவனவாகும்.

இங்ஙனம் மதவிஷயங்களிற் சிறப்புற்றிருந்த பெண் பாலார் பலர்.

வாழ்க்கையிற் சுருதி போன்றவர்கள்

பெண்பாலாரைப் பற்றித் தமிழ் நூல்களில் உள்ள செய்திகளெல்லாவற்றையும் தொகுத்து வகைப்படுத்தி னால் ஒவ்வொரு துறையிலும் அவர்கள் தம் ஆற்றலை வெளிப்படுத்திச் சிறப்புற்ற வரலாறுகள் பல தெரிய வரும். அவர்களது பெருமை ஆடவர்களது பெருமை யோடு சேர்ந்தே காணப்படுகின்றது. சங்கீதத்தில் சுருதி எத்தகையதோ அத்தகையதே வாழ்க்கையிற் பெண்களுடைய நிலையும். சுருதி யில்லாமல் சங்கீதம் நடைபெறாது. ஆனால் சங்கீதத்தில் வாத்தியகோஷங்களும் வாய்ப்பாட்டும் வெளிப்படையாகத் தோன்றி எல்லோராலும் போற்றப்படுகின்றன. சுருதியோ அவ் வளவு பெருமைக்கும் ஆதாரமாகி நின்றும் புலப்படாமல் இருக்கிறது. பெண்களும் எல்லாவற்றையும் கடமையாகச் செய்து பிறர் புகழுக்கு அஸ்திவாரமாக இருந்து அடங்கிச் சுருதியைப்போலக் கலந்து நிற்கின்றனர்.
---------------

14. * ராஜவைத்தியம்


* ஆனந்த விகடன், 31-1-37.

சோழநாட்டில் உள்ளதோர் ஊரிற் பல வருஷங் களுக்கு முன் வேளாளப் பிரபு ஒருவர் இருந்தார். அவர் பரம்பரைச் செல்வர். பற்பல கிராமங்கள் அவருக்குச் சொந்தமாக இருந்தன. அப்போது இருந்த பெரிய மிராசுதார்களுள் அவர் ஒருவராவர். நல்ல செல்வாக்கும் மதிப்பும் அவருக்கு உண்டு.

செல்வர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் தேகப் பயிற்சி செய்வதில்லை. தம்முடைய கைகால்களாற் செய்துகொள்ள வேண்டிய காரியங்களைப் பிறராற் செய்வித்துக் கொள்வதைப் பெரிய கௌரவமாகச் சில செல்வர்கள் நினைக்கிறார்கள். அதனால் அவர்கள் தேகம் பருத்துவிடுகிறது. 'கனவான்' என்ற பெயருக்கு இரண்டு விதமான பொருள் கொள்ளும்படி அவர்கள் ஆகிவிடுகிறார்கள். மிகப் பெரிய தொந்தி அவர்களுக்கு உண்டாகிறது. அங்ஙனம் தொந்தி போடுவதைக் கௌரவமாகவும் எண்ணுகிறார்கள். இந்த இரகசியத்தை யறிந்த குடுகுடுப்பைக்காரன்கூட, "ஐயாவுக்குத் தொந்தி போடப் போகிறது, தொந்தி போடப் போகி றது!" என்று சொல்லிப் பொது ஜனங்களை ஏமாற்று கிறான். "ஐயாவுக்கு மூக்கு நீளப்போகிறது" என்றால் நமக்கு எவ்வளவு கோபம் வரும்! தொந்தி போடுவதும் அநாவசியமாக நம்முடைய தேகத்தின் ஒரு பாகம் வளர் வதுதானென்பதை மட்டும் நாம் மறந்துவிடுகிறோம்.

முற்கூறிய பிரபுவுக்கும் தொந்தி யிருந்த தென்று சொல்வது மிகை. அவருடைய செல்வத்துக்குத் தக்கபடி அந்தத் தொந்தி கூடியவரை பெரிதாகவே இருந்தது. பல மடிப்புகள் அதில் இருந்தன. அவர் கீழே உட்கார்ந் தால் கால்களை அந்தத் தொந்தி மறைத்துவிடும்.

இந்த நிலையிலிருந்த அவருடைய கைகளும் கால் களும் அழகுக்காக இருந்தனவே ஒழிய உபயோகப் படுவதற்காக அல்ல வென்றே தோன்றின. அவர் ஸ்நானம் செய்யும்பொழுதும் சாப்பிடும்பொழுதும் மற்றச் சமயங்களிலும் சில வேலைக்காரர் இருந்து உடம்பைத் தேய்ப்பது, துடைப்பது, ஆகாரம் கொடுப்பது முதலிய வேலைகளைச் செய்து வந்தார்கள். உடையணிவதற்கும் பிறருடைய கைகளே அவருக்கு ஊழியம் செய்தன. அவ்வளவும் அவரது கௌரவத்தைப் புலப் படுத்தின.

அப்பிரபுவைப் பார்க்கும்பொருட்டு அடிக்கடி பலர் வந்து செல்வார்கள். அங்ஙனம் வருபவர்கள் எலுமிச்சம் பழம், வேறு பழங்கள், கற்கண்டு முதலியவற்றைக் கையுறையாகக் கொணர்ந்து அவரைப் பார்த்துப் பேசித் தங்களுக்கு ஆகவேண்டியவற்றை முடித்துக்கொண்டு போவார்கள்.

அவருடைய வீட்டில் அவருக்கு உபசாரம் செய்வதற்கெனவே மேலே சொன்னபடி சில வேலைக்காரர்கள் தனியே இருந்தனர். அநேகமாக அவருக்கு அருகில் ஒருவன் இருந்து அவருடைய கை, கால், தோள் முதலிய வற்றைப் பிடித்துக் கொண்டே யிருப்பான்.

ஒரு நாள் அவரது தொந்தியின் மடிப்புக்களுள் ஒன்றிலிருந்து ஏதோ கெட்ட நீர் கசிந்தது. அதை அருகிலிருந்தவன் கவனித்தான்; மிக்க துர்நாற்றம் வீசியது. பிரபு அவனை நோக்கினார். "சீயாக இருக்கு மோ?" என்றான். பிரபுவுக்குப் பயம் உண்டாயிற்று. தம் வயிற்றில் ஏதோ சிலந்தி தோன்றி யிருத்தலால் துர்நீர் வெளிப்படுவதாக எண்ணினார். உள்ளே வலியிருப்பதாகவும் தோற்றியது.

கனவானென்றால் கேட்கவேண்டுமா! அவருடைய குடும்ப வைத்தியர்கள் பலர் வந்து கூடினார்கள்; அந்தத் தொந்தியின் மடிப்பை விலக்கிப் பார்க்க ஒருவரும் துணியவில்லை. அவ்வளவு சுலபமாக விலக்கிப் பார்க்கும் நிலையிலும் தொந்தி இல்லை. ஒருவர் அதனைத் தொட ஆரம்பித்தார்; பிரபு வேண்டாம் வேண்டாமென்று தடுத்தார். ஒற்றடங் கொடுத்துப் பார்த்தார்கள்; குணம் தெரியவில்லை. உள்ளே யிருக்கும் புண்ணை ஆற்று வதற்கு வழி என்னவென்று ஆலோசித்தார்கள்; ஒன்றும் தோற்றவில்லை.

ஊர் முழுவதும் இதுவே பேச்சாக இருந்தது; "பல நாளாக இருந்த கட்டி இப்போது உடைந்து போயிருக்க வேண்டும்; இப்படியே விட்டு வைத்தால் ரணம் பெரி தாகிவிடும்" என்று சிலர் கூறினர். "மெதுவாக அந்த மடிப்பைச் சிறிது விலக்கி மருந்தைச் செலுத்திப் பார்க்க லாம்" என்று வேறு சிலர் சொல்ல அப்படியே செய்து பார்த்தார்கள். மடிப்பின் அடியைக் காணமுடிய வில்லை. ஆதலின், மேலாக சிறிது விலக்கி ஏதோ மருந்தை விட்டனர். துர்நீர் வருவது நிற்கவே யில்லை.

பிரபுவுக்கோ நிமிஷத்துக்கு நிமிஷம் கவலை அதிகரித்தது. சஸ்திர சிகிச்சை (operation) செய்யும்படி நேருமோ என்ற திகில் உண்டாயிற்று. படுத்த படுக்கையில் அவர் இருந்தார். அவருக்கும் அவரைச் சார்ந்தோருக்கும் கவலை அதிகமாயிற்று.

இப்படி இருக்கையில் அவருடனிருந்து உடம்பைப் பிடித்துவிடும் ஊழியக்காரன் வேறு ஒருவரும் இல்லாத போது பிரபுவைப் பார்த்து, "எஜமானவர்கள் ஒரு சமாசாரம் கேட்கவேண்டும். எனக்குத் தெரிந்த வைத்தியர் ஒருவர் பக்கத்து ஊரில் இருக்கிறார். அவர் எந்த வியாதியையும் நோயாளிக்கு வருத்தமில்லாமல் போக்கிவிடுவார். ரணங்களையும், சிலந்திகளையும் அதி சீக்கிரத்தில் ஆற்றிவிடுவார். உத்தரவானால் அவரை அழைத்து வருகிறேன்" என்றான். அவனிடத்தில் பிரபுவுக்கு நம்பிக்கையுண்டு; எப்படியாவது வியாதி தீரவேண்டுமென்ற கவலையுமிருந்ததால் அவர், "சரி; அழைத்துக்கொண்டு வா" என்று உடனே உத்தர விட்டார்.

அன்றே அவன் அயலூருக்குச் சென்று அங்குள்ள ஒரு வைத்தியரைக் கண்டு அவரைத் தனியே அழைத்து, "நமக்கு அதிர்ஷ்ட காலம் வந்திருக்கிறது. எங்கள் எஜமானனுக்கு வயிற்றில் ஒரு சிலந்தி உண்டாகித் துர்நீர் வருகிறது. அதை எந்த வைத்தியராலும் போக்க முடியாது. அதில் ஓர் இரகசியம் இருக்கிறது. அதை உமக்கு அப்பால் தெரிவிக்கிறேன். நான் அதைப் போக்கி விடுகிறேன். நீர் பேருக்கு மாத்திரம் பக்கத்தில் இரும். ஆனாலும், நீரே வைத்தியம் செய்வதாக நான் சொல்லி விடுகிறேன். நான் சொல்லுகிறபடி செய்யும். நல்ல வருமான கிடைக்கும்; ஆளுக்குப் பாதி எடுத்துக் கொள்ளலாம்" என்றான். இன்ன இன்ன காரியங்களைச் செய்ய வேண்டுமென்றும் கூறினான். வைத்தியர் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டார். வலிய வரும் லாபத்தை வேண்டாமென்பவர் யார்?

புது வைத்தியர் உபசாரத்தோடு வரவேற்கப் பட்டார். அவர் பிரபுவை ஏற இறங்கப் பார்த்தார்; வயிற்றி லிருந்து வந்த நீரையும் கவனித்தார்; "இதை இன்னும் இரண்டு மூன்று நாளில் சௌக்கியப்படுத்தி விடுகிறேன். இவர்களைச் சுற்றி அதிகமாக ஜனங்கள் பழகாமல் இருப் ப்து நலம்" என்றார். அவ்வளவு தைரியமாக ஒரு வைத்தியனும் அதுவரையிற் கூறவில்லை. ஆதலின் அவ ருடைய யோசனையின்படியே யாவரும் செய்யலானார்கள்.

பிரபு நல்ல விருந்துணவை உண்டார். நன்றாகத் தூக்கம் வருவதற்குரிய மருந்தொன்று அவருக்குக் கொடுக்கப்பட்டது. உடம்பைப் பிடித்து விடுகிறவனைத் தவிர வேறு யாரும் அவர் அருகில் இருக்கக்கூடாதென்று வைத்தியர் கண்டிப்பாகச் சொன்னார்.

தனியறையில் சுகமான படுக்கையில் பிரபு தூங்கத் தொடங்கினார்; நன்றாகக் குறட்டைவிட்டுத் தூங்கினார். வைத்தியர் பலவகையான மருந்துகளை வேறு வேறு பாத்திரங்களில் சித்தமாகச் சுற்றிலும் வைத்திருந்தார். எத்தனையோ மூலிகைகளின் சாறுகள் தனித்தனியே அவருடைய விருப்பத்தின்படி பிழிந்து வைக்கப்பட்டன.

பின்பு நன்றாகத் தூங்குகிறாரென்று வைத்தியருக்கும் அவரை யழைத்துவந்த வேலைக்காரனுக்கும் தெரிந்தது. வேலைக்காரன் வைத்தியருடைய உதவியினால் பிரபு வினுடைய தொந்தி மடிப்பை நன்றாக அடிவரையில் விலக்கினான். பிறகு அதிற் கையை இட்டு அங்குள்ள சேறு போன்ற பொருளை எடுத்துப் பக்கத்திலிருந்த தாம்பாளத்திற் போட்டான். அப்பால் அருகில் இருந்த வெந்நீரில் துணியை நனைத்துச் சுத்தமாக அவ்விடத்தைத் துடைத்தான். அங்கே புண் ஒன்றும் இல்லை. கையை யெடுத்தபின் பழையபடியே மடிப்பு சேர்ந்து விட்டது.

வைத்தியருக்கோ அவன் செய்கைகளெல்லாம் ஆச்சரியத்தை விளைவித்தன. அவர் ஒன்றும் பேசாமல் எல்லாவற்றையும் கவனித்து வந்தார்.

பிரபு தூக்கம் கலைந்து எழுந்தார்; "என்ன வைத்தியரே! ஏதாவது மருந்து போடுகிறீர்களா?" என்று கேட்டார்.

"எல்லாம் ஆகிவிட்டது. பிரபு அவர்களுக்குத் துன்பத்தை உண்டாக்கிய வஸ்து இதோ இந்தத் தாம்பாளத்தில் இருக்கிறது" என்று சொல்லி வைத்தியர் காட்டினார்.

"ஆ! ஆகிவிட்டதா!" என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே அந்தத் தாம்பாளத்தைப் பார்த்தார் பிரபு.

"ஆமாம்! ராஜ வைத்திய மென்பது நோயாளிக்குத் தெரியாமல் சிகிச்சை செய்வது. அதை இவரையல்லாமல் இந்தப் பக்கத்தில் வேறு யாரும் அறியார்" என்று வேலைக்காரன் சொன்னான்.

"வேண்டிய மருந்துகளைத் தடவி விட்டேன். இனிமேல் பிரபு அவர்கள் கவலையடைய வேண்டாம். இனி மருந்து அவசியமில்லை. வழக்கப்படியே சௌக் கியமாக இருக்கலாம்" என்றார் வைத்தியர். சில நாள் பிரபுவுடன் அவர் இருந்து கவனித்துவந்தார்.

வைத்தியருக்கு மிக உயர்ந்த ஸம்மானங்களும் பெருந்தொகையும் வழங்கப்பட்டன.

வேலைக்காரனுக்குரிய பங்கை வைத்தியர் கொடுக்க எண்ணினார்; அவனைத் தனியே அழைத்து ஒருவருக்கும் தெரியாமல் இரகசியமாகக் கொடுக்கும்போது, "என்னப்பா! பெரிய மந்திரவாதியாக இருக்கிறாய்! இந்த விஷயங்களில் ஒன்றும் எனக்கு விளங்கவில்லையே" என்றார்.

வேலைக்காரன், "நான் சொல்லுகிறேன் கேளும்; எஜமானை ஒருநாள் யாரோ ஒருவர் பெரிய எலுமிச்சம் பழங்கள் இரண்டுடன் வந்து பார்த்தார். அவற்றில் ஒன்றை யெடுத்து எஜமான் தொந்தியின்மேல் தடவிக் கொண்டும் உருட்டிக்கொண்டும் இருந்தார். அது மெல்ல மடிப்புக்குள் புகுந்தது. பேச்சு ஸ்வாரஸ்யத்தில் எஜமானுக்கு அது தெரியவில்லை. நான்மட்டும் கவனித்தேன். அந்தப் பழம் உள்ளே போய் அழுகி உடைந்து விட்டது. அதைத் தெரிந்து எடுப்பவர் ஒருவரும் இல்லை. அதிலிருந்து வந்த ஜலந்தான் இவ்வளவு தூரம் பிரமாதப்படுத்தி விட்டது. உள்ளே புண்ணொன்றும் இல்லையென்பதும், அந்த எலுமிச்சம் பழம் செய்த வேலை யென்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். இந்தச் சமயத்தில் ஒரு தந்திரம் செய்தால் நல்ல லாபம் பெறல்லமென்றே உம்மைக் கூட்டிக் கொண்டு வந்தேன் என்றான்.

பிரபுவின் தொந்திக்கு வந்த சிலந்தியை நீக்கினாரென்ற புகழ் அந்த வைத்தியருக்கு உண்டாயிற்று. அவருக்குப் பலருடைய நன்மதிப்பும் பலவகையான லாபங்களும் கிடைத்து வந்தன.



இந்நூலாசிரியர் இயற்றியுள்ள வசன நூல்கள்

1. புத்த சரித்திரம், பௌத்த தரமம், பௌத்த சங்கம்
2. மணிமேகலைக் கதைச் சுருக்கம்
3. உதயணன் சரித்திரச் சுருக்கம்
4. ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் (2 பாகங்கள்)
5. வித்துவான் தியகராச செட்டியார்
6. கனம் கிருஷ்ணையர்
7. கோபாலகிருஷ்ண பாரதியார்
8. மகா வைத்தியநாதையர்
9. நான் கண்டதும் கேட்டதும்
10. புதியதும் பழையதும்
11. நல்லுரைக் கோவை - 4 பாகங்கள்
12. நினைவு மஞ்சரி - 2 பாகங்கள்
13. திருவள்ளுவரும் திருக்குறளும்
14. "என் சரித்திரம்" - (டாக்டர் ஐயரவர்கள் சுயசரிதை)
15. சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்
----------------------------------------------
கிடைக்குமிடம்:-
"தியாகராஜ விலாசம்"
53, பிள்ளையார் கோவில் தெரு திருவேட்டீசுவரன்பேட்டை
திருவல்லிக்கேணி, சென்னை - 5
-----------------------------------------------------------

This file was last updated on 12 Jan. 2014.
Feel free to Webmaster.